தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 33

சித்தர்களின் விளையாட்டு - 33

சித்தர்களின் விளையாட்டு - 33


ADDED : ஜூன் 25, 2026 10:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யூகிமுனி

“மனிதர்களை வருத்தி துன்பத்தில் ஆழ்த்தும் இந்த நோய்கள் ஏன் வருகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவதிப்படுகிறார்களே... நோய் வருவதை முன்பே அறிந்து தடுக்க முடியாதா? மகேஸ்வரரே” என நாரதர் கேட்டார்.

புன்னகைத்த மகேஸ்வரர், ''மனதையும், உடலையும் துாய்மையாக வைத்தால் நோயை தடுக்க முடியும். அவற்றையும் தாண்டி கர்ம பலனாக தோன்றும் நோய்கள் பிறவியிலேயே தொடரக் கூடியவை. அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்” எனச் சொல்ல பார்வதியும் ஆமோதித்தார்.

இதனைத் தொடர்ந்து மகேஸ்வரர் சித்தர்களில் ஒருவரான யூகிமுனி பற்றி சொல்லத் தொடங்கினார். “சிங்கள நாட்டில் ஆடுகளை மேய்க்கும் ஏழைச் சிறுவன் ஒருவன் இருந்தான். காட்டுக்குள் வேட்டைக்காக வந்த பிரம்மசுந்தரர் என்ற மன்னரின் மகன் இளவரசர் உதயணனுடன் அவன் நட்பு கொண்டான். இளவரசர் உதயணன் யாழ் இசைப்பதும், அதற்கு ஏற்ப சிறுவன் பாடுவதுமாக இருந்தனர்.

காட்டிலேயே வளர்ந்து திரிந்ததால் காட்டில் கிடைக்கும் அனைத்தும் சிறுவனுக்கு அத்துபடியாக இருந்தது. அங்கு மலைப்பகுதிகளில் கிடைக்கும் மூலிகை,மருந்துகளை ஆராய்ச்சி செய்வது சிறுவனின் வழக்கம். மன்னரும் இளவரசரும் வேட்டைக்கு வரும்போதெல்லாம் காடு முழுவதும் சுற்றிக் காட்டுவதும், அவர்களைப் பாதுகாப்பாக அனுப்புவதும் சிறுவனின் வேலையாக இருந்தது.

மன்னர் பிரம்ம சுந்தரருக்கும், இளவரசர் உதயணனுக்கும் சிறுவனை மிகவும் பிடித்துப் போனது. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய இளவரசர் உதயணன் நினைத்தார். தந்தையிடம் வேண்டி நண்பனுக்கு அரசவையில் இடம் தர வேண்டினார்.

சிறுவனின் அறிவு, திறமை, நேர்மை மீது நம்பிக்கை கொண்ட பிரம்மசுந்தரரும் தன் வக்சலநாட்டின் முதலமைச்சராக இந்த பதினாறு வயது சிறுவனை நியமித்தார்.

அரசுப் பொறுப்பை ஏற்றாலும் ராஜ வாழ்க்கையின் மீது சிறுவனுக்கு நாட்டமில்லை. சிறுவன் எதையோ இழந்தது போல் காணப்பட்டான். நிம்மதியைத் தேடி அவ்வப்போது காட்டுக்குப் போவதும், பின் உதயணன் தன் நண்பனைத் தேடி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதுமாக இருந்தார்.

ஒருமுறை காட்டுக்குள் சென்ற சிறுவன் நீண்ட நேரம் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இளவரசர் உதயணன் தன் நண்பனுக்கு அரச வாழ்வில் நாட்டமில்லை என்பதையும், யோகியாக வாழ்வதில் மட்டுமே விருப்பம் உள்ளது என்பதையும் உணர்ந்து தென்கோடியான தோரணமலைக்கு அழைத்துச் சென்றார்.

தோரணமலைக்கு வந்த சிறுவன் அங்குள்ள குன்றில் அமர்ந்து பல ஆண்டுகள் தவம் செய்ய ஆரம்பித்தான். தவத்தின் பலனாக சம்பார முனிவர் ஒளி ரூபமாக சிறுவனுக்கு காட்சியளித்தார். கண்களைத் திறந்தபடி யோகம் செய்வதில் திறமை பெற்றிருந்தான் சிறுவன். கண்கள் திறந்திருந்தாலும் சலனமற்று யோகநிலையில் சிறுவன் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார் சம்பார முனிவர்.

யோக ஆற்றலைப் பெற்று ஒளி ரூபமாக இருக்கும் என்னை அறிய முடிந்ததால் 'யோகிமுனி' என அழைக்கப்படுவாய். உன்னைத் தேடி வரும் பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவாயாக எனச் சொல்லி மறைந்தார்.

அவர் சொன்னது போல் யோகிமுனியைத் தேடி சமனாக்கியரும், திரனாக்கியரும் வருகை தந்தனர். யோகிமுனியிடம், “காடு, மலை என அனைத்து இடங்களிலும் திரிந்து ஞானம் பெற்ற தாங்கள் அரச வாழ்வை வெறுத்து சித்தராக மாறியுள்ளீர்கள். தங்களுக்கு ஏற்ற குரு அகத்தியர். அவர்தான் உங்களுக்கு ஆசி வழங்க முடியும். இந்தச் சிறு வயதில் தங்களால் அகத்தியரிடம் சீடராகச் செல்ல முடியாது. இங்கே தோரண மலையில் அகத்தியரின் சீடர் தேரையர் இருக்கிறார். அவரிடம் ஆசி பெறுங்கள்” என அறிவுறுத்தினர்.

யோகிமுனியும் தேரையரிடம் ஆசி பெற்றுக் கல்வி கற்றார். பின் அவருடைய சித்த மருத்துவப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்குச் சித்த மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்தார். தன்னை மிஞ்சிய சீடனாக விளங்கும் யோகிமுனியைப் பார்த்து மகிழ்ந்த தேரையர் தன் குருநாதர் அகத்தியரிடம் அழைத்துச் சென்றார்.

பொதிகைமலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த அகத்தியர் மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய சீடன் யோகிமுனியைப் பற்றிச் சொல்லி சித்த மருத்துவத்தைக் கற்க வந்ததைக் கூறினார். அகத்தியரோ யோகிமுனியை சோதிக்க விரும்பினார்.

அகத்தியரின் முகத்தைக் கண்டு இதை உணர்ந்த யோகிமுனி தன்னிடம் இருந்த வீரச்சுண்ணம் என்னும் மருந்தை அகத்தியரிடம் கொடுத்து “குருவே வணக்கம்! இந்தச் சுண்ணத்தை இங்கு நிற்கும் காகத்திற்கு கொடுங்கள்” என வேண்டினார்.

அகத்தியரும் வீரச்சுண்ணத்தை விரலளவு எடுத்து அருகில் அமர்ந்திருந்த காக்கையிடம் உண்ணக் கொடுத்தார். கண நேரத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. வீரச்சுண்ணம் உட்கொண்ட காக்கை வெள்ளை நிறத்தில் மாறியது. அகத்தியர் யோகிமுனியின் ஆற்றலைக் கண்டு வியந்தார்.

அப்போது யோகிமுனி, “அகத்தியரே தங்களுக்குத் தெரியாதது அல்ல. சுண்ணம் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பான மருந்து. வீரம் என்பது பாதரசம் கலந்த வெள்ளை நிறப் பாஷாணம். இதை மருந்தாகத் தயார் செய்துள்ளேன். இது உடலைக் கருக்கும் எல்லா நோய்களையும் நீக்கி, மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரும். அதைப் பரிசோதிக்கவே இதைச் செய்தேன்” எனக் கூற அகத்தியர் மகிழ்ந்தார்.

“தேரையரை மிஞ்சிய சீடனாக நீ விளங்குகிறாய். நோய்களையும் அதற்கான மருந்துகளையும் சரியாக யூகித்து வழங்குவதால் யோகிமுனி என்ற பெயருடைய நீ இனி 'யூகிமுனி' எனப்படுவாய்” எனப் பாராட்டினார்.

வாதம், வைத்தியம், யோகம், ஞானம் எனப் பல்வேறு சித்தர் சூட்சுமங்களைக் கற்றுக் கொடுத்தார்.

சிவபெருமான், உமையவள், நந்தி, அகத்தியர், புலத்தியர், தேரையர் என சித்த மருத்துவம் தோன்றிய வரலாறை நுாலாக எழுதினார்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் மறைபொருள் வார்த்தைகள் வாசி, மதி, ரவி, முறி, பிண்டம், வழலை, மதியமுது ஆகியவற்றின் பொருளைக் கண்டறிந்து அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார்.

மனிதர்களுக்கு 4448 நோய்கள் தோன்றுகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் மருந்துகள் உள்ளன என்றும் யூகிமுனி குறிப்பிட்டு இருப்பது சித்த மருத்துவத்தின் சிறப்பம்சம்.

அகத்தியரிடம் இருந்து தான் கற்ற கலைகளையும் மருத்துவ குறிப்புகளையும் கொண்டு வைத்திய சிந்தாமணி, வாத காவியம், வாத தீட்சாவிதி, வைத்திய உலா, மதிவெண்பா 100, பிடிவாதம், பரிபூரணம் 400, வாத காண்டம், வைத்திய சிந்தாமணி 100, யூகிமுனி 1200, வாத வைத்திய உலா 1000, வாதாந்த தீட்சாவிதி 100, வாத வைத்திய விளக்கம் 200, பரிபூரணம் 200, வைத்திய கும்மி 1000 போன்ற நுால்களை எழுதினார்.

மனிதர்களுக்கு வரும் 4448 நோய்களையும் வகைப்படுத்தி அவற்றின் தன்மைகள், மருந்துகளை யூகிமுனிவர் குறிப்பிட்டிருப்பது போற்றத்தக்கது.

தன் பணி முடிந்ததும் சிவனின் பாதங்களை அடைய வேண்டி தோரணவாசலில் தன் குருநாதர் தேரையர் அருகில் இருந்தபடி தவமிருக்க ஆரம்பித்தார். பின்னர் திருவண்ணாமலையில் முக்தி அடைந்தார்.

“மகேஸ்வரரே! பாரத தேசத்தின் அனைத்துக் கோடிகளிலும் உள்ள மருத்துவக் குறிப்புகளையெல்லாம் தொகுத்து நுாலாக வழங்கியதால் நவகோடி சித்தர் என யூகிமுனிவரை அனைத்துச் சித்தர்களும் அழைப்பதை நான் அறிவேன். அகத்தியரால் யூகிமுனி எனப் பாராட்டப்பட்டதையும் அறிந்து வியந்தேன். இந்தத் திருவிளையாடலை நடத்திய தங்கள் பெருமை போற்றத்தக்கது” என வணங்கினார்.



- விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us