ADDED : ஏப் 23, 2026 12:06 PM

பட்டர்பிரானைப் போலே
“என்ன கிருஷ்ணவேணிம்மா... கூட ஒரு அழகான பொடிப்பயல கூட்டிட்டு வந்து இருக்கீங்க, உங்க பேரனா?”
''ஆமா ஊர்ல இருந்து வந்திருக்கான். இங்கே சென்னையில் நாளைக்கு அவனுக்கு பரிசளிப்பாம். அதை வாங்க குடும்பமா வந்திருக்காங்க. வீட்டிலேயே பொழுது போகல, அதான் கூட்டிட்டு வந்தேன். நாம நடக்கலாம், அவன் இங்கேயே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கட்டும்”
“ஓஹோ! என்ன பரிசு?”
“ ரூ.5000 ரூபா பொற்கிழியாம்.”
“ம்... வார்த்தையில் வரலாறு திரும்புது போல இருக்கே, பொற்கிழின்னாலே அந்த வார்த்தைக்கு ஒரு அதிர்வும் கனமும் கூடிடுது இல்ல”
“அதோட இன்னிக்கு பொற்கிழி அறுத்த பட்டர்பிரானை தான் பார்க்க போறோம். இவர் நம்ம ஆண்டாளை நந்தவனத்தில் கண்டெடுத்த பெரிய ஆழ்வார் தான். இவர் காலத்தில் வல்லபதேவ பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினான். ஒரு நாள் நகர சோதனைக்காக சென்ற போது ஒரு வீட்டுத் திண்ணையில் அந்தணன் ஒருவன் படுத்திருப்பதைக் கண்டு 'யார் நீ' எனக் கேட்டான்.
கங்கையில் நீராடி விட்டு தன் ஊர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தான். அவனிடம், 'எனக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லு' என மன்னன் கேட்க, ஒரு ஓலைச் சுவடியைக் கொடுத்தான். அதில் ஸ்லோகம் இருந்தது. அதன் பொருள் என்ன தெரியுமா? மழை காலத்திற்கு வேண்டிய உணவை வெயில் காலத்தில் சேகரிக்கலாம். இரவுக்கு வேண்டிய உணவை பகலில் தயார் செய்யலாம். முதுமையில் நிம்மதியுடன் வாழ இளமைக் காலத்தில் உழைக்க வேண்டும். அதே போல இந்த பிறவியில் அடுத்த பிறவிக்கு வேண்டியதை தேட வேண்டாமா என்பது தான்.
இந்த ஓலையை அமைச்சர்களிடம் காட்டி, 'அடுத்த பிறவிக்கு இப்போதே ஏதாவது செய்ய வேண்டும். நான் எந்த நிலையில் அதை தேட வேண்டும்' என ஆலோசித்தான். ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள்.
திருக்கோட்டியூரைச் சேர்ந்த மன்னரின் புரோகிதரும், அமைச்சருமான செல்வ நம்பி, 'மன்னா... சபையை கூட்டி அதில் வேதம், தத்துவங்களில் கரை கண்டவர்கள் சொல்லும் வழியை பின்பற்றலாம்' என்றார். இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. மன்னனின் சந்தேகத்தைப் போக்குபவருக்கு பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரண்மனை வாசலில் பொற்கிழியைக் (பண முடிப்பு) கட்டி வெல்வோர் கிழி அறுக்கலாம் என்றான் மன்னன். மதுரை நகரில் அறிஞர்களும் வேத வல்லுநர்களும் கூடினர். அவர்கள் சொன்ன வழிமுறைகள் எதிலும் மன்னனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஸ்ரீவில்லிபுத்துார் விஷ்ணுசித்தரின் கனவில் பெருமாள் தோன்றி 'கிழி அறுத்து வாரும்' என தெரிவித்தார். ஆழ்வாரோ முதலில் தயங்கினார். 'யாம் இருக்க பயமேன்' என்றார் பெருமாள். அதையே கடவுளின் கட்டளையாக ஏற்று மதுரைக்கு வந்தார். 'எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனை சரணடைவதே மறுமைக்கு தேவையான வழி' என புராண மேற்கோள்களுடன் விளக்கினார். அப்போது பொற்கிழி கட்டிய தோரணம் வளைந்து அவர் அறுக்க ஏதுவாக நின்றது. அனைவரும் அதிசயித்தனர். பொற்கிழியை அறுத்தார் விஷ்ணுசித்தர்.
மன்னரின் சந்தேகத்தைப் போக்கிய விஷ்ணுசித்தருக்கு 'பட்டர் பிரான்' என விருது கொடுத்து யானையின் மீதேற்றி நகரை வலம் வந்தான் மன்னன். அதைக் காண பெருமாளும் கருடன் மீது காட்சியளித்தார். எம்பெருமானின் பேரழகை கண்டு மகிழ்ந்தாலும் ஊராரின் கண் படுமே என பயந்த விஷ்ணு சித்தர் யானையின் மணியை தாளமாகத் தட்டி,
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நுாறாயிரம் மல்லாண்ட
திண்தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வி திருகாப்பு”
என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடினார். கடவுளாகிய தனக்கே திருஷ்டி கழித்ததால் ஆழ்வார்களில் பெரியவர் என்ற பொருளில் 'பெரிய ஆழ்வார்' என பெருமாள் அழைக்க அதுவே நிலைத்தது” என்றார் கிருஷ்ணவேணி.
“ஆமா, பல்லாண்டு பாசுரங்களில் அப்படி என்ன பாடி இருக்கிறார் பட்டர்பிரான்?”
“மக்கள் அனைவரையும் வேறுபாடு இல்லாமல் நாராயணனை வழிபட வாருங்கள் என அழைக்கிறார். பெருமாள் அடியார்களிடம் ஜாதி வேறுபாடு இல்லை. ஆயிரம் நாமம் சொல்லி அவனுக்கு அடியவராகி விட்டால் அவர்களின் முந்தைய குலம் தொலையும். அவர்கள் எல்லாம் அந்த தொண்டர் குலத்தில் சேர்வர் என புரட்சியான கருத்து அதில் உள்ளது.
பொற்கிழியை பெருமாளின் திருப்பணிக்காக அளித்தார் பட்டர்பிரான். அவரைப் போல நாராயணனே பரம்பொருள் என நான் சொல்லவில்லையே சுவாமி... அவனிடம் அந்த அளவுக்கு பக்தி செய்யவில்லையே என வருந்தினாள் பெண் பிள்ளை. ராமானுஜருக்கு அதன்பின் பெண்பிள்ளை மீதான அபிமானம் இன்னும் சற்று உயர்ந்தது” என்றார் கிருஷ்ணவேணி.
“பட்டர்பிரான் அறுத்த பொற்கிழியைக் கேட்டதும் தருமிக்கு கிடைத்த பொற்கிழி ஞாபகம் வருது” என சிரித்தார் அமிர்தம்.
“ஆமா, திருவிளையாடல் கதை தானே?”
“அதே தான். பட்டர் பிரானை போய் பயப்படாம பதிலைச் சொல்லி கிழி அறுத்துட்டு வான்னு பெருமாள் சொன்னாரே. அதே போல தருமிகிட்ட தன் கவிதையை சிவன் கொடுத்து, நீ எழுதியது போல் சபையில் வாசித்துக் காட்டி பொற்கிழியை பெற்று வா என உத்தரவிட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை தான் இது”
“இப்போ ஒரு முறை சொல்லுங்களேன்” என கெஞ்சினார் கிருஷ்ணவேணி.
“சொன்னா போச்சு. இந்த கதையும் மதுரையில தான் நடந்தது. வங்கி சூடாமணி பாண்டியன் மதுரையை ஆட்சி செய்தான். ஒருநாள் செண்பகத் தோட்டத்தில் ஓய்வெடுத்தான் மன்னன். அப்போது அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
தன் மனைவியின் கூந்தலில் வரும் நறுமணம் கண்டு மகிழ்ந்த மன்னன், பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா எனக் கேட்டான். இந்த சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தரப்படும் என அறிவித்து பொற்கிழியை கட்டி வைத்தான். மதுரையில் தருமி என்ற ஏழை புலவன் ஒருவன் இருந்தான். மண வாழ்வுக்காக காத்திருந்த அவன், மன்னன் அறிவித்த செய்தியை அறிந்தான். அப்போது புலவர் வடிவில் வந்த சொக்கநாதர், சந்தேகத்தை தீர்க்கும் வகையில் ஒரு பாடலை பாடி, அதை காட்டி பரிசைப் பெற்றுக் கொள் என்றார்.
தருமியும் அவைக்குச் சென்று பாடலை காட்டினான். அதில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டு என்ற செய்தி மறைமுகமாக சொல்லப்பட்டிருந்தது. மன்னனும் மகிழ்ந்து பொற்கிழியை பரிசாக தர முன்வந்தான். ஆனால் தலைமை புலவர் நக்கீரர் அந்தப் பாடலில் பொருள் குற்றம் உள்ளதாகச் சொல்லி தடுத்தார்.
தருமி ஓடோடி வந்து புலவராக வந்த சிவனிடம் முறையிட்டார். சிவனும் புலவர் வடிவிலேயே தருமியுடன் அவைக்குச் சென்று நக்கீரனுடன் வாதம் புரிந்தார். அப்போது சிவன், 'அப்படி என்றால் இறைவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா?' என கேள்வி எழுப்பினார். 'எந்த பெண்ணுக்கும் இயற்கையில் மணம் இருக்காது' என்றார் நக்கீரர். கோபத்தில் நெற்றிக்கண்ணை காட்டினார் சிவன்.
அப்போதும், 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்றார் நக்கீரர். அவரை எரித்தார் சிவன். பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணத்தில் 64 திருவிளையாடல்கள் உள்ளது. அதில் 52வது திருவிளையாடல் இது. வறுமையில் வாடிய பக்தனுக்கு சிவன் கவிதை எழுதிக் கொடுத்து உதவியதாக கதை முடியும். கடைசியில் உன்னால் என் சந்தேகம் தீர்ந்தது என தருமிக்கு பொற்கிழியை பரிசளித்தான் மன்னன்”
''ஆஹா இரண்டு கதைகளிலும் பொற்கிழி வருதே. முதல்கிழி பட்டர் பிரானுக்கும், இரண்டாவது கிழி தருமிக்கும் கிடைக்குது. நாளைக்கு என் பேரனுக்கும் பொற்கிழி கிடைக்கப் போகுது. எப்படியோ எல்லாருக்கும் பரிசு கிடைச்சா சந்தோஷம் தான். நாளைக்கு பொற்கிழி வாங்கிட்டு வந்ததும் அங்க நடந்த கதைய சொல்றேன்”
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
