ADDED : மே 30, 2025 08:49 AM

கோபத்தை விட்டவர்களுக்கு 'பிரம்மரிஷி' பட்டம் கிடைக்கும். ராமரின் குலகுருவான வசிஷ்டர் இந்த பட்டம் பெற்றவர். அவரைப் போல தானும் பிரம்மரிஷியாக வேண்டும் என தவத்தில் ஈடுபட்டார் விஸ்வாமித்திரர். ஒரு கட்டத்தில் தகுதி வந்ததாக கருதி வசிஷ்டரை காணச் சென்றார்.
பிரம்மரிஷிகள் மற்ற பிரம்மரிஷிகளைக் கண்டால் வணங்க வேண்டும். மற்றவர்களுக்கு கைநீட்டி ஆசி அளிக்க வேண்டும் என்பது நடைமுறை. விஸ்வாமித்திரரைக் கண்ட வசிஷ்டர் வணங்காமல் கைநீட்டி ஆசியளித்தார். இன்னும் தகுதி வரவில்லையே என்ற ஆதங்கத்துடன் மீண்டும் தவத்தில் ஈடுபட்டார் விஸ்வாமித்திரர். ஒருநாள் அவருடைய குலதெய்வம் காட்சியளித்து, ' வசிஷ்டரிடம் செல்லும் போது பிரம்மரிஷியாக உன்னை ஏற்காவிட்டால் அவரது தலை வெடித்து சாம்பலாகட்டும் என சபித்திடு'' என்றது.
சில காலம் தவமிருந்த விஸ்வாமித்திரர், ஒருநாள் வசிஷ்டரை காணச் சென்றார். அப்போதும் கைநீட்டி ஆசியளித்தார் வசிஷ்டர். ஆனால் விஸ்வாமித்திரர் சபிக்கவில்லை.
''வசிஷ்டரே! கோபத்தால் சக்தி வீணாகும் என்பதை உணர்ந்து விட்டேன். அதனால் உம்மை சபிக்க மனமில்லை' என்றார்.
“கோபம் கூடாது என்பதை உணர்ந்ததால் இனி நீயும் பிரம்மரிஷியே'' என வணங்கினார் வசிஷ்டர்.