தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 24

தெய்வத் திருமணம் - 24

தெய்வத் திருமணம் - 24


ADDED : மே 14, 2026 12:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செவ்வாய் பகவான் - ஜூவாலினி திருமணம்

அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றினார். அப்போது அவன், “என்னுடைய ரத்தம் மண்ணில் விழுந்தால், அதிலிருந்து என்னைப் போல நுாற்றுக்கணக்கான அரக்கர்கள் பிறக்க வேண்டும்” என வரம் தரும்படி வேண்டினான். சிவபெருமானும் கேட்ட வரத்தைத் தந்தார்.

பெற்ற வரத்தால் தன்னை இனி யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவம் அசுரனுக்கு ஏற்பட்டது. முனிவர்கள், மக்கள் என அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவனது கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்ட முனிவர்கள் தங்களைக் காக்கும்படி சிவபெருமானை வேண்டினர்.

சிவபெருமான் அந்தகாசுரன் முன் தோன்றினார். தன் முன்பு நிற்பவர் சிவபெருமான் என்பதை அறியாத அசுரன், எதிர்த்துச் சண்டையிடத் தொடங்கினான்.

அந்தப் போர் முடிவடையும் நேரத்தில், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தன. அந்த வியர்வைத் துளிகள் பூமியின் நிலத்தை இரண்டாக பிரித்தது. பிரிந்த பகுதி புதிய கிரகமாகத் தோற்றம் பெற்றது.

சிவபெருமானின் தாக்குதலால் காயமடைந்த அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகள் பூமியிலிருந்து பிரிந்து உருவான புதிய கிரகத்தில் விழுந்தன. அதனால் அந்தகாசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரம் பலனில்லாமல் போனது. அசுரனின் ரத்தம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்ட புதிய கிரகம் சிவப்பு நிறமாக மாறியது. இறுதியில் சிவபெருமானால் அசுரன் கொல்லப்பட்டான்.

புதிய கிரகம் சிவப்பு நிறமாக இருந்ததால், சிவப்பு நிறத்தவன் என்ற பொருளில் 'அங்காரகன்' எனப்பட்டது. இதை அம்+காரகன் என பிரித்துப் பொருள் கொண்டால், 'நேர்மையான செயல்களைச் செய்பவன்' என பொருள் கொள்ளலாம். இதே போல பூமியில் இருந்து பிரிந்தவன் என்பதால், 'பூமியின் புதல்வன்' என்ற பொருளில் அவனுக்கு 'பவுமன்' என்றும் பெயர் வந்தது.

அப்போது அவன் முன்பாகத் தோன்றிய சிவபெருமான், “புதிய கிரகமாகத் தோற்றம் பெற்ற நீ நவக்கிரகத்தில் ஒருவராகி ' செவ்வாய் பகவான்' என அழைக்கப்படுவாய். பூவுலக மனிதர்களுக்கு உடல் வலிமை, தன்னம்பிக்கை, மன உறுதியை வழங்கும் கிரகமாகவும், வீடு, மனை, வாகனம், சொத்துகள் வாங்கும் யோகத்தைத் தரும் கிரகமாகவும் இருப்பாய். செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமணத் தடை அகலவும், நிலம், வீடு தொடர்பான பிரச்னை தீர செவ்வாய் பகவானான உன்னை வழிபடுவர்” எனச் சொல்லி மறைந்தார்.

கைலாயத்தில் ஒருமுறை பார்வதி மகிழ்ச்சியான மனநிலையில் சிவபெருமானைப் பார்த்து புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் இருந்து பொன்னிற உடலுடன் ஒளிமயமான தோற்றத்தைக் கொண்ட அழகான பெண் குழந்தை தோன்றியது.

இனிய புன்னகையுடன் இருந்த அந்த குழந்தையைப் பார்த்த பார்வதி, “என் புன்னகையில் தோன்றிய உன் வடிவம் அறிவொளியையும், உருவ மாற்றத்தையும் குறிக்கும் வகையில் எரிபொருள் இல்லாமல் எரியும் நெருப்பின் வடிவமாக இருக்கும். அதனால் 'ஜூவாலினி' என அழைப்பர்.

கட்டுக்கோப்பான ஆற்றல், துணிவு போன்றவை உன் அடையாளமாக இருக்கும். எதிர்மறையான எண்ணத்தை போக்கி நல்ல பலன்களைத் தரும் தெய்வமாக வழிபடப்படுவாய்” என வாழ்த்தினார்.

ஜூவாலினி கைலாயத்திலேயே வளர்ந்து பெரியவளானாள். பார்வதி அவளுக்குத் தகுந்த ஒருவரைத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றாள். உடனே சிவபெருமான், 'என்னுடைய வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்து, புதிதாகத் தோற்றம் பெற்ற செவ்வாய்க் கிரகத்தின் கடவுளான அங்காரகனுக்கு ஜூவாலினியைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்றார். பார்வதியும் சம்மதித்தாள்.

அதன் பிறகு, திருமண ஏற்பாடுகளை நந்தி பகவான் தலைமையில் சிவ கணங்கள் செய்யத் தொடங்கினர். ஒரு நன்னாளில், சிவபெருமான், பார்வதி முன்னிலையில் அங்காரகன், ஜூவாலினி திருமணம் நடைபெற்றது. இதில் சிவகணங்கள், தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.

“மனிதர்களுடைய வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, சொத்து வாங்குதல் போன்றவை முக்கிய நிகழ்வாக உள்ளன. அதற்கு செவ்வாயின் அருள் தேவையாக இருக்கும். இதே போல தம்பதி ஒற்றுமையுடன் வாழவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், சொத்து பிரச்னை தீர்வதற்கும் செவ்வாயின் அருள் வேண்டும்” என சிவபெருமான் வாழ்த்தினார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த செவ்வாய் பகவானும், ஜூவாலினியும் நன்றியுடன் சிவபெருமான், பார்வதியை வணங்கினர். அதன் பின் இருவரும் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றனர்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us