
கல்யாண பரிசு
பிருகு முனிவரின் புதல்வரான சியவன மகரிஷி காட்டில் தவம் செய்து வந்தார். நீண்டகாலம் தவத்தில் இருந்ததால் அவரை புற்று மூடியது. புற்றின் மேற்புறத்தில் இரு துளைகளும், அதற்கு கீழே ஒரு துளையும் உருவாகி இருந்தன. கீழுள்ள துவாரத்தின் வழியே மூச்சுக்காற்று உள்ளே சென்று வந்து கொண்டிருந்தது. காற்று மட்டுமே அவரின் ஆகாரம்.
தவ ஆற்றல் நிறைந்த சியவனரின் இரு கண்கள் தீக்கங்கு போல பளபளப்பாக இருந்தன. கண்களைத் திறந்தவாறே உள்முகமாக பார்த்தபடி தவத்தில் ஈடுபட்டார். தவ ஆற்றலால் கண்களின் ஜொலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. காட்டில் உள்ள மற்ற முனிவர்கள் புற்றைக் கடந்து செல்லும் போது மரியாதையுடன் கடந்து செல்வர். இந்நிலையில் ஒருநாள் மன்னர் சர்யாதி வேட்டையாடுவதற்காக படையுடன் அங்கு வந்தான். அவனுடைய ஒரே மகளான சுகன்யாவும் உடன் வந்திருந்தாள்.
அழகியான அவளை யார் கண்டாலும் வியப்பில் ஆழ்ந்து விடுவர். அவளுக்கு கணவராக வரும் பாக்கியசாலி யார் என்பதை அறிய நாடே ஆவலுடன் காத்திருந்தது. பூக்கள், பழங்கள் நிறைந்த சோலையாக இருந்த அப்பகுதியில் துள்ளித் திரிந்தாள். புற்றினுள் இரண்டு சிவந்த கனிகளைக் கண்டாள். அவற்றின் பளபளப்பு ஆச்சரியப்பட வைத்தது. அருகே சென்று குச்சியால் குத்திப் பார்க்க முயன்றாள்.
விபரீதத்தை உணராத சுகன்யா சிறு குச்சியால் புற்றின் துளையில் தெரிந்த சிவப்பு கனிகளைக் குத்தினாள். சியவன முனிவரின் கண்கள் துடித்தன. தவம் கலைந்து எழுந்த முனிவரைக் கண்டாள் சுகன்யா. பயத்துடன் பாய்ந்து ஓடினாள்.
ஆனால் தவ வலிமையால் கண்கள் உடனடியாக சரி செய்து கொண்டார் சியவனர். இருந்தாலும் அவரது கோபம் சுகன்யாவின் தந்தை சர்யாதியின் மீது திரும்பியது. 'மன்னனுக்கு நான் தவம் செய்வது தெரியாதா என்ன? நடந்த தவறுக்கு மூலகாரணம் அவன் தான். மன்னன், அவனது பரிவாரங்கள், அவனது மகள் அனைவரும் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் இருக்கக் கடவது' என முனிவர் சாபமிட்டார். அதன் பின் அவர்கள் உண்ட உணவு ஜீரணமாக வில்லை. அனைவரின் வயிறும் புடைத்தது. பிரச்னையில் இருந்து மீளும் வழி தெரியாமல் தவித்தனர்.
சுகன்யா குற்ற உணர்வால் அழுதாள். மன்னனும், மகளும் தவமுனிவரின் காலில் விழுந்து, ''அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள். எங்கள் மீது விட்ட சாபத்தை போக்குங்கள்'' என வேண்டினார்.
'மன்னா... பல ஆண்டுகள் தவத்தில் இருந்தேன். இப்போது உன் மகளால் இடையூறுக்கு ஆளாகி விட்டேன். இந்த வயதான காலத்தில் என்னை பராமரிக்க யார் இருக்கிறார்கள். அதனால் உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு. இதற்கு சம்மதித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும்' என்றார் முனிவர்.
திகைத்துப் போனார் மன்னர். ஆனால் சுகன்யா, ''தந்தையே... எங்கு தேடினாலும் இவரைப் போல உத்தமர் எனக்கு கிடைக்க மாட்டார். இவருக்கு பணிவிடை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்'' என்றாள்.
அதைக் கேட்ட முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். சர்யாதியோ வருந்தினாலும் ஆன்மிக நாட்டத்துடன் வளர்ந்தவள் என்பதால் முனிவரை ஏற்றுக் கொண்டாள் போலும் என தன்னை தேற்றிக் கொண்டார். சுகன்யாவை முனிவரிடம் ஒப்படைத்து விட்டு அரண்மனைக்கு திரும்பினர். மன்னர் உள்ளிட்ட அனைவரும் மீண்டும் ஜீரணசக்தியைப் பெற்று நிம்மதி அடைந்தனர். சியவன முனவரின் மனைவியாக குடில் அமைத்து அதில் மகிழ்ச்சியாக சுகன்யா வாழ்ந்தாள்.
தினமும் வாசலில் மாக்கோலம் இடுவது, ஆற்றில் தண்ணீர் கொண்டு வருவது, பூப்பறிப்பது, உணவு சமைப்பது என கணவருக்கு பணிவிடை செய்தாள். ஆன்மிக நாட்டமுடன் வாழ்ந்த அவளைத் தேடி ஒருநாள் தேவலோக மருத்துவரான அசுவினி தேவர்கள் வந்தனர்.
வயதான முனிவரின் மனைவியாக வாழும் அவள் தங்களில் ஒருவரை திருமணம் செய்தால் நன்றாக இருக்குமே... என வேண்டுகோள் விடுத்தனர். சுகன்யா அதை பொருட்படுத்தவில்லை. அவளை தங்களின் பக்கம் இழுக்க உத்தி ஒன்றை கையாண்டனர். சியவன முனிவரின் கிழத்தன்மையை போக்கி இளமையை வரவழைத்து தருகிறோம் எனத் தெரிவித்தனர். சுகன்யாவும் இதை கணவரிடம் சொன்ன போது அவர்,
''உன் கற்புத்திறத்தை அசுவினி தேவர்கள் அறிய மாட்டார்கள். பூமாலை ஒன்றை எடுத்துக் கொண்டு என்னுடன் வா'' என அவர்களைக் காண முனிவர் புறப்பட்டார். அசுவினி தேவர்களின் யோசனைக்கு உட்படுவதாக கூறினார்.
முனிவரை ஒரு குளத்தில் மூழ்கச் சொல்லிய அவர்கள் தாங்களும் அவருடன் சேர்ந்து மூழ்கி எழுந்தனர். அங்கே வசீகர தோற்றமுடைய மூன்று இளைஞர்கள் நின்றிருந்தனர். ஒரே உருவத்தில் மூவரும் இருந்தனர்.
உண்மையான கணவர் யார் என்பதை அறிய முடியாமல் சுகன்யா தவித்தாள். ஒருவரின் விழிகள் மட்டும் தவவலிமையால் பிரகாசித்தன. கையில் இருந்த மணமாலையை அந்த இளைஞருக்கு அணிவித்தாள். மற்ற இருவரும் பழையபடி அசுவினி தேவர்களாக மாறினர். தவறுக்காக வருந்திய அவர்கள் சுகன்யாவை வாழ்த்தினர். இளமையும், அழகும் தந்த அசுவினி தேவர்களுக்கு நன்றிக்கடனாக யாகம் ஒன்றை நடத்தி அதன் பிரசாதமான அவிர்பாகத்தை வழங்கினார் சியவன முனிவர்.
தவறுக்கான தண்டனையை தயங்காத சுகன்யா, முதியவரைத் தன் கணவராக ஏற்றாள். ஆனால் மனம் வருந்தாமல் 'கல்யாண பரிசு' அவளுக்கு கிடைத்தது. அசுவினி தேவர்களால் முதிய கணவர் இளைஞராக மாறியது அற்புதம் தானே...
-தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com