sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோயிலும் பிரசாதமும் - 2

/

கோயிலும் பிரசாதமும் - 2

கோயிலும் பிரசாதமும் - 2

கோயிலும் பிரசாதமும் - 2


ADDED : ஜூன் 05, 2025 09:30 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 09:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி பாயாசம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் அமர்ந்த கோலத்திலும், தர்பசயனராமர் கிடந்த கோலத்திலும் பட்டாபிராமர் நின்ற கோலத்திலும் என மூன்று நிலைகளில் பெருமாள் இருக்கிறார். தினமும் காலை பத்து மணிக்கு மூன்று சன்னதிகளிலும் பாயாசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த பாயாசத்தை 'திருக்கண்ணமுது' என்பர்.

அயோத்தி மன்னரான தசரதர் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக புத்திர காமேஷ்டி யாகத்தை திருப்புல்லாணி கோயிலில் நடத்தினார். அப்போது யாககுண்டத்தில் தேவபுருஷர் ஒருவர் தோன்றி பாயாசத்தை அளிக்க, தசரதர் மூன்று மனைவியருக்கும் கொடுத்தார். அதன் பயனாக ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்கனன் பிறந்தனர்.

108 திவ்ய தேசங்களில் இது 44. இதன் பழைய பெயர் திருப்புல்லணை. முன்பு தர்ப்பைப் புற்கள் நிறைந்த இப்பகுதியில் புல்லவர், காலவர், கண்ணவர் என்ற மூன்று மகரிஷிகள் தவம் செய்தனர். அப்போது அரக்கர்களின் துன்புறுத்தலுக்கு ஆளான அவர்கள் பெருமாளைச் சரணடைந்தனர். அரசமரத்தின் வடிவில் எழுந்தருளி மகரிஷிகளைக் காப்பாற்றினார் பெருமாள்.

பின்னர் சங்கு, சக்கரம் ஏந்தியபடி ஜெகந்நாதப் பெருமாளாக இங்கு மூலவராக கோயில் கொண்டார். உற்ஸவர் கல்யாண ஜெகந்நாதப் பெருமாள். தனி சன்னதியில் தாயார் பத்மாசினி இருக்கிறார். அடுத்ததாக தர்ப்பசயன ராமர் சன்னதி உள்ளது.

சீதையை மீட்பதற்காக கடலில் பாலம் அமைக்க விரும்பினார் ராமர். இதற்காக சமுத்திர ராஜனிடம் அனுமதி கேட்க மூன்று நாளாக காத்திருந்தார். ஆனால் கடலுக்குள் இருந்து சமுத்திரராஜன் வெளியே வரவில்லை. கோபம் அடைந்த ராமர் கடலை வற்றச் செய்யப் போவதாக சபதமிட்டார். தவறை உணர்ந்த சமுத்திரராஜன் மன்னிப்பு கேட்டதோடு, பாலம் கட்ட உதவி செய்வதாக தெரிவித்தான். ராமரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த சமுத்திரராஜன் கடலை மென்மையாகவும், தாழ்வாகவும் மாற்றிக் கொண்டான். இதன் பின்னரே இலங்கைக்கு பாலம் கட்டப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மூன்று நாள் ராமர் தர்ப்பைப் புல்லின் மீது சயன நிலையில் விரதம் இருந்தார். இதனால் இவரை 'தர்ப்ப சயனராமர்' என அழைக்கின்றனர்.

இங்கு சன்னதியில் தர்ப்பை புல்லின் மீது ராமர் படுத்திருக்க, சமுத்திர ராஜன் அவருக்கு அருகில் பணிவுடன் காத்திருக்கும் நிலையில் உள்ளனர். சன்னதிக்கு வெளியில் விபீஷணன் இருக்கிறார். லட்சுமணரின் வடிவமாக ஆதிசேஷன், ஆஞ்சநேயர் உடனிருக்கின்றனர்.

சீதையை மீட்டு திரும்பிய ராமர் வேறொரு சன்னதியில் பட்டாபிராமர் என்னும் பெயரில் சீதை, லட்சுமணருடன் உள்ளார். கேட்கும் வரத்தை தரும் தலமாக இத்தலம் விளங்குகிறது. குழந்தை வரம் இத்தலத்தின் சிறப்பம்சம். சேது தீர்த்தத்தில் நீராடினால் பாவம் விலகும். கிரக தோஷம் நீங்கும். கல்யாண ஜெகந்நாதரை வேண்டினால் திருமணம் நடக்கும். இங்கு நான்கு கால பூஜை உண்டு. தலவிருட்சம் அரசமரம். தீர்த்தத்தின் பெயர் சக்கர தீர்த்தம். ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. திருமங்கையாழ்வார் இங்கு 21 பாசுரங்கள் பாடியுள்ளார்.

காலை 7:30 - 12:00 மணி, மதியம் 3:30 - 8:00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

* மதுரையில் இருந்து 125 கி.மீ.,

* ராமேஸ்வரத்தில் இருந்து 70 கி.மீ.,

* ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ.,

தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப்

தண்ணீர் - 2 கப்

பால் - 3 கப்

வெல்லம் - 1.50 கப்

ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கம் பொடித்தது - 1 டீஸ்பூன்

முந்திரி - 10 எண்ணிக்கை

நெய் - சிறிதளவு

செய்முறை: அகலமான கடாயில் அரிசியை இட்டு நன்றாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி வேக விடவும். பின்னர் ஒன்றரை கப் பாலை அதில் சேர்த்து அரை மணி நேரம் கலக்க வேண்டும். வெந்ததும் மீதமுள்ள ஒன்றரை கப் பாலை கடாயில் ஊற்றி மீண்டும் வேக வைக்க வேண்டும். இப்போது அரிசி நன்றாகக் குழைந்து வந்திருக்கும். இனி வெல்லத்தை நன்றாகப் பொடித்து அதில் சேர்த்து கிளற வேண்டும். கால் மணி நேரத்திற்குப் பிறகு ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கத்தை நன்றாகப் பொடித்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரியை பாயாசத்தில் சேர்க்க வேண்டும். இப்போது திருக்கண்ணமுது தயார்.

-தொடரும்

ஆர்.வி.பதி

94435 20904






      Dinamalar
      Follow us