
இந்தக் காலத்தில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மதிப்பதில்லை. மனசாட்சியைத் தொட்டுக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு புரியும். பிறரிடம் அன்போடு பழகுகிறோமா... பேசுகிறோமா... பிறர் துன்பம் கண்டு இரக்கப்படுகிறோமா... மனம் திறந்து மற்றவரை பாராட்டுகிறோமா? இல்லையே...
ஆனால் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுபவர்கள் மகான்கள். அதிலும் காஞ்சி மஹாபெரியவர் எல்லா உயிர்களின் மீதும் அன்பை பொழியும் கருணைக்கடல். இம்சை தரும் எறும்பு, கொசு, கரப்பான்பூச்சி, பல்லிகளை நாம் கண்டால் அவற்றை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம். ஆனால் மஹாபெரியவர் பார்வையில் அவை அனைத்தும் அன்புக்கு உரியவை!
காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கத்தில் சுவாமிகள் தங்கி இருக்கும் அறைக்குள் யாரும் போக மாட்டார்கள். அப்படி ஒரு கட்டுப்பாடு. தனக்கான வேலைகளை சுவாமிகளே செய்து கொள்வார். இங்கு பூஜை உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் தண்ணீர் எடுத்து வர மரச் சொம்புகளே பயன்படுத்தப்படும். பூஜை செய்ய, கை, கால்கள் சுத்தம் செய்ய என தனித்தனி சொம்புகள் இருக்கும்.
கோடை காலத்தில் இங்கு சுவாமிகள் தங்கும் அறையின் மூலையில் ஒரு சொம்பில் தண்ணீர் இருக்கும். சிறு பிராணிகளின் தாகம் தணிக்கவே இந்த ஏற்பாடு. அறைக்குள் சீடர்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும், இந்த எளிய ஜீவராசிகள் நுழைவதற்கு தடை இல்லை. அவை சாதாரணமாக உள்ளே வரும். தண்ணீர் இருக்கும் மரச் சொம்பின் மீது ஏறும். மேலேயே இருந்தபடி சொம்புக்குள் தலையை விட்டு பார்க்கும். வளைந்து நெளிந்து தண்ணீர் குடித்து விட்டு ஓடும். இப்படி சுதந்திரமாக அணில், எலி, பறவைகள் எல்லாம் தண்ணீர் குடிக்கும்.
'உள்ளே யாரும் இருக்கிறார்களா' என தயக்கத்துடன் அவை வருவதை புன்னகையுடன் ரசிப்பார் காஞ்சி மஹாபெரியவர். நம்மைப் பொறுத்தவரை அவை எலி, அணில், பறவைகள். ஆனால் அவரின் கண்களுக்கு எலி, விநாயகரின் அன்புக்குரிய வாகனமாக தெரியும். அணிலோ ராமரின் கைகளால் ஆசி பெற்ற உயிர். பறவைகள் எல்லாம் பகவானின் அம்சம். உயிர்களை நேசிக்கும் மனதை மஹாபெரியவரிடம் வேண்டுவோம்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com