
நீ வருவாய் என...
பஞ்ச பாண்டவர், கவுரவர்களுக்கு இடையே சூதாட்டம் நடந்தது. கவுரவர்களின் தாய்மாமனான சகுனியின் சூழ்ச்சியால், பாண்டவர்கள் தங்களின் உடைமைகளை எல்லாம் பணயமாக வைத்து சூதாட்டத்தில் தோற்றனர். அதனால் அவர்கள் காட்டில் வாழும் நிலை (அஞ்ஞாத வாசம்) ஏற்பட்டது.
அரண்மனையில் இருந்ததைப் போலவே அங்கும் பாண்டவர்கள் சந்தியாவந்தனம் உள்ளிட்ட அனுஷ்டானங்களை(வழக்கம்) கடைபிடித்தனர். யோகாசனம், தியானம், பூஜைகளில் அக்கறையுடன் ஈடுபட்டனர். காட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பயனுள்ளதாக கழிந்தது. பெண்களும் விதிவிலக்கு அல்ல. குந்திதேவி, திரவுபதியும் வழிபாட்டில் மும்முரம் காட்டினர். இவ்வாறு சகோதரர்கள் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் பீமன் மட்டும் தாமதமாகவே எழுந்திருப்பான்.
தினசரி வழிபாட்டில் பங்கேற்க மாட்டான். அல்லது கடைசி நேரத்தில் வருவான். இதனைக் கண்ட தர்மர் தம்பியின் மீது வருத்தப்பட்டார். “ பீமா... நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீ பலசாலி என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக பக்தியுடன் இருக்க வேண்டாமா? அன்றாட வழிபாட்டுக்கு வர மறுக்கிறாய் அல்லது தாமதமாக வருகிறாய். இது முறையற்ற செயல்'' எனக் கண்டித்தார். அண்ணனுக்கு பதில் சொல்லாமல் நின்றான் பீமன்.
தம்பி திருந்தி விடுவான் என தர்மர் எதிர்பார்த்தார். ஆனால் மறுநாளும் தாமதமாகவே வந்தான் பீமன். காலையில் தாமதமாக எழுந்ததால் எல்லா வேலைகளும் அவனுக்கு தாமதமாயின. இந்நிலையில் ஒருநாள் தங்களின் இருப்பிடத்தில் பகவான் கிருஷ்ணருக்கு விருந்தளிக்க எண்ணினார் தர்மர். அவரை நேரில் போய் அழைத்து வா என தம்பி நகுலனை அனுப்பினார். பழங்கள், பூக்களுடன் புறப்பட்ட அவன் போன வேகத்தில் வந்து சேர்ந்தான். “ ஏன்... இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாய் நகுலா” எனக் கேட்டார் தர்மர்.
“நாளை முக்கியமான வேலை இருக்கிறது. அதனால் விருந்துக்கு வர வாய்ப்பில்லை என கிருஷ்ணர் தெரிவித்தார். இருந்தாலும் உங்களுக்காக வேறு ஒருநாள் அவசியம் வருவதாகச் சொன்னார்'' என்றான். இதைக் கேட்ட அர்ஜுனன், “நீங்கள் யார் கூப்பிட்டாலும் வர மாட்டார். நான் கூப்பிட்டால் நிச்சயம் எனக்காக வருவார்'' என தற்பெருமையுடன் சொன்னான். உடனே அவரைக் காணவும் புறப்பட்டான்.
''உனக்காக என் அண்ணன் தர்மர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அவசியம் நாளை எங்கள் இல்லத்திற்கு வர வேண்டும். நகுலன் வந்த போது ஏதோ வேலை இருப்பதாக சொன்னாயாமே?'' என உரிமையுடன் கேட்டான் அர்ஜுனன்.
“ஆமாம்... எனக்கு நாளை முக்கியமான வேலை இருக்கிறது. இன்னொரு நாள் வருகிறேன்'' என மறுத்தார் கிருஷ்ணர். வருத்தமுடன் திரும்பி வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணர் வர மறுப்பது ஏன் என புரியாமல் பாண்டவர்கள் வருத்தப்பட்டனர்.
மறுநாள் காலை நேர வழிபாட்டில் தலையைக் கவிழ்ந்தபடி அனைவரும் சோகமாக இருந்தனர். வழக்கம் போல பீமன் மட்டும் தாமதமாக எழுந்தான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பூஜைக்கு வந்தான். சகோதரர்களில் ஒருவரின் முகமும் பிரகாசமாக இல்லை. காரணத்தை அறிய எண்ணி, “ஏன் அனைவரும் வாடிய முகத்துடன் இருக்கிறீர்கள்...''எனக் கேட்டான்.
''பீமா! உனக்கு விஷயம் தெரியாதா? கிருஷ்ணரை விருந்துக்கு அழைப்பதற்காக நகுலன், அர்ஜுனனை அனுப்பினேன். முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லி மறுத்து விட்டார்'' என்றார் தர்மர். “இதுதானா விஷயம்... கவலையை விடுங்கள் அண்ணா... நான் அவரை அழைத்து வருகிறேன்” என ஆர்வமுடன் சொன்னான் பீமன்.
“நான் கூப்பிட்டும் வராத கிருஷ்ணர் இவர் கூப்பிட்டால் வந்து விடுவாரா...'' என ஏளனம் செய்தான் அர்ஜுனன். தன் கதாயுதத்தை துாக்கிக் கொண்டு, “ அண்ணா... விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள். திரவுபதி... நீயும் உணவுகளை சிறப்பான முறையில் செய்து வை. இதோ கிருஷ்ணருடன் ஓடோடி வருகிறேன்'' எனச் சொல்லி நடந்தான்.
சிறிது துாரம் சென்றதும், வானத்தை நோக்கி தன் கதாயுதத்தை வீசினான். “கிருஷ்ணா! என் பக்தி துாய்மை, உண்மையானது என நீ கருதினால் இப்போதே என்னுடன் விருந்துக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் வீசி எறிந்த கதாயுதம் என் தலை மீது விழுந்து இந்த நிமிடமே என் உயிர் போகட்டும்'' என சூளுரைத்தான்.
உண்மை பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்கி வராமல் இருப்பாரா கிருஷ்ணர்? அங்கு தோன்றிய கிருஷ்ணர் பூமியை நோக்கி வந்த கதாயுதத்தை பிடித்து பீமனின் உயிரைக் காப்பாற்றினார்.
“ நீ வருவாய் என... எனக்குத் தெரியும் கிருஷ்ணா. நான் பக்தி இல்லதாவன் என அனைவரும் நினைக்கிறார்கள். வெளியே தெரியும்படி இருப்பதா பக்தி? நான் மானசீகமாக உன்னை பூஜிப்பது அவர்களுக்கு தெரியவில்லை. போகட்டும்! நான் இப்போது உன்னை விருந்திற்கு அழைக்கிறேன். மறுப்பு சொல்லாமல் வர வேண்டும். என் தன்மானத்தைக் காப்பாற்ற வேண்டும்'' என்றான் பீமன்.
கிருஷ்ணரும் சம்மதித்தார். பீமனுடன் கிருஷ்ணர் வருவதைக் கண்ட பாண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். அத்துடன் அவனது பக்தியை குறைவாக கருதினோமே என வருத்தப்பட்டனர். இருந்தாலும் கிருஷ்ணர் விருந்துக்கு வந்ததை எண்ணி மகிழ்ந்தனர். பக்தியில் சிறந்தவன் பீமனே என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நிரூபித்தார் கிருஷ்ணர். பீமன் தன் பக்தியை தம்பட்டம் அடிப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்தான் அர்ஜுனன். சகோதரனான பீமனின் மனத்துாய்மை, சுயநலமின்மை, பக்தியை அறிந்த சகோதரர்கள், தாயார் குந்திதேவி, மனைவி திரவுபதி அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
-தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com