தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 21

தெய்வத் திருமணம் - 21

தெய்வத் திருமணம் - 21


ADDED : ஏப் 23, 2026 12:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 12:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாரதி - காலத்துவஜன் திருமணம்

வைகுண்டத்தில் ஆதிசேஷன் மீது திருமால் படுத்திருந்தார். அவரின் காலருகில் அமர்ந்திருந்த மகாலட்சுமி, அவரது காலைப் பிடித்து விட்டபடி பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், 'நாராயணா! நாராயணா!' என்றபடி நாரதர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும், மகாலட்சுமி நாணத்துடன் அங்கிருந்து எழுந்து உள்ளே சென்றார்.

இதற்கு முன்பு நாரதர் வந்தால் மகாலட்சுமி மகிழ்வுடன் அவரை வரவேற்பார். ஆனால், இன்று அவர் சென்றதைக் கண்டதும் நாரதர் கவலையடைந்தார். அங்கிருந்து திரும்பிச் செல்ல நினைத்தார்.

அதனைக் கண்ட திருமால், ''உள்ளே வாருங்கள், தங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்றார். நாரதருக்கு தயக்கமாக இருந்தது. அதனால் சற்று தாமதித்தார். அதைக் கண்ட திருமால், ''என்ன முனிவரே தயக்கம், உள்ளே வாருங்கள்'' என்றார்.

''எம்பெருமானே, வழக்கமாக இங்கு வரும் போது என்னை வரவேற்கும் தாயார், இன்று என் குரலைக் கேட்டதும் எழுந்து உள்ளே சென்றதை நினைத்து கவலையாக இருக்கிறது'' என்றார் நாரதர்.

''பெண்கள் தன் கணவருக்கு அருகில் இருக்கும் போது, பிறர் வந்தால் எழுந்து செல்வது வழக்கம்தானே, அதில் என்ன தவறு கண்டீர்கள்?'' எனக் கேட்கவும்,

''பிரம்மச்சாரியான என்னைக் கண்டு, தாயார் ஏன் உள்ளே செல்ல வேண்டும்'' என நாரதர் திரும்பக் கேட்டார்.

அதனைக் கேட்ட திருமால், ''நீங்கள் பிரம்மச்சாரி என எப்படிச் சொல்கிறீர்கள்? என புரியவில்லை'' என்றார். அதிர்ச்சியடைந்த நாரதர்,

'' பிரம்மச்சாரியான என் மீது தங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டதா?'' என வருத்தப்பட்டார்.

உடனே திருமால் ''தாங்கள் பர்வத முனிவருடன் பூவுலகிற்குச் சென்று, சஞ்சயன் அரண்மனையில் தங்கியிருந்து, சஞ்சயன் மகள் தமயந்தியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததை மறந்து விட்டீர்களா? அதற்கு முன்பாக, ஸ்ரீமதியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, அவரது சுயம்வரத்தில் கலந்து கொண்டதை மறந்து விட்டீர்களா?” எனக் கேட்டார்.

மேலும் அவர், “சிவபெருமான், பிரம்மன், நான், நீங்கள் மற்றும் தேவர்கள் என அனைவரும் மாயைக்குக் கட்டுப்பட்டவர்கள்தானே?'' என்றார்.

''அப்படியென்றால் மாயையை எவராலும் வெல்ல முடியாதா? மாயையைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்'' என்றார் நாரதர்.

திருமால் அவரை அழைத்துக் கொண்டு பூலோகத்திற்கு வந்தார். கன்யாகுப்ஜம் என்ற நகரத்திற்கு அருகிலிருந்த ஒரு குளக்கரைக்கு இருவரும் வந்தனர். அப்போது திருமால், ''நான் இந்தக் குளக்கரையில் இருக்கிறேன். நீங்கள் இக்குளத்தில் இறங்கி நீராடிவிட்டு வாருங்கள்'' என்றார்.

மாயையை விளக்குகிறேன் என பூவுலகிற்கு அழைத்து வந்த திருமால், தற்போது குளத்தில் இறங்கி நீராடி வரச்சொல்வது ஏன் எனத் தெரியாமல் விழித்தார். ஆனாலும் தன் வீணையைத் திருமாலிடம் கொடுத்து விட்டுக் குளத்தில் மூழ்கி எழுந்த போது அவர் பெண்ணாக மாறியிருந்தார். உடனிருந்த திருமாலை காணவில்லை.

குளத்தில் இருந்து வெளியே வந்த நாரதர், முழுமையான பெண்ணாக மாறிவிட்டதை உணர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு நாரதர் என்பதே மறந்து போனது. பெண்ணாக மாறிய நாரதர், ''நான் யார்? நான் எங்கிருந்து இங்கு வந்தேன்'' என புரியாமல் நின்று கொண்டிருந்தார். இங்கிருந்து பெண்ணாக மாறிய நாரதரை இனி 'நாரதி' என்ற பெயரால் அழைப்போம்.

அங்கு வந்த அந்த நாட்டின் மன்னன் காலத்துவஜன், குளக்கரையில் நின்றிருந்த நாரதியைக் கண்டு மயங்கினான். அவளருகில் வந்த காலத்துவஜன், அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னான். பெண் உருவத்தில் இருந்த நாரதருக்கும் தான் யார் எனத் தெரியாத நிலையில், மன்னரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

மன்னன் காலத்துவஜன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அதன் பின்னர், ஒரு நல்ல நாளில் நாரதியைத் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைகள் அனைத்தும் வளர்ந்து திருமண வயதை அடைந்தனர். பின்னர் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்று, அவர்களும் பல குழந்தைகளைப் பெற்றனர்.

இந்நிலையில் அடுத்த நாட்டு மன்னன் ஒருவன், பெரும்படையுடன் வந்து அவர்களுடன் போர் செய்தான். அப்போரில், மன்னரின் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர். மன்னன் காலத்துவஜனும், அவனது மனைவியான நாரதியும் மட்டும் உயிரோடு இருந்தனர். நாரதி தன் குடும்பத்திலுள்ள அனைவரையும் இழந்து விட்டதை எண்ணி கவலை கொண்டார்.

அப்போது அங்கு வந்த முனிவர் ஒருவர், ''பெண்ணே... பிறப்பும் இறப்பும் இயல்பானது அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், கன்யாகுப்ஜம் நகரத்தில் இருக்கும் குளத்தில் நீராடி, இறப்புக்குப் பின் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்'' என்றார்.

முனிவர் சொல்வது சரியெனத் தோன்றியது. உடனே அவள், குறிப்பிட்ட குளத்திற்குச் சென்று மூழ்கி எழுந்தாள். அப்போது அவளுடைய பெண் உருவம் மாறி, நாரதரின் சுயஉருவம் வந்தது. சுயஉருவத்தைப் பெற்ற நாரதர், அக்குளத்திலிருந்து வெளியேறிக் குளக்கரைக்கு வந்தார். நாரதருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

அப்போது அங்கு வந்த மன்னன் காலத்துவஜன், தன் மனைவியைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட முனிவர், அவள் உன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள், அவளை மறந்து மனதை ஒருநிலைப்படுத்தித் தவம் புரிந்து முக்தியடைவாயாக'' என்றார். அவனும் அதை ஏற்று தவம் செய்யச் சென்றான்.

குளக்கரையில் நின்றிருந்த முனிவர் அப்போது திருமாலாக மாறினார். அவரது கையில், நாரதரின் வீணை இருந்தது. திருமால் அதைக் கொடுத்து, “நாரதரே, தற்போது தங்களுக்கு மாயை என்றால் என்ன என்று தெரிந்திருக்குமே'' எனச் சிரித்தார்.

நாரதரின் மனதில் முன்பு குளத்தில் நீராடிப் பெண்ணாக மாறியது முதல், தற்போது அதே குளத்தில் நீராடி, மீண்டும் நாரதராக மாறியது வரையிலான நிகழ்வுகள் தோன்றி மறைந்தன. உடனே நாரதர் ''நான் பெண்ணாக இருந்த போது யாரென்று அறிய முடியவில்லை. அது ஏன்'' எனக் கேட்டார்.

திருமால் சிரித்துக் கொண்டே, “நாரதரே, அதுதான் மாயை. நீங்கள் பெண்ணாக இருந்த போது, மாயை ஆட்கொண்டிருந்தது. அதனால் தங்களின் முற்பிறவி நினைவுகள் தெரியாமல் இருந்தது. அந்த மாயையை எவராலும் வெல்ல முடியாது” என்றார்.

நாரதருக்கு மாயையின் தன்மை புரிந்தது. உடனே அவர், “மாயையில் இருந்து விடுபட கடவுளைச் சரணடைவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றார். அதனைக் கேட்டுச் சிரித்த திருமால், நாரதருடன் பூவுலகிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us