தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 31

தெய்வத் திருமணம் - 31

தெய்வத் திருமணம் - 31


ADDED : ஜூலை 09, 2026 10:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 10:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணன் - ருக்மணி திருமணம்

போஜ வம்சத்தை சேர்ந்த உக்கிரசேனன் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச அரசரான வாசுதேவருக்கும் திருமணம் நடந்தது. கம்சன், தன் சகோதரி தேவகி செல்லுமிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவளுக்கு சீதனம் கொடுத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான்.

அப்போது வானில் இருந்து, “கம்சா, உன் சகோதரிக்குத் தேரோட்டிச் செல்லும் உன்னை, அவளுக்கு எட்டாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தை அழிக்கப் போகிறது” என குரல் கேட்டது. அதைக் கேட்ட கம்சன் அதிர்ச்சியடைந்தான். தன் சகோதரியான தேவகியைக் கொல்லத் துணிந்தான்.

தேவகியின் கணவரான வாசுதேவர், “அசரீரி சொன்னது போல், எங்கள் இருவருக்கும் எட்டாவதாகப் பிறக்கும் குழந்தையை உன்னிடம் ஒப்படைக்கிறோம்” என்றார்.

அதை ஏற்ற கம்சன், அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். மதுராவின் சிறையில் இருந்த தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைக் கம்சன் கொன்றான். இப்படியே, ஒவ்வொரு குழந்தையாக, மொத்தம் ஏழு குழந்தைகளைக் கொன்றான்.

தர்மத்தை நிலைநாட்ட தேவகிக்கு எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தார். வாசுதேவர், அக்குழந்தையை எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றின் மறுகரையில் கோகுலத்தில் குடியிருந்த யாதவர் குலத்தின் தலைவரான நந்தகோபர், யசோதை தம்பதியிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு சிறைக்குத் திரும்பினார்.

தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன் சிறைச்சாலைக்கு வந்தான். தேவகியிடமிருந்த குழந்தையை வாங்கிய அவன், அக்குழந்தையைக் கொல்ல முயன்ற போது, அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்ற அந்தப் பெண் குழந்தை, “கம்சா! நீ என்னைக் கொல்ல முடியாது. உன்னைக் கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்” எனச் சொல்லி மறைந்தது.

வாசுதேவர் கொடுத்த குழந்தைக்குக் 'கிருஷ்ணன்' என பெயரிட்டு நந்தகோபர், யசோதை வளர்த்தனர். கிருஷ்ணனைக் கொல்வதற்காகக் கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை, சகடாசூரன், திருணாவர்த்தன் போன்ற அசுரர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களாலும், கோகுலத்தில் ஏற்பட்ட வறட்சி, காட்டு ஓநாய்களின் அச்சுறுத்தலாலும் நந்தகோபர் தலைமையிலான யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

குழந்தை கிருஷ்ணன் செய்த குறும்புகளால் கவரப்பட்ட பிருந்தாவனப் பெண்கள் அனைவரும், அவனைத் தங்களின் செல்லப் பிள்ளையாக நினைத்தனர். கிருஷ்ணன் இளம் வயதையடைந்த போது, புல்லாங்குழல் ஊதியபடி பசுக்களை மேய்த்தார். அவரது புல்லாங்குழல் இசையில் மயங்கிய கோபியர்கள் பலரும் அவர் மீது தீராத காதல் கொண்டனர்.

கம்சனின் அவையில் அமைச்சராக இருந்த அக்ரூரரின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணன், தன் சகோதரர் பலராமனுடன் மதுராவுக்குச் சென்றார். தாய்மாமன் கம்சனை அழித்துத் தாய்வழித் தாத்தாவான உக்கிரசேனரிடம் மதுராவை ஒப்படைத்தான். தன் பெற்றோரான வாசுதேவர், தேவகியை சிறையில் இருந்து விடுவித்தான்.

கம்சனின் மனைவியரான அஸ்தி, பிராப்தி என்ற இரு மகள்களும் விதவையானதால் கோபம் அடைந்த ஜராசந்தன் மதுராபுரியை அழிக்கும் நோக்கத்துடன் போரிட்டான். கிருஷ்ணன், பலராமன் இணைந்து ஜராசந்தன் படையை அழித்த போதும், அவனை உயிருடன் விட்டனர். அதன்பின் அவன் பதினேழு முறை மதுராவின் மீது தாக்குதல் நடத்தினான்.

தான் மதுராவில் இருப்பதால்தான் மக்களுக்குத் துன்பம் நேர்கிறது என நினைத்த கிருஷ்ணன் அங்கிருந்து சென்று, துவாரகை என்ற நகரை உருவாக்கினார். அதன் பின் கிருஷ்ணன் மக்களை அழைத்துக் கொண்டு துவாரகைக்கு இடம் பெயர்ந்தார்.

கிருஷ்ணனின் அழகைக் கண்டு மகிழ்ந்த பல பெண்கள், அவர் மீது காதல் கொண்டனர். அவரை நேரடியாகக் காணாவிட்டாலும், அவருடைய அழகு, குணம், வீரத்தைக் கேள்விப்பட்ட பிற நாட்டு இளம் பெண்களும் அவர் மீது காதல் கொண்டனர்.

விதர்ப்ப நாட்டுக்கு வந்த அரச குடும்பத்தினர், முனிவர்கள் பலரும் கிருஷ்ணன் பற்றிச் சொன்ன தகவல்களைக் கேட்ட விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மணியும் அவரைப் பார்க்காமலே காதல் கொண்டதுடன், கிருஷ்ணனையே திருமணம் செய்ய விரும்பினாள்.

ருக்மணியின் பெற்றோரும் அவளைக் கிருஷ்ணனுக்கே திருமணம் செய்து கொடுக்க விரும்பினர். கம்சனைக் கொன்றதுடன், ஜராசந்தனை பல முறை போர்க்களத்தில் தோற்கடித்து விரட்டியடித்தக் கிருஷ்ணனுக்குத் தன் சகோதரி ருக்மணியைத் திருமணம் செய்து கொடுக்க, அவளது சகோதரன் ருக்மி உள்ளிட்ட சகோதரர்கள் விரும்பவில்லை.

கம்சனின் நண்பனான ருக்மி, தன் சகோதரி ருக்மணியைச் சேதி நாட்டு மன்னனான சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். தன் சகோதரன் ருக்மியின் மனநிலையை அறிந்த ருக்மணி, தான் சிசுபாலனைத் திருமணம் செய்தால், வாழ்வே துன்பமயமாகி விடும் என நினைத்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

கிருஷ்ணனுக்கு, “என் இனிமையானவரே! கிருஷ்ணா... தங்களைக் காணாமலேயே நான் உங்கள் மீது காதல் கொண்டேன். என் சகோதரன் ருக்மி, என்னை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறான். அதற்கு முன்பாக என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வீர்கள் என நம்புகிறேன்” என கடிதம் எழுதினாள்.

அதை தன் நண்பரான அந்தணர் சுனந்தன் மூலம் கிருஷ்ணனிடம் கொடுக்கச் செய்தாள். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணனும், தன்னைப் பார்க்காமலே தன்னை விரும்பிய ருக்மணியை மீட்டு வந்து திருமணம் செய்ய முடிவு செய்தார்.

கிருஷ்ணன் தன் தேர்ப்பாகன் சாருகனை அழைத்துக் கொண்டு விதர்ப்ப நாட்டிற்குத் தேரில் சென்றார். இதை அறிந்த பலராமன் சிறுபடையுடன் பின் தொடர்ந்தான். அதிகாலையில், ருக்மணி மங்களகரமான ஆடை, ஆபரணம் அணிந்து கொண்டு, துர்கை கோயிலுக்குச் சென்றாள். அங்கு அவள், தான் விரும்பும் கிருஷ்ணனைத் திருமணம் செய்ய உதவும்படி வேண்டினாள்.

கோயிலில் இருந்து வெளியே வந்த ருக்மணியைக் கிருஷ்ணன் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, துவாரகை நோக்கிச் சென்றார். தன் சகோதரி ருக்மணியைக் கிருஷ்ணர் கடத்தியதை அறிந்த அவளது சகோதரன் ருக்மி மற்றும் சகோதரர்கள் படையுடன் வந்து தடுத்தனர்.

ருக்மி படையினருக்கும், கிருஷ்ணருடைய பலராமன் தலைமையிலான படையினருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது.

ருக்மி படையினரைத் தோற்கடித்த கிருஷ்ணன், ருக்மணியுடன் துவாரகை சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற திருமண விழாவில் கிருஷ்ணன் ருக்மணியைத் திருமணம் செய்து கொண்டார். தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்ட ருக்மணி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

கிருஷ்ணர் ருக்மணியை அழகுக்காகவோ அல்லது அரச அந்தஸ்துக்காகவோ திருமணம் செய்யவில்லை, மாறாக அவளது முகமறியாக் காதல், பக்தி மற்றும் எல்லையற்ற அன்பின் காரணமாகவே திருமணம் செய்தார்.



- திருமணம் அடுத்த வாரம் முற்றும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us