ADDED : ஜூன் 12, 2025 11:07 AM

திருக்கண்ணபுரம் முனையதரன் பொங்கல்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுக்கு தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது 'முனையதரன் பொங்கல்' நைவேத்தியமாகிறது. முன்பு கிருஷ்ணாபுரம் எனப்பட்ட இத்தலம் பிற்காலத்தில் திருக்கண்ணபுரம் எனப் பெயர் பெற்றது. பஞ்ச கிருஷ்ண ேக்ஷத்திரம் என்னும் ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. மற்ற தலங்கள் திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கவித்தலம், திருக்கோவிலுார்.
திவ்ய தேசங்களில் 17 வதாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திகழ்கிறது. ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த நிலையில் அதிக மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் இது. 129 பாசுரங்களால் போற்றப்படும் பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பெரியாழ்வார், ஆண்டாள் குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர்.
இக்கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலை கொண்டது. கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நீலமேகப்பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கிறார். அபய கரத்துடன் பெருமாள் காட்சி தருவது வழக்கம். ஆனால் இங்கு தானம் பெறும் கோலத்தில் இருக்கிறார். தாயார் கண்ணபுர நாயகி தனி சன்னதியில் இருக்கிறார். சேனை முதல்வர், ராமானுஜர், விபீஷ்ணர், நர்த்தன கிருஷ்ணர், ஆழ்வார்கள், ராமர், தைலபுர நாயகி ஆகியோரும் உள்ளனர்.
இக்கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் ரங்கபட்டர். இவர் ஒருநாள் உற்ஸவருக்கு அணிவித்த மாலையை மன்னருக்கு பிரசாதமாக கொடுத்தார். அதில் தலைமுடி இருப்பதைக் கண்ட மன்னர், அது பற்றி அர்ச்சகரிடம் விசாரித்தார். மன்னரின் கோபத்திற்கு ஆளாவோம் என்பதால் பெருமாளுடைய தலைமுடி என்றார் பட்டர். பொய் சொல்லிய பட்டரை தண்டிக்க முடிவெடுத்தார் மன்னர். ஆனால் உற்ஸவர் பெருமாளின் தலையில் நீண்ட கூந்தல் இருப்பதை பட்டர் காட்டினார். ஆச்சரியப்பட்டார் மன்னர். இதன் காரணமாக உற்ஸவருக்கு 'சவுரிராஜப் பெருமாள்' எனப் பெயர் வந்தது.
அமாவாசை அன்று வீதியுலா வரும் போது மட்டும் பெருமாளின் திருமுடி தரிசனத்தைக் காணலாம். கோயிலை வலம் வரும் போது கருவறை விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.
காலை 6:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து திருப்புகலுாருக்கு சென்று அங்குள்ள ஆற்றைக் கடந்து 2 கி.மீ., துாரம் நடந்தால் கோயிலை அடையலாம். ஒருமுறை சோழ நாட்டில் பஞ்சம் நிலவியது. கோயிலில் பூஜை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றது. அப்போது சோழ மன்னர் ஒருவரிடம் முனையதரையன் என்பவர் கப்பம் வசூலிக்கும் பணியைச் செய்தார். பெருமாள் பக்தரான அவர் கப்பமாக வசூலித்த பணத்தை கருவூலத்தில் செலுத்தாமல் கோயில் பூஜைக்கு செலவழித்தார். இதையறிந்த மன்னர் அவரை சிறையில் அடைத்தார். அங்கு பெருமாளின் திருநாமத்தை உச்சரித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.
பக்தரின் மனைவியும், சவுரிராஜப் பெருமாளைச் சரணடைந்து கணவரைக் காப்பாற்றும்படி வேண்டினாள். அவர்களின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள் அன்றிரவில் மன்னரின் கனவில் தோன்றினார். கப்பமாக வசூலித்த பணம் கோயில் பூஜைக்காக செலவழிக்கப்பட்டதையும், அவரை விடுதலை செய்யும்படியும் உத்தரவிட்டார். மன்னரும் பக்தரை விடுவித்தார். சிறையில் இருந்து வீட்டுக்கு வர இரவாகி விட்டது.
கணவர் வீடு திரும்பியதைக் கண்ட மனைவி மகிழ்ச்சி அடைந்தாள். பெருமாளுக்கு தன் நன்றியுணர்வை தெரிவிக்க விரும்பினாள். ஐந்து பங்கு பச்சரிசி, மூன்று பங்கு பச்சைப்பயறு, இரண்டு பங்கு நெய்யைக் கொண்டு பொங்கல் வைத்து வீட்டிலேயே சவுரிராஜப் பெருமாளுக்கு நைவேத்யம் செய்தாள்.
மறுநாள் அதிகாலையில் கோயிலை திறந்த பட்டருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மூலவரின் கையிலும், வாயிலும் பொங்கல் ஒட்டியிருப்பதைக் கண்டார். அதன் பின் பக்தரின் புகழ் ஊரெங்கும் பரவியது. அன்று முதல் இன்று வரை அர்த்த ஜாம பூஜையின் போது தினமும் பெருமாளுக்கு பொங்கல் நைவேத்யம் செய்யப்படுகிறது. சோழ மண்டல சதகம் என்ற நுாலில் இது பற்றி பாடல் இடம் பெற்றுள்ளது.
புனையும் குழலாள் பரிந்தளித்த
பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய அவுரிராசருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனைய தரையன் பொங்கல் என்று
முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும்
வழங்கும் சோழ மண்டலமே.
முனையதரன் பொங்கல் என்பது பேச்சுவழக்கில் முனியோதரன் பொங்கல் என மருவி விட்டது. 5 படி அரிசி, 3 படி பருப்பு, 2 படி நெய் சேர்த்து இப்பொங்கல் தயாரிக்கப்படுகிறது. திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளை தரிசிப்பவர்கள் முனையதரன் பொங்கலை சுவைப்பது மிக அவசியம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3 கப்
தோலுடன் பச்சைப்பயறு - 2 கப்
நெய் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை : பச்சரிசி, பச்சைப்பயறு இரண்டையும் தண்ணீர் விட்டு ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதி வந்ததும் ஊற வைத்த அரிசி, பச்சைப்பயறை அதில் குழைய வேக வைக்க வேண்டும். உப்பைச் சேர்த்து கிளறியபின் அரை கப் நெய்யை விட்டு கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பை அணைத்து விட்டு மீதமுள்ள அரை கப் நெய்யை விட்டு கிளற வேண்டும். இப்பொங்கலுக்கு நெய் பிரதானம். இப்போது சூடான, சுவையான முனையதரன் பொங்கல் தயார்.
--தொடரும்
ஆர்.வி.பதி
94435 20904