தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 25

சித்தர்களின் விளையாட்டு - 25

சித்தர்களின் விளையாட்டு - 25


ADDED : ஏப் 23, 2026 12:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 12:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காகபுஜண்டர்

“மகேஸ்வரரே, காகமும் ஒரு பறவைதானே. ஆனால் வேறு எந்த பறவைக்கும் இல்லாத பெருமை காகத்திற்கு இருக்கிறது? நம் முன்னோர்களுக்கு உணவு படைக்கும் போது காகத்தை அழைப்பது ஏன்?” என நாரதர் கேட்டார்.

“நாரதரே! ஒன்றும் தெரியாதது போல் கேட்கிறீரே. காகங்கள் பல யுகங்கள் வாழக் கூடியவை. பிரளய காலங்களை முன்பே கணித்து வேறு இடங்களுக்குச் சென்றுவிடக் கூடியன. மனிதர்கள் இப்பொழுது எத்தனையாவது பிறவி எடுத்திருக்கிறார்கள், இதற்கு முன் எத்தனை பிறவி எடுத்தார்கள், இன்னும் எத்தனை பிறவி எடுப்பார்கள் என்பதைக் காகங்கள் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கும். ஆகவேதான் நமது முன்னோர்கள் ஏதேனும் ஒரு ரூபத்தில் நம்மைச் சுற்றியிருப்பார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு படைத்ததை அறிவிக்க வேண்டும் என்பதற்குத்தான் காகத்தை படையல் உண்ண அழைக்கின்றனர் இந்த மானிடர்கள்” எனக்கூற மகேஸ்வரி ஆமோதித்தார்.

“மகேஸ்வரரே! தாங்கள் காகமாக உருவெடுக்க வைத்த புஜண்டர் சித்தரைப்பற்றி நாரதருக்கு நான் சொல்லவா?” என மகேஸ்வரி கேட்க, “சக்தியின் சொல்லுக்கு சிவத்தின் மறுப்பேது” என மகேஸ்வரர் புன்னகைத்தார்.

மயிலாடுதுறையில் பிறந்தவர் புஜண்டர். பிறக்கும் பொழுதே அனைத்து கலைகளிலும் வல்லவராக விளங்கினார். தனது கரங்களாலும் பதினாறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் வல்லமை படைத்தவராக விளங்கினார். அதனால் அவருக்கு 16 கைகள் காணப்பட்டன. அவரது பக்தியையும் புலமையையும் கண்டு அவரது பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

அவருக்கு துணையாக பதினாறு கலைகளை கற்றறிந்த பெண்ணை மணம் செய்விக்க விரும்பினர்.

சம்பூக முனிவரின் புதல்வி பகளாதேவியும் 16 கலைகளை கற்றுத் தேர்ந்தவர். ஆகவே இருவருக்கும் மணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்ய கலைகளின் அரசி கலைவாணி தாயாக நின்று யாகம் செய்து, அவர்களுக்கு வெகுவிமரிசையாக மணம் செய்துவித்தார்.

காகபுஜண்டரின் அறிவாற்றலை மெச்சிய மகேஸ்வரரும், மகேஸ்வரியும் நேரில் வந்து அவர்களை ஆசீர்வதித்தனர். இதனால் மனமுருகிய காகபுஜண்டர் மயிலாடுதுறையில் மயூரநாதனை வேண்டி கற்பக மரத்தின் அடியில் அமர்ந்து கடும் தவம் செய்ய ஆரம்பித்தார்.

மயூரநாதரை தரிசிக்க ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் சிவபெருமானின் வரலாற்றை விளக்கிக் கூறினார்.

கற்பக விருட்சத்தில் அமர்ந்து, காமதேனுவை அருகில் வைத்து பூஜித்து சிவ வழிபாடு செய்துவந்த காகபுஜண்டரின் புகழ் அகிலமெங்கும் பரவியது.புஜண்டரின் பக்தியில் மனமுருகிய மயூரநாதர் புஜண்டர் முன்பு தோன்றினார். அவரது பக்தியை மெச்சி அவரது 16 கரங்களும், இறக்கைகளாக மாறி, காக்கை உருவத்தில் கற்பக மரத்தில் அமர்ந்து இந்த பிரபஞ்சத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

புஜண்டருக்கு பல்வேறு யுகங்கள் உயிர்வாழும் சாகா வரத்தை அருளினார். காக உருவில் சித்தராக அருள் புரிந்து வாதம், வைத்தியம், இரசவாதம், யோகம், ஞானம் ஆகியவற்றில் பல்வேறு நுால்களை இயற்றி காகபுஜண்ட சித்தர் என பெயர் பெற்றார்.

ஒருமுறை காகபுஜண்டரை சந்திக்க விரும்பினார் வசிஷ்ட முனிவர். அவரைத் தேடி வரும் வழியில் ஒரு கற்பக மரத்தில் அவரைக் கண்டு வணங்கினார்.

அப்போது காகபுஜண்டர் அவரிடம், “வசிஷ்டரே! வாருங்கள், தாங்கள் வருவது எனக்குத் தெரியும். ஆனாலும் தாங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை தாங்களே சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றார்.

ஆனால் வசிஷ்டரோ சோதிக்க எண்ணி, “தாங்கள் தான் எல்லாம் அறிந்தவராச்சே? நான் வருந்திருப்பதன் காரணம் உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்.

புன்னகைத்த காகபுஜண்டர் “சிவபெருமானை மகிழ்விப்பதே என் கடமை. இப்பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்படும் போதெல்லாம் வேறு உலகத்துக்குச் சென்று மீண்டும் பிரளயம் அடங்கிய பின்பு இங்கே வருவேன், ஆகையால் இப்பூலோகத்தின் பிறப்பு, இறப்பு அனைத்தும் எனக்குத் தெரியும்” என்றார்.

“அதுமட்டுமல்ல வசிஷ்டரே!, இது தங்களுக்கு எட்டாவது பிறவி. இதுவே தங்களுக்கு கடைசி பிறவியும் கூட. அதைக் கேட்கத்தானே என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?” என்றார் காகபுஜண்டர்.

வசிஷ்டரோ வணங்கியபடி “சித்தரே! தாங்கள் முற்றிலும் உணர்ந்தவர். என் நோக்கத்தை அப்படியே சொல்லி விட்டீரே. பிறவா வரத்தை வேண்டி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். இதுதான் எனது கடைசி பிறவி என்பதை தெரிந்து பெருமகிழ்ச்சி கொண்டேன்” என்றார்.

காகபுஜண்டர் தன் ஞானத்தால் 16 திருப்பெயர்களை பெற்றார். அனைத்து உயிர்களுக்கும் தொடர்ந்து நல்வழிகளை இன்றும் காக வடிவில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். பூலோகம், ஏழு உலகம், பதிமூன்று உலகம், மற்றும் பதினான்கு உலகங்களில் எல்லாம் தர்மம் தழைத்தோங்க, பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழும் முறைகளை இன்றும் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

துாய செயல்கள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்தும் நியமத்தை பின்பற்றி கர்மசித்தியும், மனதை ஒருநிலைப்படுத்தி துாய்மையாக வைத்திருந்து மந்திரங்களை கற்றுத் தேர்ந்து இயமத்தை பின்பற்றி ஞானசித்தியும் அடையலாம் எனக் கற்றுக் கொடுத்தார்.

உலக இன்பத்தைப் பெற கர்மசித்தியும், ஞான இன்பத்தை பெற ஞானசித்தியும் அவசியம் என்ற அவருடைய உபதேச மந்திரம் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகிறது.

தன் இயம நியம மந்திரங்களை பெருநுால் காவியம் 1000, ஞான காவியம் 33, மெய்ஞான விளக்கம் 80, சூத்திரம் 500, ஞானக்குறள் 19 மற்றும் பல்வேறு நாடி ஜோதிட நுால்களாக காகபுஜண்டர் எழுதியுள்ளார்.

பிரளயம் ஏற்படும் போதெல்லாம் அதை அறிந்து வேறு உலகுக்குச் சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் ஆற்றல் பெற்றவை காகம் என அறிந்த நாரதர் வியந்தார்.

“மகேஸ்வரரே! காகத்தை முன்னோராக வழிபடுவதை அறிந்து கொண்டேன். தங்களின் பெருமையை போற்றும் சித்தர்களுக்கு என்றும் அருள்புரியும் தங்களின் பாதம் பணிகிறேன்” என்றார்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us