தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 35

சித்தர்களின் விளையாட்டு - 35

சித்தர்களின் விளையாட்டு - 35


ADDED : ஜூலை 09, 2026 10:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 10:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வான்மீகர்

“நாரதரே! சித்தர்களின் விளையாட்டு போல நாரதர் விளையாட்டை எல்லோரும் அறிய வேண்டாமா?” என பார்வதி கேட்டார்.

நாரதர் சிரித்தபடி, “தாங்கள் கூறினால் தானே கேட்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால்தான்...” என இழுக்க ஆரம்பித்தார்.

“நாரதரே! தங்கள் கலகத்தால் ஒரு திருடன் ராம பக்தனாகி, பின் சிவ பக்தனாக மாறிய கதையைப் பற்றி வாயைத் திறக்க மாட்டேன் என்கிறீர்களே” எனக் கேட்க,“மகேஸ்வரரே! எல்லாம் தங்களின் திருவிளையாடல்தான், நான் ஒரு கருவி மட்டுமே” என்றார்.

“ராமாயணம் எழுதிய வால்மீகி முன்னொரு காலத்தில் வான்மீகர் என்ற சித்தராக சித்த மருத்துவ நுால்களை இயற்றியது அதிசயம் அல்லவா! அதைப் பற்றி மகேஸ்வரர் கூறப் போகிறார்” என மகேஸ்வரி விளக்கினார்.

ஒரு காட்டுப்பகுதியில் ஒரு ஏழை வசித்தான். அவனுக்கு பெற்றோர், மனைவி, நான்கு பிள்ளைகள் இருந்தனர். குடிசை அமைத்து விலங்குகளை வேட்டையாடி வந்தான். வேட்டையாடிய பொருட்களை விற்க முடியாமல் குடும்பம் நடத்த தேவையான பணம் இல்லாமல் கஷ்டப்பட்டான். அன்றாடம் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டது.

பெற்றோரின் முதுமை, மனைவியின் ஏளனம், குழந்தைகளின் பொறுப்பின்மை என அவன் அவமானத்தை சந்தித்ததால் அந்தக் காட்டின் வழியாக செல்லும் செல்வந்தர்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டான்.

அந்த வனப்பகுதியில் வருபவர்களைக் கத்தி முனையில் மடக்கித் துன்புறுத்தி மிரட்டி, அடித்து, உதைத்து அவர்களின் பொருளையும், பணத்தையும் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். அந்த பணத்தை குடும்பத்தினரிடம் கொடுக்க அனைவரும் அவன் மீது அன்பு காட்ட ஆரம்பித்தனர். இதனால் மகிழ்ச்சி கொண்டான். குடும்பத்தினர் எப்போதும் பாசமாக இருக்க வேண்டும் எனக் கருதி திருடன் பெரும்பணம் சேர்க்க ஆரம்பித்தான்.

அப்போது ஒருநாள் அந்த வழியே ஒரு முனிவர் தம்புராவை மீட்டியபடி, 'ராமா, ராமா' என உச்சரித்தவாறே வந்தார். அவரிடம் கொள்ளையடிக்க நினைத்தான். ஆனால் அந்த முனிவர், “என் பெயர் நாரதர். நான் ஒரு ராம பக்தர். என்னிடம் தம்புரா மட்டும்தான் இருக்கிறது” எனக் கூற திருடன் நம்பவில்லை.

“பார்ப்பதற்கு செல்வந்தர் குடும்பத்தில் இருந்து வந்தது போல் இருக்கிறாய். ஆனால் பொருள் எதுவும் இல்லை என்கிறாயே! என்னிடம் அடி வாங்குகிறாயா அல்லது உன்னிடம் உள்ள பணத்தை தருகிறாயா?” எனக் கத்தியுடன் மிரட்டினான்.

நாரதர் அவனுடைய எண்ணத்தை புரிந்து கொண்டார். ''இவன் பிறவித்திருடன் அல்ல. குடும்பத்தினரின் தேவைக்காகத் திருடுகிறான். திருடுவது பாவம் என்பதை அறியாமல் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து மெதுவாக பேச்சு கொடுத்தார்.

“திருடனே! நீ யார்? உன் பெயர் என்ன? மனைவி, குழந்தைகள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள்?” என அடுக்கடுக்காக கேள்வி கேட்டார்.

பதட்டமடைந்த திருடன் கத்தியை காட்டியபடி, “நாரதரே! வழவழன்னு ஏதாவது பேசினால் உன்னைக் கொன்று விடுவேன். மரியாதையாய் இப்போது இருக்கும் பொருளைக் கொடுத்தால் உயிர்ப் பிச்சை தருகிறேன். ஓடி விடு” என மிரட்டினான்.

மனம் கலங்காத நாரதர், “நீ பதற்றத்தில் இருக்கிறாய். என்னிடம் இருக்கும் பொருட்களைத் தருகிறேன். அதற்கு முன்பாக நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்” என கூர்ந்து பார்த்தார்.

“திருடுவது பாவமில்லையா” எனக் கேட்க அவனோ “நான் என் குடும்பத்திற்காகத் திருடுகிறேன்” எனக் கோபமாக சொன்னான். நாரதர் மெதுவாக ஆரம்பித்தார். “திருடுதல், கொலை செய்தல் பெரும் பாவம்! இதற்கான தண்டனை அடுத்த பிறவியில் கிடைக்கும்” எனச் சொன்னார்.

அவன் மீண்டும் கோபமாக, “நான் எனக்காகவா கொள்ளையடிக்கிறேன். என் குடும்பத்திற்கும் சேர்த்துதானே” என சந்தேகம் கேட்க, நாரதர் தொடர்ந்தார்.

நாரதர், “உண்மைதான். ஒருவர் செய்யும் பாவத்தின் பலனை யார் அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவம் சேரும். ஆனால் என்ன செய்ய. உனது பாவத்தை உன் குடும்பத்தினர் ஏற்கவில்லையே... அதனால் அனைத்து பாவத்தையும் நீயே அனுபவிக்க வேண்டும்” என்றார்.

நாரதரைப் பார்த்து, “என் குடும்பத்தினர் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்” எனச் சொன்னான் திருடன்.

“நீ வேண்டுமானால் உன் பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம் பாவத்தை ஏற்பார்களா எனக் கேள்” என்றார்.

சற்று யோசித்தான் திருடன். நாரதர் ஓடாமல் இருக்க ஒரு மரத்தில் அவரைக் கட்டி வைத்து விட்டு வீட்டுக்குச் சென்றான். அங்கு பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம், “நான் இன்று ஒரு முனிவரைச் சந்தித்தேன். நான் செய்யும் பாவச் செயல்களில் உங்களுக்கும் பங்கு உண்டு என்கிறார்” எனக் கேட்டான்.

இதைக் கேட்டு அவர்கள் சிரித்தனர். “குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. அதற்காக எந்த வழியிலாவது சம்பாதிக்க வேண்டியது உன் கடமை. நீ செய்த பாவங்களுக்கு நீயே பொறுப்பு. பாவம் எங்களை தொடராது” என்றனர்.

மனம் கலங்கிய திருடன் கண்ணீருடன் நாரதரைக் காண வந்தான். அவருடைய கட்டுகளை அவிழ்த்து விட்டு “மன்னியுங்கள் முனிவரே! இவ்வளவு நாளாக என் குடும்பத்திற்காக பல பாவங்களைச் செய்தேன். திருடி சம்பாதித்த சொத்துகளை எல்லாம் பயன்படுத்தி சொகுசாக வாழ்ந்தாலும் என் பாவங்களில் பங்கு கிடையாது என்கின்றனர். என் பாவங்களை எப்படி போக்குவது” என வருந்தினான். இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த நாரதர்,

“நீ செய்த பாவம் தீர 'ராம' நாமத்தை சொல்” என ஆசியளித்து விட்டு புறப்பட்டார்.

திருடனும் மரத்தடியில் அமர்ந்து, “ராமா, ராமா” எனச் சொல்ல ஆரம்பித்தான். மனம் அமைதி அடைந்தது. தவநிலையில் பல ஆண்டுகள் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் புற்று மண் வளர ஆரம்பித்தது. நாளடைவில் ஞானம் பிறந்தது. புற்றில் இருந்து வெளியே வந்தார்.

வன்மீகம் என்றால் 'புற்று'. புற்றில் இருந்து வெளியே வந்ததால் 'வான்மீகி' என அழைக்கப்பட்டார். ராம பக்தரான அவர் வடமொழியில் யோக வாசிஷ்டம், வான்மீகன் 16, அற்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நுால்களை இயற்றினார்.

ஒருநாள் வான்மீகியை சந்திக்க மார்க்கண்டேயர் வந்தார். வான்மீகியை வணங்கி, “பல ஆண்டுகள் தவம் இருந்து ஞானம் பெற்றீர்கள். ஆனால் தெற்கு நோக்கி சென்று சிவனை வழிபட்டால் இன்னும் ஞானம் பெறலாம்” எனக் கூற அவரும் சிவனின் கோலத்தைக் காண விரும்பினார்.

சென்னை நோக்கி கடற்கரை வழியே வந்த வான்மீகி, வழியில் ஒரு ஊரில் சிவனை நோக்கித் தவம் இருந்தார். அங்கே சிவனும் காட்சியளித்தார். வான்மீகி தவமிருந்த ஊரை “திருவான்மீகி ஊர்” என அழைத்தனர். அதுவே இப்போது திருவான்மியூர் என்றானது.

பின் போகரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளை கற்றுக் கொண்டார். நாடி சாஸ்திரம், ஆருட சாஸ்திரம், ஞானம், சுத்த ஞானம் 16, புஷ்பாரூடம் போன்ற மருத்துவம், ஞான நுால்களை எழுதினார். பின்னர் முருகனைத் தரிசிக்க எட்டுக்குடி வந்த வான்மீகர் அங்கேயே முக்தி அடைந்தார்.

மகேஸ்வரரின் பாதங்களை வணங்கிய நாரதர், “வான்மீகி வடமொழியில் பெரும் இதிகாசத்தை எழுதியது மட்டுமல்லாமல் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுவதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன். அதற்கு காரணமான தங்களின் திருவிளையாடலுக்கு அடிபணிகிறேன்” என்றார்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us