ADDED : ஏப் 15, 2026 10:02 AM

ரோமரிஷி
'மதிஅமுதம்' உட்கொண்டவர்கள் கள்ளமற்ற மனதுடன் இருப்பார்கள். பெரியவர்களை வணங்குவார்கள். அப்படி குருநாதரின் திருவடியை வணங்கி அருள் பெற்றவர்களை 'உரோமர்கள்' என்பார்கள். இவர்களின் வழியில் தோன்றியவரே ரோமரிஷி சித்தர். அவரைப் பற்றி பார்வதியிடம் கேளுங்கள் நாரதரே” என்றார் மகேஸ்வரர்.
“தங்களின் எண்ணமே என் எண்ணம். உடல் துாய்மையை விட மனத்துாய்மையே சிறந்தது என உணர்த்த ரோமரிஷிக்கு தாங்கள் காட்சியளித்ததை சொல்லவா அல்லது சோழ மன்னருக்கு குழந்தைப்பேறு வரம் அளிக்க, ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் போரை உருவாக்கிய தங்களின் திருவிளையாடலைச் சொல்லவா?” என பார்வதி கேட்க மகேஸ்வரர் புன்னகைத்தார்.
“ரோமரிஷி சித்தர் ரோம் நாட்டுக்குச் சென்று வந்தார் என்றல்லவா நினைத்தேன். அவரைப் பற்றி இவ்வளவு தகவல்களா?'' என நாரதர் வியந்தார். அவரைப் பற்றி பார்வதி சொல்லத் தொடங்கினார்.
உடல் முழுவதும் ரோமங்களுடன் பிறந்தவர் ரோமரிஷி. அவரது ஒவ்வொரு ரோமமும் கீழே விழ விழ அவருடைய ஆயுள் குறைந்து கொண்டே வரும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றார். அதனால் பல யுகங்களாக வாழ்ந்தார். பன்னிரண்டு தலைமுறைகள் வாழ்ந்தும், இறப்பு அவரை நெருங்கவில்லை.
காகபுஜண்டரை மானசீகக் குருவாக ஏற்று யோகக்கலையை கற்றார். குரு, முன்னோர், பெரியோர் என யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பாதம் பணிந்து, ஆசி பெறுவது அவரது வழக்கம். காகபுஜண்டரின் ஆணையை ஏற்று சித்த மருத்துவ நுால்களை எழுதினார். இதில் வெளிநாட்டுக்குச் செல்லும் யோகத்தை கணிக்கும் ஜோதிட விளக்க நுால் புகழ் மிக்கது. அகத்தியர், காகபுஜண்டர், போகரின் அருளைப் பெற்று வைத்தியம் 1000, சூத்திரம் 1000, ஞானம் 50, பெருநுால் 500, குறுநுால் 50, காவியம் 500, பகார சூத்திரம், சிங்கி வைப்பு, வைத்திய சூத்திரம், முப்பு சூத்திரம் 30, நாகரூபம் இரண்டடி 500 போன்ற நுால்களை எழுதினார்.
சட்டைமுனி சித்தருடன் சேர்ந்து சித்து வேலைகள் செய்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நுால்களை வெளியிடாமல் குருநாதர் காகபுஜண்டரிடம் ஒப்படைத்தார். அவரோ காக வடிவெடுத்து அந்த நுால்களை இறக்கைகளில் நெடுங்காலம் ஒளித்து வைத்தார்.
பின்னர் காகபுஜண்டரின் ஆணைப்படி நம் நாட்டை விட்டு ரோம் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள மக்களுக்கு யோகக் கலைகளைக் கற்றுக் கொடுத்தார். ஆனால் சில காலங்களுக்குப் பின்பு தன்னுடைய மரணம் அற்ற நிலையைக் கண்டு வருந்தினார்.
உடல் முழுதும் உள்ள ரோமங்கள் நீங்கினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என அறிந்த அவர் ரோமங்களை நீக்கிய பின், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஆவுடைநாயகி கோயில் கைலாசநாதரை வணங்கி பிறவாத வரம் பெற விரும்பினார். வழிபடுவதற்கு முன்னர் நீராடுவது இயல்பு.
ஆனால் ரோம ரிஷியோ அதீத பக்தியால் ரோமங்களை நீக்கிய பின், நீராட மறந்தார். அப்படியே பிறவா வரம் வேண்டி கோயிலுக்குள் நுழைந்தார். வாசலில் அமர்ந்திருந்த விநாயகரும், முருகப்பெருமானும் அவரைத் தடுத்தனர்.இதனால் கோயிலுக்குள் செல்லாமல் ரோமரிஷி வெளியே நின்றபடி தவம் செய்ய ஆரம்பித்தார்.
அப்போது அனைவரும் அதிசயக்கும்படி கைலாயநாதர் வாசலுக்கு வந்து ரோம ரிஷிக்கு காட்சியளித்தார். இதைக் கேள்விப்பட்ட சோழமன்னன் தனக்கு வாரிசு இல்லாமல் இருப்பதைச் சொல்லி ரிஷியிடம் வருந்தியதோடு அதை நிறைவேற்ற அருள்புரியுமாறு வேண்டினார்.
மன்னரின் வேண்டுகோளை ஏற்று சோழநாடு வந்தார் ரோமரிஷி. அங்கிருந்தபடி கைலாயநாதரை நோக்கி தவம் இருந்தார். ரோமரிஷியின் பக்தியை மெச்சிய சிவன் காட்சியளித்து,“கவலை வேண்டாம்! ஆதிஷேடனுக்கும், வாயுதேவனுக்கும் போர் முடிந்த பின்னர் மன்னருக்கு குழந்தைபேறு கிடைக்கும்” எனக் கூறி மறைந்தார்.
கைலாயநாதர் கட்டளையிட்டபடி போர் முடிந்து, கடல் கொந்தளித்து, அழகிய குழந்தையுடன் தோணியப்பராக சிவன் சீர்காழியில் காட்சி கொடுத்தார். மன்னரும் ரோமரிஷியை வணங்கிய பின் குழந்தையை வாரி எடுத்து மகிழ்ந்தார். சோழ நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினார்.
அதன்பின் காகபுஜண்டரின் ஆணைப்படி நுால்களை வெளியிட்டு சதுரகிரி சென்றடைந்தார் ரோமரிஷி. அங்கே ஆறு குன்றுக்கு நடுவில், மூன்று குகைக்கு இடையே தவமிருந்தார். பின்னர் சிவனின் ஆணைப்படி கும்பகோணம் காளகஸ்தீஸ்வரர் கோயிலில் முக்தி அடைந்தார்.
மகேஸ்வரரை வணங்கிய நாரதர், “சித்தர்கள் மருத்துவம் மட்டுமல்ல. மக்கள் சேவையிலும் வெற்றி பெற்றிருந்தனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது அவர்களின் அடிநாதமாக இருந்தது. ஆகவே தான் இன்றும் சித்தர்கள் நம்மிடம் அருவமாக, அருவுருவமாக உலாவிக் கொண்டிருக்கின்றனரோ” எனக் கேட்டார் வியப்புடன்.
புன்னகைத்தபடியே, “சரியாகச் சொன்னீர் நாரதரே!, மக்கள் சேவையை ஆர்வமுடன் செய்யும் அனைவரும் சித்தர்களே. மக்களுக்கு செய்யும் சேவையே மகேஸ்வரனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்தே பலர் அமைதியாக சித்தர்களின் வடிவில் நற்செயல்களை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் எமது அருள் கிடைக்கும்” எனக் கூறிய மகேஸ்வரர், பார்வதியின் பாதங்களில் நாரதர் அடிபணிந்தார்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250
