ADDED : மார் 19, 2026 01:45 PM

சனி பகவான் - நீலிமா, மாந்தா திருமணம்
-சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாத உஷாதேவி, சூரியனிடம் இருந்து பிரிந்து செல்ல நினைத்த போது, தன்னைப் போன்ற ஒரு பெண்ணைத் தோற்றுவித்தார்.
அவளுக்கு சாயாதேவி என பெயரிட்டுத் தன் கணவன், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தவம் செய்யச் சென்றாள். சூரியன் - சாயாதேவி தம்பதிக்கு சிருதச்ரவஸ், ச்ருதகர்மா எனும் இரண்டு மகன்களும், தபதீ எனும் மகளும் பிறந்தனர். ச்ருதகர்மா அடர்ந்த கருப்பு நிறத்தில் இருந்தார். அவரது செயல்கள் அனைத்தும் சூரியனுக்கு எதிராக இருந்தன. அதனால் சூரியனுக்கும் சிருதகர்மாவுக்கும் இடையே பகை ஏற்பட்டது.
சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டிருந்த ச்ருதகர்மா, தானும் சிவனைப் போல சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என நினைத்தார். தன்னுடைய தாய் சாயா தேவியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து, அவருடைய அனுமதியுடன் காசிக்குச் சென்று, சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்து கடும் தவம் செய்தார்.
அதைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் காட்சியளித்தார். அப்போது சிவபெருமான் அவரிடம், “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு ச்ருதகர்மா, ''என் தந்தை சூரியதேவனை விட எனக்கு அதிக பலத்தைத் தர வேண்டும்” என வேண்டினார். சிவபெருமானும் அப்படியே தந்தார்.
அப்போது ச்ருதகர்மா, “எனக்கு இந்த வரம் மட்டும் போதாது, என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்களை விட உயர்ந்த ஈஸ்வர நிலையைத் தந்தருள வேண்டும்” என வேண்டினார்.
அதனைக் கேட்ட சிவபெருமான், “ச்ருதகர்மா...கிரகங்களில் சனிக்கிரகமாக நீ செயல்படுவாய். இதன் மூலம் பூமியில் மனிதர்களின் நவக்கிரக வழிபாட்டில் உனக்கும் இடம் கிடைக்கும். உன்னுடைய தவச்செயலால், ஈஸ்வர நிலையை அடைய முடியாது. உனது சிறப்புச் செயல்பாடுகளால் மட்டுமே ஈஸ்வர நிலையை அடைய முடியும். வேறு ஏதாவது கேள்” என்றார்.
அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அவன்,“நீதியும், நேர்மையும் என் கண்களாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களில் நான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும். என் பார்வை பட்டாலே, மற்றக் கிரகங்கள் பலத்தை இழக்க வேண்டும்” என மேலும் ஒரு வரத்தைக் கேட்டார். அவர் கேட்ட கூடுதல் வரத்தையும் சிவபெருமான் கொடுத்தார். சிவபெருமானிடம் வரம் பெற்ற சனி பகவான், தன்னைப் பெற்ற தாய் சாயாதேவியைச் சந்தித்து, சிவபெருமான் அளித்த வரங்களைப் பற்றிச் சொன்னார். அதனைக் கேட்டு, அவரது தாய் சாயாதேவி மகிழ்ச்சியடைந்தார்.
சனி பகவான் நவக்கிரகங்களில் ஒருவராக, காகத்தை வாகனமாகக் கொண்டு வானில் பயணிக்கத் தொடங்கினார். அவரது கைகளில் வில், இரண்டு அம்புகள், வாள், திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இருந்தன. பரசுராமரைப் போல கோடரியை எடுத்துக் கொண்டு சென்றார்.
அப்போது அந்த வழியே சிவபெருமானின் அருட்சக்தியில் இருந்து உருவான நீலக்கல்லின் தெய்வமான நீலிமா வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த சனிபகவான், அவள் மீது ஆசை கொண்டார். ஆனால் அதைச் சொல்லத் துணிவின்றி அமைதியாக இருந்தார்.
சனீஸ்வரன் தன்னையே பார்த்திருப்பதை அறிந்த நீலிமா, “என்னை எதற்காக இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டாள். சனி பகவான் அமைதியாக இருந்தார். அதனால் கோபமடைந்த அவள், “நான் சிவபெருமானின் அருட்சக்தியில் இருந்து தோன்றியவள், சிவபெருமானின் வலிமையைக் கொண்டவள். என்னால் எதையும் செய்ய முடியும்” என்றாள்.
தான் போற்றும் சிவபெருமானின் சக்திகளிலிருந்து தோன்றியவள் அவள் என்பதையறிந்த பின்பு, அவருக்கு அவள் மேலான ஆசையும் அதிகமானது. ஆனால், அவரால் தன் ஆசையை அவரிடம் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்த்தபடியே இருந்தார்.
அதனால் கோபமடைந்த நீலிமா, “நான் எது கேட்டாலும் பதில் சொல்லாமல், என்னை ஏன் இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேச இயலாதவரா?” என்று கேட்டாள். அதற்கும் அவர் பதில் சொல்லாமல், அவளைப் பார்த்தபடியே இருந்தார். தான் சொன்னதைக் கேட்டுத் தன்னுடன் சண்டையிடாமல் அமைதியாக இருந்த சனிபகவான் மீது அவளுக்கு இரக்கமும், அன்பும் ஏற்பட்டது.
ஒருவருக்கு ஒருவர் அன்பு பரிமாற்றம் ஆனது. திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன் பிறகு இரு குடும்பத்தினரும் முடிவு செய்த நன்னாளில் சனிபகவான், நீலிமா திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்பு, சனிபகவானுக்கு கூடுதல் சக்தியை வழங்கினார் நீலிமா. மனைவியிடமிருந்து தேவையான சக்தியைப் பெற்ற சனீஸ்வரன், மனைவியை சிறப்பிக்கும் விதத்தில் தன் வழிபாட்டு மந்திரத்தில் நீலிமாவின் பெயரைச் சேர்த்து பெருமைப்படுத்தினார்.
இந்நிலையில் கந்தர்வ உலகின் அரசனாக இருந்த சித்ரரதன் - திவ்யங்காவின் மகள் மாந்தா. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மீது பக்தி கொண்ட மாந்தா எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்து கந்தர்வ நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தாள். இந்நிலையில் சனி பகவானைத் திருமணம் செய்ய விரும்பி தந்தையிடம் தெரிவித்தாள்.
சனி பகவானின் தந்தையான சூரியதேவனைச் சந்தித்த சித்ரரதன், தன் மகளின் விருப்பத்தைத் தெரிவித்தார். மாந்தாவை திருமணம் செய்ய விருப்பமா? என சூரியன் கேட்க சனீஸ்வரனும் சம்மதித்தார். ஒரு நன்னாளில், சனி பகவான், மாந்தா திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்பும், சனிபகவான் சிவபெருமானின் நினைவிலேயே இருந்தார். இதனால் மாந்தாவிற்குக் குழந்தைப்பேறு இல்லாமல் போனது.
ஒரு நாள் மாந்தா, தியானத்திலிருந்த சனிபகவானிடம் தனக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். தியானத்தில் இருந்த சனிபகவான் அவளின் வேண்டுதலைக் கவனிக்கவில்லை. கோபமடைந்த மாந்தா, “ என்னைப் பார்க்காமல் புறக்கணித்த நீங்கள், இனி நேராக எவரையும் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் அவர்கள் அழிந்து போகட்டும்” என சபித்தாள்.
சிறிது நேரத்தில் அவள் கோபம் மறைந்தது. ஆனால் அவள் சனிபகவானுக்குக் கொடுத்தச் சாபத்தை போக்க முடியவில்லை. இதன்பின் சனிபகவான் எப்போதும் கீழ் நோக்கி இருக்கும்படி ஆனது. பூமியில் வாழும் மனிதர்கள் மீது சனியின் கீழ் நோக்கியப் பார்வை படும் போது அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. சனி பகவானின் முதல் மனைவி நீலிமா வழங்கிய சக்தியின் மூலம் சனீஸ்வரன் நன்மை அளித்தாலும், இரண்டாவது மனைவி மாந்தா அளித்த சாபத்தின் மூலம் அவரது பார்வையில் படுபவர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். சனிபகவானால் கிடைக்கும் நன்மை பெருகவும், துன்பம் தீரவும் சனிபகவானுடன் நீலிமா, மாந்தா இருவரையும் சேர்த்து வழிபடுவோம்.
-திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
