தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 29

தெய்வத் திருமணம் - 29

தெய்வத் திருமணம் - 29


ADDED : ஜூன் 25, 2026 10:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரசிங்கப்பெருமாள் - செஞ்சு லட்சுமி திருமணம்

சத்ய யுகத்தில் காசியப முனிவர், திதி தம்பதிக்கு இரணியகசிபு, இரணியாட்சன் என்ற இரண்டு அசுரர்கள் பிறந்தனர்.

வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனைக் கொன்றார் திருமால். சகோதரனைக் கொன்ற திருமாலை எப்படியாவது அழிக்க வேண்டுமென நினைத்த இரணியகசிபு, தனக்கு எந்த வழியிலும் இறப்பு வராத வரத்தைப் பெற பிரம்மாவை வேண்டித் தவமிருந்தான். அவனுடைய கடும் தவத்தில் மனமிரங்கிய பிரம்மா, அவன் முன்பாகத் தோன்றினார்.

அப்போது இரணியன், “மனிதர், மிருகம், பறவை, பிரம்மா, அவரால் படைக்கப்பட்டவர்கள், ஆகாயம், பூமி, பகல், இரவு, வீட்டிற்குள், வீட்டுக்கு வெளியில் என எங்கும் யாராலும் இறப்பு வரக் கூடாது'' என புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். மேலும், “தனக்குப் போட்டியாக யாரும் இருக்கக் கூடாது. அனைத்து உயிரினங்கள்,

தேவர்களுக்கு தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும்” என இன்னொரு வரமும் கேட்டான். பிரம்மாவும் கேட்ட வரங்களைத் தந்தார். வலிமை பெற்ற இரணியன் தனக்கு இனி இறப்பே வராது என நினைத்தான். தனக்குக் கிடைத்த சக்தியைக் கொண்டு தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான்.

தன்னை மட்டுமே கடவுளாக வணங்க வேண்டும் என அச்சுறுத்தினான். அவனிடமிருந்து தப்பித்துச்சென்றவர்கள் திருமாலிடம், தங்களைக் காக்கும்படி வேண்டினர். அவரும் அசுரனை அழித்து காப்பதாக கூறினார்.

இதன்பின் வைகுண்டத்தில் இருந்த மகாலட்சுமி தானும் பூமிக்கு வந்தாள். அடர்ந்த காட்டில் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் பெண் குழந்தையாகத் தோன்றினாள். அந்தக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்த பழங்குடியினத் தலைவன், அக்குழந்தைக்கு செஞ்சு என பெயரிட்டான். சிறு வயதில் இருந்து வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தாள். வீரம் மிகுந்தவளாகவும் இருந்தாள்.

இந்நிலையில் இரணியனின் மனைவி கயாது கருவுற்றாள். ஒருநாள் நாரதர் அவளைக் காண வந்தார். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, கருவில் இருந்த குழந்தைக்குத் திருமாலே கடவுள் என போதனை செய்தார். கயாதுவின் குழந்தைக்கு 'பிரகலாதன்' என பெயரிடப்பட்டது.

பிரகலாதனுக்குக் கல்வி கற்கும் வயது வந்ததும் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இரணியன்தான் கடவுள் என சுக்கிராச்சாரியார் போதிக்க, அதை மறுத்த அவன், திருமால்தான் கடவுள் என மாற்றிச் சொன்னான்.

இந்த செய்தியை அறிந்த இரணியன் தன் மகன் பிரகலாதனை மாற்ற முயற்சித்தும் பலன் இல்லை. ஆத்திரமடைந்த இரணியன் யானையின் காலால் மிதித்தல், விஷ பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷம் அருந்தச் செய்தல், தீக்குள் இறக்குதல் என பலவழிகளில் கொல்ல முயற்சித்தான். திருமால் மீது கொண்ட பக்தியால் பிரகலாதன் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டான்.

இரணியன் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியடைந்ததால், பிரகலாதனைத் தானே கொல்வது என முடிவு செய்தான். அப்போதும் பிரகலாதன் பயமின்றி திருமால் தன்னைக் காப்பார் என்றான். அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அவன் பிரகலாதனிடம், நீ சொல்லும் கடவுள் திருமால் எங்கிருக்கிறார்? காட்டு, நானே அவரைக் கொல்கிறேன் என்றான்.

பிரகலாதன் தன் கடவுள் திருமால் எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார், துாணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றான். இரணியன் அருகிலிருந்த துாணைக் காட்டி, இந்தத் தூணில் உன் கடவுள் இருக்கிறாரா? எனக் கேட்டான். பிரகலாதனும், அந்த துாணை உடைத்துப் பாருங்கள், அதிலும் என் கடவுள் திருமால் இருப்பார் என்றான்.

அதனைக் கேட்டுக் கோபமடைந்த இரணியன், துாணை உடைக்கத் தன்னிடமிருந்த கதாயுதத்தை ஓங்கினான். அப்போது துாணில் இருந்து மனித உடலும், சிங்க முகமும் கொண்ட புதிய உருவம் வெளியே வந்தது. அந்த உருவம் இரணியனைத் துாக்கிக் கொண்டு சென்றது. அரண்மனைக்கு உள்ளேயும் இல்லாமல், வெளியிலும் இல்லாமல் வாசலில் அமர்ந்து, பகலும் இல்லாமல், இரவும் இல்லாமல், மாலையும் இரவும் சந்தித்த வேளையில், அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, தன்னுடைய கூரிய கை நகங்களால் மார்பைப் பிளந்து கொன்றது.

இரணியனின் உடலிலிருந்து வெளியேறிய ரத்தத்தைப் பூமியில் விழாதபடி குடித்த அந்த நரசிங்கம், அவன் உயிரிழந்த பின்பு அந்த உடலைத் துாக்கி எறிந்தது. அசுரனான இரணியனின் ரத்தத்தைக் குடித்ததால் சுயக்கட்டுப்பாட்டை இழந்து, அரண்மனையிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த காட்டுக்குள் சென்றது,

அந்தக் காட்டில் வசித்த பழங்குடியினரைத் தாக்கத் தொடங்கியது. காட்டுக்குள் புதிதாக வந்த நரசிங்க உருவத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ளப் பழங்குடியினர் சிதறி ஓடினர். அதனைக் கண்ட பழங்குடியினத் தலைவரின் மகளான செஞ்சு, நரசிங்கத்திடமிருந்து பழங்குடியினரைக் காப்பாற்ற முடிவு செய்தாள்.

முன்னால் போய் நின்ற அவள், மனிதனாகவுமில்லாமல், சிங்கமாகவுமில்லாமல் இருக்கும் நீ, இங்கிருப்பவர்களை ஏன் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாய்? வந்த வழியில் போய்விடு, இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன் என எச்சரித்தாள். ஆனால் நரசிங்கம் அவளின் எச்சரிக்கையைக் கடந்து, அவளை நோக்கி முன்னேறி வந்தது.

அதனால் கோபமடைந்த செஞ்சு, வில்லில் அம்பை ஏற்றி நரசிங்கத்தை நோக்கிக் குறி வைத்தாள். அந்த அம்பு மலர் மாலையாக மாறி நரசிங்கத்தின் கழுத்தில் விழுந்தது. அதனைக் கண்டு அவள் ஆச்சரியமடைந்தாள்.

அவள் நரசிங்கத்தை உற்று நோக்கினாள். அங்கு நரசிங்க உருவில் இருப்பவர் திருமால் என்பது அவளுக்குத் தெரிந்தது. அத்துடன் தான் மகாலட்சுமி என்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் தன் கையிலிருந்த வில்லையும் அம்பையும் விட்டு விட்டு, நரசிங்கத்தை வணங்கினாள்.

தன்னை வணங்குவது மகாலட்சுமி என்பதை அறிந்த நரசிங்கம் சுயநினைவுக்கு வரவே கோபம் மறைந்து சமாதானம் அடைந்தது. தன் கழுத்தில் கிடந்த மாலையை எடுத்து செஞ்சுவின் கழுத்தில் அணிவித்தது. அதன் பின்னர் நரசிம்மம் அங்கிருந்த பாறை மீது அமர்ந்தது.

தனது கழுத்தில் மாலை அணிவித்த நரசிங்கத்தை வணங்கியபடி செஞ்சு அருகில் சென்றாள். நரசிம்மரின் கோபமான தோற்றம் மறைந்து அழகிய தோற்றம் வந்தது. நரசிம்மரின் அழகிய முகத்தைப் பார்த்த அவள், அந்த முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்கிற ஆசையில், அவரது மடியில் அமர்ந்தாள்.

அதனைக் கண்ட பழங்குடியினர் அவர்களின் முறைப்படி, நரசிங்கர், செஞ்சு திருமணத்தை நடத்தினர். அதன் பின்னர், மகாலட்சுமி தோன்றிய பழங்குடியின சமூகத்தினர் செஞ்சு பழங்குடியினர் எனப் பெயர் பெற்றனர்.

நரசிங்கப் பெருமாளும், செஞ்சு லட்சுமியும் அவர்களின் குல தெய்வமானார்கள்.



- திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us