ADDED : ஏப் 23, 2026 12:01 PM

கிராமம் ஒன்றில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அவரிடம் ஆசி பெற்ற கிராமத்தினர் அரிசி, பருப்பை காணிக்கையாக கொடுத்தனர். விவசாயப் பணிக்கு பாதிப்பு இல்லாமல் வழிபடுவது பற்றி சுவாமிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அதிகாலையில் இருந்து இரவு வரை வந்த பக்தர்களுக்கு ஓய்வு இல்லாமல் தரிசனம் கொடுத்த மஹாபெரியவர் இரவு பூஜை முடிந்த பின் ஓய்வெடுக்கச் சென்றார். நள்ளிரவில் மடத்தின் மேலாளர் அங்கு வந்தார். சத்தத்தை கேட்டு, 'என்ன விஷயம்' எனக் கேட்டார் சுவாமிகள்.
'பெரியவா... இந்த ஊரில் இருக்கிற ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம். காரணமே இல்லாமல் அழுதிட்டே இருக்காம். பக்கத்தில ஆஸ்பத்திரியும் இல்லை' எனச் சொன்னார். உடனே அந்த குழந்தையின் வீடு எங்கே எனக் கேட்டபடி சட்டென எழுந்தார் மஹாபெரியவர். முன்னே மேலாளர் செல்ல சுவாமிகளும் பின்தொடர்ந்தார். குழந்தையின் வீட்டை அடைந்தனர். அங்கிருந்தோர் சுவாமிகளை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றனர்.
குழந்தையை பார்த்ததும், திருநீறு கொடுத்து பூசச் சொன்னதோடு, வேப்ப எண்ணெய்யை சூடாக்கி ஒரு சொட்டு அதன் வாயில் விடுமாறு சொன்னார் மஹாபெரியவர். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்தியது. அதன் பின்னரே சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டார். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு தரிசனம் தரத் தொடங்கினர். அப்போது தாயின் கையை பிடித்தபடி குழந்தையும் மகிழ்ச்சியுடன் வந்தது. அந்த தாயிடம், 'எப்படி இருக்கான்' எனக் கேட்டார் மஹாபெரியவர். கண்ணீரையே காணிக்கை ஆக்கினாள் அந்த தாய்.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
