தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நான் கடவுள்

நான் கடவுள்

நான் கடவுள்


ADDED : ஏப் 23, 2026 12:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 12:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சகலாகம பண்டிதர் என்ற குருநாதரிடம் சீடர்கள் பாடம் கற்றனர். ஏழை, பணக்காரர் என யாராக இருந்தாலும் குருகுலத்தில் தங்கித்தான் படிக்க வேண்டும். குருநாதர் கட்டளையிடும் வேலைகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சீடர்கள் செய்வார்கள். நாள் முழுவதும் வேதம், தத்துவ பாடங்களை நடத்துவார் பண்டிதர். இடையிடையே சமையல், பசு பராமரிப்பு, தோட்டம் என பலவித கடமைகள் சீடர்களுக்கு காத்திருக்கும்.

ஒருநாள் வேதாந்த பாடத்தில், 'அகம் பிரம்மம்'... அதாவது 'நான் கடவுள்' என்ற தத்துவத்தை நடத்தினார். பாடம் முடிந்ததும் சீடர்கள் அவரவர் வேலைகளைச் செய்ய புறப்பட்டனர். குருவுக்குப் பணிவிடை செய்ய கோவிந்தன் என்ற சீடன் மட்டும் அவருடன் இருந்தான்.

நாற்காலியில் சாய்ந்தபடி ஓய்வெடுத்த பண்டிதரின் கால்களை பிடித்தபடி, ''குருவே! நான் கடவுள் தானே!'' என்றான் கோவிந்தன்.

''ஆமாம்! நுாற்றுக்கு நுாறு உண்மை'' என்றார்.

''நான் கடவுள் என நீங்களே சொல்கிறீர்கள். அப்புறம் எதற்காக கடவுளை அறிய வேண்டும் என இந்த குருகுலத்திற்கு நாங்கள் ஏன் வர வேண்டும். நீங்கள் ஏன் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டும்?'' எனக் கேட்டான்.

அப்போது பசுக்கொட்டிலில் இருந்து பாலைக் கொண்டு வந்தான் சீடன் மாதவன்.

''மாதவா! கறந்த பாலை அப்படியே வைத்தால் என்னாகும்?'' என்றார்.

கேள்விக்கு பதில் சொல்லாமல், மாதவனிடம் பேசுகிறாரே குருநாதர் என மனம் சலித்தான் கோவிந்தன்.

''குருவே! பச்சைப் பால் சில மணி நேரம் வேண்டுமானால் தாங்கும்! பிறகு கெட ஆரம்பிக்கும். காய்ச்சினால், பலமணி நேரம் கெடாது'' என்றான்.

குரு திரும்பவும், ''மாதவா! காய்ச்சிய பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?'' என்றார்.

''மோரை உறை விட்டு தயிராக்குவோம்'' என்றான்.

அடுத்த கேள்வி என்ன கேட்பார் என ஊகித்த கோவிந்தன், ''குருவே! தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்போம். வெண்ணெய்யை உருக்கினால் கமகமவென நெய்யாகும். நெய்யைச் சாதத்தில் விட்டால் நன்றாகச் சாப்பிடலாம்'' எனச் சொல்லி முடித்தான்.

''சபாஷ் கோவிந்தா! கேள்விக்கான விடையை நீயே சொல்லி விட்டாய். கமகமவென மணக்கும் நெய் இந்த பாலில் தானே இருக்கிறது. இப்போது ஏன் தென்படவில்லை?'' என்றார்.

இவ்வளவு நேரமும் தனக்குத் தான் பாடம் நடத்தினார் என்ற உண்மை கோவிந்தனுக்கு புரிந்தது.

''பாலில் நெய் இருப்பது போல, கடவுள் நம் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கிறார். கடவுளை அறியும் அறிவு எல்லோருக்கும் இருக்கிறது. பால் நெய்யாக மாறுவதற்கு பல படிநிலை இருப்பது போல கடவுளை அறிய நமக்கும் பல நியமங்கள் இருக்கின்றன. அதைத் தான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

ருசியும், மணமும் மிக்க நெய்யாக மாறும் பாலைப் போல, குருகுலத்தில் படிக்கும் நீங்களும் உங்களையே அறிந்த நல்ல பிள்ளைகளாக திகழ்வீர்கள்'' என்றார்.

சகலாகம பண்டிதரின் சீடனாக இருப்பதை எண்ணி பெருமைப்பட்டான் கோவிந்தன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us