ADDED : ஏப் 23, 2026 12:04 PM

நேர்மையாக வாழ்
“இப்படி அநியாயம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கிறாளே பச்சைப் புடவைக்காரி, அவளைச் சொல்லணும் சார்” என் முன் உட்கார்ந்திருந்த ரேகாவிற்கு ஐம்பது வயது இருக்கும்.
'நீங்கள் பார்க்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வாள்' என என் நண்பர் பயமுறுத்தியதால் தான் அவளை வரச் சொல்லியிருந்தேன்.
“நான் வேலை பார்க்கிற ஆபீசில லஞ்சம் நடமாடும். என் ஒரே மகள் மீது சத்தியமா சொல்றேன். 25 வருஷ சர்வீஸ்ல ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கினதில்ல. ஒருநாள் மதியம் என்கூட வேலை பார்க்கற பாபு என்கிட்டத் தன் பையைக் கொடுத்துட்டுச் சாப்பிடப் போனாரு. வழக்கமா அப்படிச் செய்யறவருதான்.
அன்னிக்குன்னு பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆளுங்க வந்துட்டாங்க. பாபு கொடுத்த பையைப் பார்த்தாங்க. அதில கத்தை கத்தையாப் பணம் இருந்துச்சி. என்கிட்ட கேட்டாங்க. பாபு கொடுத்துட்டுப் போனதுன்னு சொல்லிட்டேன். பாபுகிட்ட கேட்டாங்க. நான் அந்தப் பையைக் கொடுக்கவே இல்லைன்னு சாதிச்சிட்டாரு.
என்னைக் கைது பண்ணி கேஸ் போட்டிருக்காங்க. அந்தப் பையில ரெண்டு லட்ச ரூபாய் இருந்ததாம். அதனால எப்படியும் ரெண்டு வருஷம் ஜெயில் கொடுத்திருவாங்களாம். லஞ்சம் வாங்கறவங்க சந்தோஷமா வாழறதும், நேர்மையா வாழறவங்க ஜெயில்ல சாகறதும்தான் பச்சைப் புடவைக்காரி ஆட்சில நடக்குமோ?”
ஏதோ சால்ஜாப்பு சொல்லி ரேகாவை அனுப்பி விட்டேன்.
இரண்டு நாள் கழித்து மாலையில் நடந்து கொண்டிருந்த போது வாழைப்பழம் விற்கும் பெண் என்னை அழைத்தாள்.
“பழம் வேண்டாம்மா.”
“ரேகாவிற்காக ஏன் இன்னும் வேண்டிக் கொள்ள வில்லை?”
பழம் விற்கும் பெண்ணாக இருந்த தாயை வணங்கினேன்.
“ரேகா ஆபத்தில் இருக்கிறாள்” என அவள் சொன்னபோது அலைபேசி அலறியது.
ரேகா துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டாளாம். ஆனால் காப்பாற்றி விட்டனர். என்னைப் பார்க்க வேண்டும் என அழுகிறாளாம்.
“அவளைப் பார்க்கும் போது அவளுடைய கடந்த காலம் உனக்குத் தெரியும். உன் மனதில் தோன்றுவதைச் சொல்”
“ரேகா பிழைப்பாளா?” எனக் கேட்டேன்.
“இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை”
படுக்கையில் கிழிந்த நாறாகக் கிடந்தாள் ரேகா. நரம்பு வழியாக மருந்து ஏறிக் கொண்டிருந்தது.
“வேலை போயிரும். மானம் போயிரும். ஜெயிலுக்குப் போனவ பொண்ணுக்குக் கல்யாணம் ஆகுமா? ஏன் சார் இப்படி நடக்கணும்?” என ரேகா கேட்டாள்.
ரேகாவின் கையைப் பற்றினேன். அந்தக் கணத்தில் நடந்தது எல்லாம் தெரிந்து கொண்டேன்.
“பச்சைப் புடவைக்காரி செய்த அநியாயத்தை பத்திப் பேசிட்டோம். நீங்க செய்த அநியாயத்தைப் பத்தி பேசுவோமா?” எனக் கேட்டேன்.
ரேகாவின் முகம் வெளிறியது.
“30, 35 வருஷத்துக்கு முன்னால அரசு வேலைக்கான பரீட்சைக்கு நீங்களும் உங்க தோழி பாலாவும் ஒண்ணாத்தான் படிச்சீங்க. ரெண்டு பேரும் நல்லாவே எழுதினீங்க. அந்தக் காலத்துல ரிசல்ட் தபால் மூலமாத் தான் வரும். பாலாவுக்கு வந்த தபாலை உங்க கையில கொடுத்துட்டுப் போனாரு தபால்காரர். அவ பரீட்சையில பாஸ் பண்ணிட்டா. நேர்காணலுக்கு வாங்கன்னு தபால் வந்திருந்தது. உங்களுக்கு வரல. நீங்க பரீட்சையில் பெயிலாட்யிட்டதா நெனச்சி பாலாவுக்கு வந்த தபால கிழிச்சிப் போட்டீங்க.
“பத்து நாள் கழிச்சி நீங்க வெற்றி பெற்றதா தபால் வந்தது. அதைப் பார்த்துட்டு பாலா எவ்வளவு சந்தோஷப்பட்டா தெரியுமா? உனக்காவது வேலை கெடைச்சிருக்கேன்னு சொல்லிக்கிட்டேயிருந்தா.
“உங்களால பாலாவோட வாழ்க்கை தடம் மாறிப் போச்சு. அவங்க அத்தை பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியூர் போயிட்டா. அவளோட வாழ்க்கை நிம்மதியா இல்ல. வேலை கெடைச்சிருந்தா பாலாவுக்கு இன்னும் நல்ல வரன் அமைஞ்சிருக்கலாம். பாலா என்ன தப்பு பண்ணா? உங்களோட பழகினது தப்பா? எதுக்காக அவளது வாழ்க்கைய நாசம் செய்தீங்க ரேகா?”
ரேகாவின் முகத்தில் கலவர ரேகை.
“ஏதாவது பரிகாரம் செய்யணுமா?”
“துரோகத்திற்கு ஏது பரிகாரம்?”
“நான் அப்படியே சாக வேண்டியது தானா?”
“செஞ்ச தப்ப நெனச்சி வருத்தப்படுங்க. உங்க பாவம்தான் உங்களைத் தாக்குதுன்னு புரிஞ்சிக்கங்க. பச்சைப்புடவைக்காரியப் பழிக்காதீங்க. உங்ககிட்ட தன் கைப்பையைக் கொடுத்து உங்களை மாட்டிவிட்டாரே அவருக்காகவும் வேண்டிக்கங்க. அவரு இடத்துல நீங்க இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பீங்க”
நான் கிளம்பி விட்டேன். கார் நிறுத்திய இடத்தில் அதே பழக்காரி.
“ரேகாவின் கதை சுபமாக முடிய வில்லையோ?”
“கதை இன்னும் முடியவே இல்லையே தாயே!”
“ரேகா தவறை உணர்ந்து விட்டாள். அவள் மனதில் அன்பு வந்து விட்டது. தோழி பாலாவைக் கண்டுபிடித்து மன்னிப்பு கேட்பாள். தன் சொத்தை பாலாவிற்கு எழுதிக் கொடுப்பாள். இதனால் பாலாவிற்கு இருக்கும் பிரச்னை தீரும். அத்துடன் லஞ்ச ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடிக்கும். விசாரணையின் போது பாபுவின் பெயரையே சொல்ல மாட்டாள் ரேகா.
என் தாய் அறிய லஞ்சம் வாங்கவில்லை. அந்தப் பை என் மேஜைக்கு எப்படி வந்தது என்றே தெரியாது என சாதிப்பாள்.
ரேகா சஸ்பென்ட் செய்யப்படுவாள்.
பாதிச் சம்பளம்தான் கிடைக்கும். வழக்கு ஐந்து ஆண்டு நடக்கும். இதற்கிடையில் ரேகாவிடம் பையைக் கொடுத்து விட்டுச் சென்ற பாபுவிற்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்படும். இன்னும் ஒரு ஆண்டு வாழ்ந்தாலே அதிகம் என டாக்டர்கள் சொல்வார்கள்.
அப்போதுதான் பாபு செய்த பாவத்தை உணர்வான். குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொள்வான். ரேகா விடுதலை செய்யப்படுவாள். பாபுவிற்கு தண்டனை கிடைக்கும். அங்கேயே இறந்து விடுவான். ரேகாவின் சம்பள பாக்கியாக பெரிய தொகை கிடைக்கும். அதைக் கொண்டு மகளின் திருமணத்தை நடத்துவாள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமெனச் சொல்”
“மனித மனம் படுத்தும் பாட்டை நினைத்தால் பயமாக இருக்கிறது தாயே! தன் தோழியின் வாழ்வை நிர்மூலமாக்க வேண்டும் என்ற எண்ணம் ரேகாவிற்கு எப்படி வந்தது?”
“மனம் உன் வசம் இல்லாவிட்டால் பொறாமை, பேராசை உன்னை அழித்து விடும்”
“என் மனம்தான் என் வசம் இல்லையே”
“என்ன உளறுகிறாய்?”
“என் மனம் உங்கள் வசம்தானே இருக்கிறது? காலகாலத்திற்கும் அது அப்படியே இருக்கட்டும். செய்யாத தப்பிற்கு என்னைத் தண்டியுங்கள். ஆனால் ரேகா செய்தது போன்ற ஒரு துரோகத்தை மனதாலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி செய்யுங்கள்”
பச்சைப்புடவைக்காரியின் சிரிப்பில் மயங்கி அவள் காலில் விழுந்தேன். எழுவதற்குள் அவள் மறைந்தாள்.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
