
சொர்க்கம் மண்ணிலே...
ஒரு ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் பணம் இருந்து என்ன பயன்? இதுவரை யாருக்கும் உதவாமல் கருமியாக இருந்தான். அப்படிப்பட்ட அவனுக்கு ஒரு ஆசை. அது என்ன? சொர்க்கத்தையும், நரகத்தையும் காண வேண்டும் என்பது தான்.
ஒருநாள் துாங்கும் போது அவனது கனவில் பெரியவர் ஒருவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்வதாகக் கூறினார். சம்மதம் தெரிவித்து பெரியவருடன் சென்றார் பணக்காரர்.
முதலில் அவனை எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா? நரகத்திற்குத்தான். அவர்கள் சென்ற நேரம் அங்குள்ளவர்கள் சாப்பிடும் நேரமாக இருந்தது. பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு, சுவை மிக்க இனிப்பு வகைகள் இருந்தன. அவரவர்களுக்குச் சாப்பிட தட்டுக்கள் கொடுக்கப்பட்டு வரிசையாகப் பரிமாறப்பட்டது. அதைக் கண்டதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது.
ஆனால் பரிதாபம்! அனைவராலும் தங்கள் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடியவில்லை, தவிர கையை மடக்கவும் முடியவில்லை. மடக்கினால்தானே உணவை வாயில் இட முடியும்? இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் அவர்கள் இருந்தனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ?
அறுசுவை உணவு எதிரில் இருந்தால் கூட அவர்களால் உண்ண முடியவில்லையானால் என்ன பயன்... அவர்களுக்கு பசியுடன் கோபமும் சேர்ந்து கொண்டது. அண்டாக்களை எல்லாம் காலால் தள்ளி விட்டு அவற்றில் உள்ள உணவை யாரும் சாப்பிட முடியாதபடி வீணாக்கினர். பின்னர் பசியைத் தாங்க முடியாமல் அழுது புலம்பினர்.
பிறகு அந்த பணக்காரரை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் பெரியவர். அங்கும் சாப்பிடும் நேரம் வந்தது. ஆனால் வேறு விதமாக. எப்படி? நரகத்தில் இருந்தது போலவே அண்டாக்கள் நிறைய சாப்பாடு வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்தவர்களுக்குக் கையை நீட்ட முடிந்தது.
ஆனால் பாவம்! வாய்க்கு அருகே கொண்டு செல்வதற்காக அவர்கள் கையை மடக்க முடியாத நிலை. நீட்டியபடியே தான் இருந்தது. சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் சிறிதாவது வித்தியாசம் இருக்க வேண்டாமா? ஆனால் நரகத்தில் இருப்பவர்கள் போல் அல்லாமல் அவர்கள் ஒரு உத்தியைக் கையாண்டனர். கையை நீட்ட முடிகிறது; மடக்கத் தானே முடியவில்லை என எண்ணி, ஒருவர் தன் நீட்டிய கையால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவனுக்கு ஊட்டி விட்டார்.
அட...சொர்க்கவாசிகளின் மூளையை நன்றாக உபயோகிக்கிறார்களே! மடக்கத் தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாம் அல்லவா? எவ்வளவு சாமர்த்தியம்? இப்படி ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஊட்டியபடி இருந்தனர். அப்படியே அங்கிருந்த அனைவரும் வயிறார உண்டனர். இந்த தருணத்தில் பணக்காரர் கனவில் இருந்து கண்விழித்தார். ஆஹா! சொர்க்கம் என்றால் எங்கேயோ இருக்கிறது என நினைத்தோமே! சொர்க்கம் என்பது தனியே இல்லை.
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என உணர்ந்தான். அதே சமயத்தில் ஒருவருக்கும் கொடுக்காமல் தான் மட்டும் வாழ நினைப்பது தான் நரகம் என்பதை உணர்ந்தார். அன்று முதல் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் அறிவுறுத்தினார். மற்றவர்களின் தேவையறிந்து நாமும் நன்மை செய்தால் வானில் உள்ள சொர்க்கத்தை இந்த மண்ணில் காணலாம்.
-தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com