ADDED : ஏப் 15, 2026 10:08 AM

புரட்சித்துறவியான ராமானுஜர் 1017ல் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவ சோமாயாஜுலு, காந்திமதி. 'இளையப்பெருமாள்' என பெற்றோர் பெயர் சூட்டினர். எட்டு வயதில் உபநயனம் செய்யப்பட்டது. தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். 16ம் வயதில் மணம் புரிந்தார்.
தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளையபெருமாள். இந்நிலையில் அவரை அழைத்துச் செல்ல ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார் பெரிய நம்பி. அப்போது பெரிய நம்பியிடம் கல்வி பயில ஸ்ரீரங்கம் சென்று கொண்டிருந்தார் இளையபெருமாள்.
இருவரும் மதுராந்தகம் ராமர் கோயிலில் சந்தித்துக் கொண்டனர். இளையபெருமாளை அங்கேயே சீடனாக ஏற்ற பெரியநம்பி பஞ்ச சமஸ்காரம் சடங்கை செய்து 'ராமானுஜர்' எனப் பெயரிட்டார். அந்தப் பெயரே நிலைத்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராமானுஜர் துறவறம் மேற்கொண்டார். அக்கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பிகள் ' யதிராஜரே' என அழைத்தார். அதாவது 'துறவிகளின் அரசன்' என பொருள்.
ராமானுஜர் பிட்சைக்குப் போகும் போது ஆண்டாளின் பாசுரங்களை பாடுவது வழக்கம். இதனால் 'திருப்பாவை ஜீயர்' எனப்பட்டார். ராமானுஜரை பெருமாளாகவே கண்ட மக்கள் பக்தியுடன் 'எம்பெருமானார்' என அழைத்தனர்.
ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வாழ்ந்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்ட போது அங்குள்ள பக்தர்கள் வருந்தினர். பின்னர் அவர்கள் விரும்பிய படி தன்னைப் போலவே ஒரு சிலையை உருவாக்கச் சொன்னார். அதை கட்டித் தழுவி அருட்சக்தியை செலுத்திய ராமானுஜர், ''நான் இந்த சிலை வடிவில் உங்களுடன் இருப்பேன்'' என ஆசியளித்தார். இதே போல அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதுாரிலும் அவர் வாழும் காலத்திலேயே ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டது. அதையும் ராமானுஜரே பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்திய ராமானுஜர் அங்கேயே தங்கினார். 120 வயதை அடைந்த அவரின் உடல்நிலையும் பலவீனம் அடைந்தது. தன் வாழ்நாளை முடித்து விட்டு பரமபதத்தை அடைந்தார்.
இதை 'திருநாட்டுக்கு எழுந்தருளல்' என வைணவர்கள் குறிப்பிடுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை 'தானான திருமேனி' என்பர்.
மூலிகைகளால் பதப்படுத்தப்பட்டதால் இன்றும் உயிருடன் இருப்பது போல் காட்சி தருகிறார். ஆண்டுக்கு இருமுறை அதாவது சித்திரை திருவாதிரை, ஐப்பசி திருவாதிரை நாட்களில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ தைலத்தால் காப்பிடுவர்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு வைணவத்தில் இல்லை. வைணவன் என்றாலே பெருமாளின் பக்தன் தான். கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற சமத்துவ தர்மத்தை ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உருவாக்கிய புரட்சித் துறவி ராமானுஜர். அவருடைய திருநட்சத்திரமான ஏப்.22ல் 'காரேய் கருணை ராமானுஜ' என அவருடைய திருவடியைச் சரணடைவோம்.
