தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெரிய மனசுக்காரன்

பெரிய மனசுக்காரன்

பெரிய மனசுக்காரன்


ADDED : ஏப் 15, 2026 10:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாயி பெருமாள், மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்தான். ஏழை என்றாலும் இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ விரும்பினான். ஆனால் அவன் மனைவி பூவாயிக்கோ பொன், பொருளோடு வாழ ஆசை. பெருமாள் புத்தி சொல்லியும் கேட்பதாக இல்லை.

''நமக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கே! அவர்களின் எதிர்காலம் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா?'' என்றாள்.

விவசாயியின் வீட்டில் ஒருநாள் சண்டை முற்றியது.

விஷயம் வைகுண்டத்தை எட்டியது. கலகத்தில் சிறந்த நாரதர் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தார். உடனிருந்த மகாலட்சுமி, ''என்ன சுவாமி அநியாயம்? ஆஸ்ரமத்தில் வாழும் துறவிகள் கூட என் அருளைப் பெற ஆடம்பரமாக யாகம் நடத்துகிறார்கள்'' என்றாள்.

மகாவிஷ்ணு சிரித்தபடி, ''லட்சுமி! ஆசை யாருக்கு இல்லையோ அவன் என் திருவடியை அடைவது உறுதி என கீதையில் உபதேசித்திருக்கிறேனே... அது நிஜம் தானா என்பதே நீயே பூலோகம் சென்று சோதித்து பார்'' என சொல்லி யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

உழைப்பின் மீது நம்பிக்கை கொண்ட பெருமாள் அதிகாலையில் வயலுக்கு புறப்பட்டான். உழத் தொடங்கிய சிறிது நேரத்தில், ஓரிடத்தில் 'டங்' என ஓசை எழுந்தது. தோண்டிய போது, குடம் நிறைய பொற்காசுகள் இருந்தன. உழைப்பின்றி கிடைத்த பொருளை எடுக்க அவனுக்கு மனமில்லை. அரசிடம் ஒப்படைக்க எண்ணி, ஓரிடத்தில் மறைத்து வைத்தான். இதற்குள் குறி சொல்லும் குறத்தியாக மகாலட்சுமி, விவசாயி வீட்டுக்கு வந்தாள்.

பூவாயியின் கையை பார்த்து, ''அம்மா! வலிய வந்த சீதேவியை காலால் உதைத்து விட்டார் உன் கணவர். புதையலாக கிடைத்த பொற்காசுகளை அரசிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இருக்கிறார். அதை உனதாக்கி விட்டால் மகாராணி போல வாழலாம்'' என்றாள்.

புரியாமல் விழித்தாள் பூவாயி. பெருமாளுக்கு வயலில் புதையல் கிடைத்ததை விலாவாரியாக சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தாள். காத்திருந்த பூவாயி, கணவரைக் கண்டதும் சிடுசிடுத்தாள். மனைவியின் மனநிலையை உணர்ந்த பெருமாள், ''பூவாயி...உழைப்பின்றி கிடைத்த பொருள் நிலைக்காது. பேராசை பெருநஷ்டம் என்பார்கள். உழைப்புக்கான கூலி நிச்சயம் கிடைக்கும்'' என்றான் பெருமாள்.

குறத்தி மீண்டும் அங்கு வந்தாள். மகாலட்சுமியாக காட்சியளித்து, மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத விவசாயியை வாழ்த்தினாள். அப்போது பெருமாள், ''தாயே...! யாருக்கும் கிடைக்காத பெருஞ்செல்வமான உன் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். வாழ்வில் இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்'' என மகிழ்ந்தான்.

பெரிய மனசுக்காரனான பெருமாளைக் கண்ட மகாலட்சுமி மலைத்து நின்றாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us