தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 9

பெண்பிள்ளை ரகசியம் - 9

பெண்பிள்ளை ரகசியம் - 9


ADDED : மார் 19, 2026 01:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 01:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கத்திரபந்து போலே...

கிருஷ்ணவேணியை பார்த்ததும் சிரித்த அமிர்தம், “சரி வாங்க நடப்போம். அடுத்த ரகசியம் மூன்றெழுத்து சொன்னேனோ கத்திரபந்துவை போலே தானே?”

“ஆமா, ராமானுஜரை பார்த்து ஒன்பதாவது வாக்கியமா திருக்கோளூர் பெண் பிள்ளை இந்த வாக்கியத்தை சொன்னதும் ராமானுஜரும் அவரது சீடர்களும் கதையை கேட்க ஆவலாக பெண் பிள்ளையை எதிர் நோக்கினார். அவளும் சொல்லத் தொடங்கினாள்.

சூரியவம்சத்தில் புகழ் பெற்ற மன்னர்கள் இருந்தனர். அதில் ஒருவன் தான் இந்த கத்திரபந்து. முரடனான இவனுடைய தந்தையின் பெயர் விச்வரதன். தந்தை மன்னராக ஆட்சி செய்த காலத்தில் கத்திரபந்து, தீய செயல்களில் ஈடுபட்டான். அவனுடைய இம்சை பொறுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். அவனது கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே, தன் மகன் என்றும் பாராமல் கத்திரபந்துவை நாடு கடத்தினான்.

நாடு கடத்தப்பட்ட கத்திரபந்து அடர்ந்த காட்டில் தங்கினான். அந்த காட்டுப் பகுதியையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான். கத்திரபந்து காட்டுக்குள் இருப்பதை தெரிந்தவர்கள் அந்த காட்டுக்குள் நுழையவே பயந்தனர். தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை.

அந்த காட்டுக்கு பக்கத்தில் முனிவர் ஒருவர் நெடுங்காலமாக தவமிருந்தார். வயதானதால் முதுமை மிகவும் வாட்டியது. அவர் ஒருநாள் வழி தவறி கத்திரபந்துவின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டுக்குள் வந்துவிட்டார். தனக்கு முன்பு யார் தென்பட்டாலும் அவர்களை இம்சிப்பதை தன் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வரும் கத்திரபந்துவிற்கு முனிவரிடம் மாத்திரம் ஏதோ ஒரு பச்சாதாபம் தோன்றியது. அந்த முனிவர் திடீரென கீழே சரியத் தொடங்கினார்.

கொலை கருவிகளான வில்லையும் வாளையும் ஓரமாக வைத்துவிட்டு சரிந்த அவரை தாங்கினான் கத்திரபந்து. முனிவரே என அழைத்து, 'வழி தவறி இங்கே வந்து விட்டீர்களா என்று பரிவுடன் கேட்டான். முனிவரால் பேச இயலவில்லை. அதனைக் கண்ட கத்திரபந்து அருகே இருந்த குளித்தில் இருந்து நீரைக் கொண்டு வந்து குடிக்க கொடுத்தான். தாமரைக் கிழங்குகளை சாப்பிடக் கொடுத்தான். களைப்போடு இருந்த அவருடைய கால்களை மெல்ல பிடித்து விட்டான்.

என்ன ஆச்சரியம்! அவனுடைய பணிவிடைகளை பார்த்து மகிழ்ந்த முனிவர் அவனைப் பற்றி கேட்டறிந்தார். முனிவரிடம் எதையும் மறைக்க அவன் விரும்பவில்லை. பிறப்பு முதல் தன் நடவடிக்கைகள் அனைத்தையும் முனிவரிடம் சொன்னான். அவன் உண்மையை மறைக்காமல் பேசியதே அவன் தன்னுடைய தவறுகளில் இருந்து திருந்தி முன்னேற்ற பாதையை நோக்கி நடக்க முற்படுகிறான் என்று முனிவருக்கு உணர்த்தியது.

முனிவரும் அவன் திருந்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த விரும்பினார். அவனிடம் நல்லது கெட்டதை மூச்சு பிடிக்க பேசுவதை விட 'கோவிந்தா கோவிந்தா' என்ற திருநாமத்தை எப்பொழுதும் சொல்லி வா என அருளினார். அந்த நேரம் முதல் கத்திரபந்து புது வாழ்வு கிடைத்ததாக மகிழ்ந்தான். அது முதல் அவன் கோவிந்தா என்ற மந்திரத்தை ஓதிக் கொண்டே இருந்தான். கோவிந்தா கோவிந்தா எனும் போது நாவினில் ஏற்படுகின்ற இன்பத்தை உணர்ந்தான். அப்படி சொல்லச் சொல்ல மேலும் உற்சாகம் அடைந்தான். கோவிந்தா எனும் நாமம் அவனை மாமனிதனாக்கியது. அந்த கோவிந்த நாமம் அவனை தீய செயல்களை செய்ய விடாமல் தடுத்தது. அவன் இறந்ததும் முக்தி அடைந்தான். இப்படியாக, கத்திரபந்து நல்லவனாக மாறியதோடு நற்கதி பெற்றான். அவனைப் போல மூன்றெழுத்து மந்திரமான கோவிந்தா எனும் திருநாமத்தை நான் சொல்லவில்லையே என வருந்தினாள் பெண் பிள்ளை” என முடித்தார் கிருஷ்ணவேணி.

“கோவிந்த நாமத்துக்கு மிகப்பெரிய சிறப்பு உண்டுன்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன்” என தலையசைத்தார் அமிர்தம்.

“பெருமாளே... கேசவா... ரங்கா... மாதவா... கண்ணான்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொன்னாலும் கோவிந்தா என்பது அனைத்திலும் விசேஷமானது.

யாராவது ஏமாத்திட்டா 'கோவிந்தா'ன்னு கிண்டல் செய்றோம். இந்த கோவிந்த நாமம் நல்லதை கொடுத்து தான் பழக்கம், எடுத்து பழக்கம் இல்லைன்னு தொடர்ந்து உச்சரிச்சிட்டு வர்றவங்களுக்கு தெரியும். அப்படி வேறு அபிப்பிராயத்தோட கோவிந்தான்னு சொன்னாலும் நன்மை மட்டுமே கொடுப்பார் அந்த வாசுதேவன்.

பகவானை விட அவனுடைய பெயருக்கு அதிக வலிமை உண்டு. அப்படித்தான், மகாபாரதத்தில் துச்சாதனன் திரவுபதியை துகிலுரிக்க முற்பட்ட போது திரவுபதி அவையில் உள்ளவர்களிடம் காப்பாற்றும்படி கதறியும் யாரும் வரவில்லை. கடைசியில் பகவானை சரணடைந்து 'கோவிந்தா' என அழைத்ததும் திரவுபதியின் மானத்தை காத்தான் கண்ணன்.

துன்பத்தில் இருப்பவர்கள் 'கோவிந்தா' என தொடர்ந்து சொன்னால் பிரச்னை தீரும்.

'கோவிந்தா கோவிந்தா கோவிந்தான்னு எங்கெல்லாம் சொல்லப்படுகிறோ அங்கு கஷ்டம் இருக்காது. நம் வாழ்க்கையை உயர்நிலைக்கு அழைத்துச் செல்ல கோவிந்த நாமம் துணை நிற்கும்.”

''கோவிந்த நாமத்தை கேட்க கேட்க பரவசமாகுது. எப்படி வைணவத்துல கோவிந்த நாமத்துக்கு பெரிய சக்தி உண்டோ, சைவத்துல ஓம் நமசிவாய, ஓம் சிவாய நம மந்திரத்துக்கு அதீத சக்தி உண்டு”

“அது சரி, ஓம் நமசிவாய, ஓம் சிவாய நம இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“ஓம் நமசிவாய என்று உச்சரிக்கும் போது நமக்கு உலக நன்மை தொடர்ந்து கிடைக்கும். ஓம் சிவாய நம என உச்சரிக்க மோட்சம் கிடைக்கும். ஓம் நமசிவாய மந்திரம் பஞ்சபூதங்களின் அடையாள எழுத்து. அதில்

ந - மண்ணையும்,

ம - நீரையும்,

சி - நெருப்பையும்,

வா - காற்றையும்,

ய - ஆகாயத்தையும் என பஞ்ச பூதங்களையும் குறிக்கும். அது மட்டுமில்ல, இந்த ஓம் நமசிவாய என்கிற மந்திரத்தை சுடுதண்ணிய காலில் கொட்டினது போல வேகமா உச்சரிக்காம, ஆத்மார்த்தமா பொறுமையா உணர்ந்து சொன்னால் தான் பலன் அதிகம். அது நம் தொண்டை, மார்பு, தொப்புள்னு உள்ளுறுப்பு எல்லாவற்றையும் துாய்மைப்படுத்தும். இதைச் சொல்லச் சொல்ல நம்முள் இருக்கும் தீய சக்திகளெல்லாம் வெளியே போவதை உணர முடியும். அதே போல மந்திர சக்தி நமக்குள் உயிர் பெறும் அதிசயத்தையும் கவனிக்கலாம்.

இதை சீரான இடைவெளியில் சரியான கால அளவோடு அந்த ஒலி அலை மாறாமல் உச்சரிக்கும் போது நம் உடம்புக்குள் மிகச்சரியாக நன்மை சேரும். இந்த ஓம் நமசிவாய மந்திரத்தை 108 முறை ஜபிக்கும் போது ஒரு கையில் வில்வமும் இன்னொரு கையில மிளகும் வச்சு சொல்லணும்.

இதை தினமும் சேர்த்து காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளும் போது சிறந்த மருந்தாக பயன்படும் என்கிறார்கள் சித்தர்கள்” என்றார் அமிர்தம்.

“எந்த நெறியா இருந்தாலும் எல்லா வற்றிலும் நல்ல விஷயங்களை சொல்லிட்டு போயிருக்காங்க நம் முன்னோர்கள்.

கோவிந்த நாமமும் சரி ஓம் நமசிவாயமும் சரி மனிதனை மேம்போக்கான நிலைக்கு அழைத்துச் செல்லும். ஆனாலும் நம் தொடர்ச்சியான உச்சரிப்புல இருக்கு நம்முடைய பலம்.”

“நிச்சயமா கிருஷ்ணவேணி. என்னவோ இந்த ரெண்டு நாமத்தை பத்தியும் பேசும்போது மனசு நிறைவா இருக்கு. தொடர்ந்து சொல்லச் சொல்ல சீக்கிரமே முக்தி கிடைக்கும்னு நம்பிக்கை வந்திருக்கு. சரி அடுத்த ரகசியம் என்ன?”

“அது ரகசியமாகவே இருக்கட்டுமே” என கண் சிமிட்டினார் கிருஷ்ணவேணி.

“ரகசியம்னு சொன்னாலே அது சீக்கிரம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை வரும். அதனால அந்த ரகசியத்தை இப்பவே சொல்லிடுங்க கேட்போம்”

“ம்... நீங்க விடப் போறதில்ல... சரி, சொல்றேன் கேளுங்க. முதல் அடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே! அப்படிங்கறது தான் பெண் பிள்ளை ராமானுஜரிடம் சொன்ன பத்தாவது ரகசியம்”

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us