தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 20

தெய்வத் திருமணம் - 20

தெய்வத் திருமணம் - 20


ADDED : ஏப் 15, 2026 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 09:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாரதர் - தமயந்தி திருமணம்

'நாராயணா, நாராயணா' என எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பக்தரான நாரதர், பக்தியில் மட்டுமின்றி அறிவிலும் சிறந்தவர். பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றிய இவர், சரஸ்வதியிடம் இசைக் கலையைக் கற்று, அவரிடமிருந்து 'மகதி' என்ற தெய்வீக வீணையைப் பெற்ற இசைக்கலைஞராக திகழ்கிறார்.

தேவ உலகம், பூவுலகம், பாதாள உலகம் என மூவுலகங்களுக்கும் தடையின்றிச் சென்று வரும் இவரை மூவுலகப் பயணி (திரிலோக சஞ்சாரி) என்பர். இவர், செல்லும் இடங்களிலெல்லாம் கலகத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் நன்மை செய்வதால், 'நாரதர் கலகம், நன்மையில் முடியும்' என்பர்.

தேவரிஷி எனப்படும் நாரதரும் பர்வத முனிவரும் இணைபிரியாத நண்பர்கள். தங்களின் நட்பை வலுப்படுத்த நண்பர்கள் இடையே ரகசியம் இருக்கக் கூடாது என்றும், ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது என்றும் ஒப்பந்தம் செய்தனர்.

இந்நிலையில் இருவரும் பூவுலகில் ஆட்சி செய்த சஞ்சயன் என்ற மன்னரின் அரண்மனைக்குச் சென்றனர். மன்னனின் அன்பில் மகிழ்ந்த இருவரும் அரண்மனையில் தங்கியிருந்தனர். பணிவிடை செய்வதற்காக மன்னன் சஞ்சயன், திருமண வயதை அடைந்திருந்த தன் மகள் தமயந்தியை நியமித்தான்.

தமயந்தியும் சிறப்பாகப் பணிவிடை செய்தாள். இசையில் ஆர்வம் கொண்டிருந்த அவள், ஓய்வு நேரத்தில் வீணையை மீட்டி இனிமையாகப் பாடினாள்.

ஒரு நாள் அவளின் இசையையும், இனிய பாடலையும் கேட்ட நாரதர், தன்னாலும் பாட முடியும் என்பதை காட்ட வீணையை மீட்டி பாடத் தொடங்கினார். அவரது அருமையான இசையையும், இனிமையான பாடலையும் கேட்ட அனைவரும் மெய்மறந்தனர்.

நாரதரின் இசையில் மயங்கிய தமயந்தி, தன்னையும் அறியாமல் நாரதரின் இசை மீது பற்று கொண்டாள். அந்தப் பற்று, பின்னர் நாரதர் மீது காதலாக மாறியது. நாரதரின் பின்னாலேயே அவள் சுற்றிக் கொண்டிருந்தாள். காதலை எப்படிச் சொல்வது என தவித்தாள். அவளின் காதல் பற்றி நாரதருக்கு எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில், தமயந்தியின் எண்ணத்தை அறிந்த பர்வத முனிவர், நாரதரும் அவளை விரும்புவதாக நினைத்தார். ஆனால் ஒப்பந்தத்தை மீறிய நாரதர் காதல் விஷயத்தை தெரிவிக்காமல் இருக்கிறார் என கோபம் கொண்டார்.

கோபத்தில் அவர், நாரதரின் முகம் குரங்கு முகமாக மாறட்டும் என சபித்தார். அதன்படி நாரதரின் அழகான முகம் குரங்கு முகமாக மாறியது. உண்மையை அறிந்த நாரதருக்கும் கோபத்தில், பர்வத முனிவனுக்குச் சொர்க்கத்தில் இடம் இல்லாமல் போகட்டும் என சபித்தார்.

கேலிக்கு ஆளாகக் கூடாது என நாரதர் ஒரு அறைக்குள் முடங்கி கிடந்தார். அவரது இசையால் கவரப்பட்ட தமயந்தி, அதன் பின்பும் பணிவிடைகளைத் தொடர்ந்து செய்தாள். இதற்கிடையே மகள் தமயந்திக்குத் திருமணம் நடத்த விரும்பிய மன்னன், அதற்கான ஏற்பாட்டை தொடங்கினார். நாரதரைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறினாள் தமயந்தி.

அதைக் கேட்டுக் கவலையடைந்த மன்னன், “நீ எனக்கு ஒரே மகள். உன்னைத் திருமணம் செய்ய அரசகுமாரர்கள் பலர் இருக்கும் போது, குரங்கு முகம் கொண்ட நாரதரைத் திருமணம் செய்வேன் என்கிறாயே, அவரோ தனி அறைக்குள் அடைந்து கிடக்கிறார்'' என வருந்தினான் மன்னன்.

உடனே தமயந்தி, “தந்தையே, நான் முதலில் நாரதரின் இசையை மட்டுமே விரும்பினேன். அந்த விருப்பம் காதலாக மாறியது. என் மீது அவருக்கு விருப்பம் இருக்கிறதா? என தெரியவில்லை. அவருடன் வந்த முனிவரின் கோபத்தால், அவருடைய முகமும் குரங்கு முகமாக மாறிவிட்டது. ஆனாலும் அவரைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாள் தமயந்தி.

அப்போது அங்கு வந்த பர்வத முனிவர், தமயந்தி சொன்னதைக் கேட்டுக் கவலையடைந்தார். தமயந்தியின் நடவடிக்கைகள் மூலம் நாரதர் மீதுள்ள காதலை அறிந்த தான், நாரதருக்கு அவள் மீது விருப்பம் உள்ளதா என்று கூட சிந்திக்கவில்லை. அவசரப்பட்டு சாபமிட்டு விட்டேனே என வருந்தினார். அதன் பின் நாரதருக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

நாரதரின் குரங்கு முகம் மாறி, பழைய முகம் திரும்பக் கிடைத்தது. அறையை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார் நாரதர். பர்வத முனிவருக்கு நன்றி தெரிவித்தார். அதன் பின்பு நாரதர், பர்வத முனிவருக்குச் சொர்க்கத்தில் இடமில்லை என்ற சாபத்தைத் திரும்பப் பெற்றார்.

மன்னனின் மகள் தமயந்தி கொண்ட காதலை அறிந்தார் நாரதர். குரங்கு முகமான பின்பும், தன்னை வெறுக்காமல் தொடர்ந்து பணிவிடை செய்த தமயந்தியின் மீது நாரதருக்கும் விருப்பம் ஏற்பட்டது. நாரதரும் தமயந்தியைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

மன்னன் சஞ்சயன் மகிழ்ச்சியடைந்தான். ஒரு நல்ல நாளில் நாரதர் - தமயந்தி திருமணம் நடந்தது. இதன் பின் பர்வத முனிவர், சொர்க்கத்திற்குச் சில காலம் தங்கி வருவதாக புறப்பட்டார்.

கர்வம் மறைந்தது

தானே சிறந்த திருமால் பக்தர் என்றும், தான் மட்டுமே சிறந்த இசைக் கலைஞர் என்றும் நாரதரிடம் கர்வம் இருந்தது. ஒரு நாள் அவர், ஒரு நந்தவனத்தின் வழியே சென்ற போது, அங்கு பல பெண்கள் அழுவதைக் கேட்டார். தேவதை போன்ற அழகிய முகங்களைக் கொண்ட அவர்களில் சிலருக்குக் கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக இருந்தனர்.

திகைப்புடன் நாரதர், “தாங்கள் யார்? அழகிய முகத்துடன் இருக்கும் தங்களுக்கு இந்தக் குறை எப்படி ஏற்பட்டது?” எனக் கேட்டார்.

அப்பெண்கள், “நாங்கள் அனைவரும் ராக தேவதைகள். வைகுண்டத்தில் நாரதர் என்ற ஒருவர் வந்து வீணையை இசைக்கத் தொடங்கினார். அவரது இசை முறைப்படி இசைக்கப்படாததால், நாங்கள் அனைவரும் உருக்குலைந்து, சீர்குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்றனர்.

அதனைக் கேட்ட நாரதர், “ராக தேவதைகளே, தங்களின் அழகு உருக்குலைவதற்குக் காரணமான நாரதர் நான்தான். தங்கள் அனைவரையும் காண்பதற்கு முன்பு வரை, நான் பெரும் இசைக்கலைஞன் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் கர்வம் இன்றோடு ஒழிந்தது. இசைக்கலையை நான் யாரிடம் முறையாகக் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்? எனச் சொல்லுங்கள்” எனக் கேட்டார்.

அவர்கள், “தங்களின் இசையின் மீதான கர்வம் ஒழிந்ததால், நீங்கள் இசையை எளிமையாகக் கற்க முடியும். உண்மையான இசையை அனுமனிடம் சென்று கற்றுக் கொள்ளுங்கள்” என்றும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அனுமனை அணுகிய நாரதர் முறையான இசைப்பயிற்சி அளிக்கும்படி வேண்டினார். அனுமனும் பக்தியோடு இசையைக் கற்றுத் தந்தார். அதன் பின்பு தான், நாரதர் முழுமையான இசைக்கலைஞர் ஆனார்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us