தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 3

பெண்பிள்ளை ரகசியம் - 3

பெண்பிள்ளை ரகசியம் - 3


ADDED : ஜன 28, 2026 12:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 12:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகமொழிந்து விட்டேனோ விதுரரை போலே!

கிருஷ்ணவேணியும் தேவாமிர்தமும் குறித்த நேரத்தில் நடை பயிற்சியை தொடங்கினர்.

''என்ன அமிர்தம்மா... திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தின் இரண்டாம் வாக்கியத்தை பார்க்கலாமா'' எனக் கேட்டார் கிருஷ்ணவேணி.

''ஓ... பேஷா” என்றார் அவர்.

''மகாபாரதத்தில் திருதிராஷ்டிர மன்னரின் தம்பியான விதுரர் பெரிய அறிவாளி. எது சரி எது தப்புன்னு நல்லது கெட்டது தெரிந்தவர். கண்ணன் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். ஆனால் துரியோதனனின் சபையில் முக்கிய மந்திரி. கவுரவர்களிடம் சூதாடிய பாண்டவர்கள் தங்களின் நாட்டையே இழந்தனர். 12 வருடம் காட்டில் இருந்து விட்டு மீண்டும் நாட்டை கேட்டபோது துரியோதனன் தர மறுத்தான். சமாதானத்தை விரும்பி கண்ணனை துாதனுப்பினர். கண்ணனும் அஸ்தினாபுரத்திற்கு துாதராக வருவதை அறிந்த அனைவரும் வரவேற்க பல ஏற்பாடுகளை செய்தனர்.

திருதிராஷ்டிரன் பொன் தேர், ரத்தினங்களை பரிசாக தர ஏற்பாடு செய்தான். அப்போது விதுரர், இதைக் கண்டு கண்ணன் மயங்க மாட்டார் என அறிவுரை சொல்லியும் அவர் கேட்கவில்லை. துரியோதனனோ விதவிதமான உணவுகளுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணன் நேராக திருதராஷ்டிரன் அரண்மனைக்குச் சென்று வணங்கினார். பின்னர் துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே துரியோதனன் விருந்துக்குக் கூப்பிட்டாலும், அதை மறுத்து விட்டு புறப்பட்டார். அப்போது துரியோதனன், பீஷ்மர் துரோணர் ஆகியோர், 'கண்ணா... உனக்கு ரத்தினத்தால் ஆன மாளிகையை வேண்டுமானாலும் ஏற்பாடு செய்கிறோம். நீ அங்கு தங்க வேண்டும்' என்றனர். 'உங்களுடைய தங்க மாளிகையை விட எனக்கு விதுரரின் இல்லமே சுகமானது' என அவருடன் புறப்பட்டார்.

'கண்ணா இந்த சிறியவன் வீட்டையா தேடி வந்தாய்' என மகிழ்ந்தார் விதுரர். விதுரரே வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். ''உனக்குக் கொடுக்க என்னிடம் இந்த பரபரப்பும், படபடப்பும் தான் இருக்கிறது. நான் என்ன செய்வது எனச் சொன்ன போது அருகில் இருந்த வாழைப்பழங்கள் கண்ணில் பட்டன. அதனை எடுத்து அன்பு, பக்தியுடன் கொடுத்தார்.

கண்ணன் தன் வீட்டுக்கு வந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. அதனால் வாழைப்பழத்தை ஒவ்வொன்றாக உரித்து அதன் தோலை குப்பையில் போடுவதற்கு பதிலாக பழங்களை குப்பையில் போட்டு தோலை பழம் என நினைத்து கண்ணனிடம் கொடுத்தார். 'ஆஹா, என்ன சுவை என்ன சுவை' என கண்ணன் தோலை சாப்பிட ஆரம்பித்தார். இப்படியே சில வாழைப்பழத் தோல்கள் கண்ணனின் வயிற்றுக்குள் சென்றன.

இதை பார்த்த விதுரரின் மனைவி சுதாரித்துக் கொண்டு, 'அட இப்படியா உபசாரம் செய்வது' என விதுரரின் தவறை சுட்டிக் காட்ட பரபரப்பு மேலும் அதிகமாகியது. கண்ணனுக்கு பழங்களைக் கொடுக்க, 'அடடா எனக்கு நீ முன்பு கொடுத்த தோலே ருசியாக இருந்ததே' என்றார் கண்ணன். உண்மை என்னவெனில் விதுரர் தன் உள்ளத்தை சுத்தமாக்கி கண்ணன் தங்க இடம் கொடுத்தார். அதனால்தான் துாய மனதுடன் எதைக் கொடுத்தாலும் கடவுள் ஏற்பார் என்கிறார்கள்.

இந்த உண்மையை உணர்ந்த திருக்கோளூர் பெண்பிள்ளை, 'நான் விதுரரை போலே என் அகம் ஒழித்து விடவில்லையே' என ஏங்கினாள். அதனால் திருக்கோளூரை விட்டு சென்று விடுவதே மேல் என ராமாஜனுரிடம் தெரிவித்தாள்” என முடித்தார் கிருஷ்ணவேணி.

ஆஹா! விதுரரின் மனம் தான் எவ்வளவு துாய்மையானது என சிலிர்த்த அமிர்தம், ''துாய மனதுடன் கடவுளை நினைத்தால் அவர் நம்மை நோக்கி வருவார்'' என்பது சைவ சமயத்திற்கும் உரியது தான். அப்படி இல்லாமல் நம் அகத்தில் அகந்தை புகுந்தால் என்னவாகும்? பிரம்மனுக்கு சிவன் அளித்த சாபம் தான் நினைவுக்கு வருகிறது” என்றார்.

“அதென்ன சாபம்” கேட்டார் வேணி.

“படைப்புத் தலைவனான பிரம்மாவை நான்கு தலைகளுடன் தான் எங்கும் பார்க்க முடியும். இந்த நான்கு தலைகள் நான்கு வேதங்களை, நான்கு திசைகளையும் குறிக்கும். ஆனால் புராணங்களின் படி பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அந்த ஐந்தாவது தலை அகந்தையின் சின்னமாகவும் இருந்தது.

ஒரு சமயம் பார்வதி, சிவனின் திருமணத்திற்கு புரோகிதராக வந்தார் பிரம்மா. சிவசக்தி தம்பதி புரோகிதருக்கான தட்சணையை நான்கு திசையிலும் இருந்து ஒவ்வொரு தலையின் முன்னும் அளித்தனர். அவர்களிடம், 'என் ஐந்தாவது தலைக்கு எங்கிருந்து தட்சணை தரப் போகிறீர்கள்' என அகந்தையுடன் பிரம்மா கேட்க சிவபெருமானுக்கு பிடிக்காமல் போனது.

'புரோகிதம் வாசித்த எனக்கு சொன்னபடி தட்சணை தராத நீர் முதல் கடவுளாக எப்படி இருக்க முடியும்' எனக் கேட்டார் பிரம்மா. ஆணவத்தின் உச்சத்தில் பிரம்மா இப்படி கேட்டதால் கோபம் கொண்ட சிவன், 'வேதங்களை கற்ற ஆணவத்தில் பேசிய இந்த தலை இனி புரோகிதம் செய்ய தகுதியற்றது' எனச் சொல்லி அந்த தலையை கொய்து விட்டார்.

இதன் பின் பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டுமே இருந்தன என்பது புராண வரலாறு. அகந்தையின் வெளிப்பாட்டை தடுத்து பணிவை அனைவருக்கும் கற்றுத்தர காலம் காலமாக இந்த ஆன்மிகக் கதை எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அகந்தையுடன் கூடிய அறிவு எப்போதும் ஆபத்தானது”

''நம் மனம் அகந்தையோடு இருந்தால் இப்படிப்பட்ட பிரச்னை எல்லா காலத்திலும் வரும். இதைத் தான் 'ஈகோ' என்கிறோம். இது மட்டுமில்ல, பிரம்மா தேவையில்லாம பொய் பேசியும் சிவனிடம் மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாங்களே மேலானவர்கள் என வாதாடி ஒருவருடன் ஒருவர் பலமாக மோதிக் கொண்டனர். அவர்களின் மோதலை முடிவுக்கு கொண்டு வர சிவன் ஒரு திட்டம் தீட்டினார். வானத்தை தொடும் அளவுக்கு நெருப்புத் துாணாக மாறி நின்று, 'என் அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரே சிறந்தவர்' என தெரிவித்தார். மகாவிஷ்ணு வராக வடிவத்தை எடுத்துக்கொண்டு துாணின் அடியை தேடச் சென்றார். பிரம்மாவோ அன்னப் பறவையாக மாறி அதன் உச்சியைத் தேடி மேலே பறந்தார்.

மகாவிஷ்ணு தன் தேடலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மா பொய்க்கதை ஒன்றை கூறினார். தான் உச்சியை கண்டுவிட்டதற்கு, சிவன் தலைமுடியின் மேலிருந்த தாழம்பூவே சாட்சி என்றார். தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. சிவன் அந்த பொய்யை தாங்க முடியாமல் பிரம்மாவை சபித்தார். இனி உனக்கு பூமியில் கோயில் இல்லாமல் போகும். அது மட்டுமல்ல பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை யாரும் பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றார்.

''அடக்கடவுளே! அதனாலதான் தாழம்பூவ பூஜைக்கு பயன்படுத்துறது இல்லையா...”

''ஆமா, எவ்வளவு தான் அறிவும் சக்தியும் இருந்தாலும் ஒருவருக்கு அகந்தை வரும் போது அது பிரச்னை உண்டாகும். இன்னொன்னு பொய் முதலில் நன்மை தருவதாக தோன்றினாலும் கடைசியில் அது தண்டனையைத் தரும்.அதனாலதான் நம் முன்னோர்கள் நமக்கு நிறைய ஆன்மிக கதைகளை சொல்லிட்டு போனாங்க. இதன் மூலம் வாழ்விற்கு நேர்மை, பணிவு, சத்தியம் போன்றவை முக்கியம் என்பதை உணர்த்தும். அதுமட்டுமல்ல அகந்தை இல்லாமல் மனம் துாய்மையாக இருக்க உதவும். ஆன்மிகம் என்றும் நல்ல நெறிகளை கற்றுத் தருது”

''சரியா சொன்னீங்க. நாளைக்கு திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தோட மூன்றாம் வாக்கியத்தை பார்ப்போம்'' எனச் சொல்லியபடி அப்பார்ட்மெண்ட் இல்லத்தை நோக்கி லிப்ட்டில் பறந்தனர் இருவரும்.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us