sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் - 17

/

தெய்வீக கதைகள் - 17

தெய்வீக கதைகள் - 17

தெய்வீக கதைகள் - 17


ADDED : ஜூலை 15, 2025 01:14 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தத்தாத்ரேயர்

சப்த ரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவர், அனுசூயாவை திருமணம் செய்தார். சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் கற்பில் சிறந்த அவளைச் சோதிக்க முடிவு செய்தனர். அதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பூலோகத்திற்கு முனிவர்கள் வடிவில் அனுப்பினர். அவர்களும் அத்ரி முனிவரின் இருப்பிடத்தை அடைந்த போது அனுசூயா மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் தங்களின் பசியைப் போக்க உணவளிக்கும்படி வேண்டினர். உணவு சமைத்த அவள் பரிமாற வந்த போது கோரிக்கை ஒன்றை விடுத்தனர்.

ஆடை உடுத்தாமல் உணவு பரிமாற வேண்டும் என்றனர். அனுசூயா தன் கணவரான அத்ரி முனிவரை தியானித்து வழிகாட்டும்படி வேண்டினாள். என்ன ஆச்சரியம்! மூவரும் குழந்தைகளாக மாறினர். அவர்களை வாரி எடுத்து பாலுாட்டினாள். கணவர் வந்ததும் நடந்ததை தெரிவித்தாள். ஞான திருஷ்டியால் நடக்கப் போவதை அவரும் அறிந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் மும்மூர்த்திகள் திரும்பி வராததால், தேவியர் மூவரும் நாரதர் மூலம் நடந்ததை அறிந்தனர். அனுசூயாவிடம் மன்னிப்பு கோரி கணவர்களைத் திருப்பித் தருமாறு வேண்டினர். இரக்கப்பட்ட அவளும் மூவரையும் பழைய நிலைக்கு மாற்றும்படி கணவரிடம் வேண்டினாள். அவரும் சம்மதிக்க குழந்தைகள் அங்கிருந்து மறைந்தன. பின்னர் மும்மூர்த்திகளும் தங்களின் இயல்பான கோலத்தில் அனுசூயா, அத்ரி முனிவருக்கு காட்சியளித்தனர். அத்ரி, அனுசூயா தம்பதியின் மகனாக மும்மூர்த்தி அம்சத்துடன் 'தத்தாத்ரேயர்' என்னும் பெயரில் மகாவிஷ்ணு பிறக்க இருப்பதாகச் சொல்லி விட்டு புறப்பட்டனர்.

அதன்படியே நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரத்தில் மார்கழி பவுர்ணமி அன்று மிருகசீரிட நட்சத்திர நாளில் தத்தாத்ரேயர் பிறந்தார். மவுனமாக இருந்த அவர், எப்போதும் தியானத்தில் ஆழ்ந்தார். அவரைச் சுற்றி ஒளிவட்டம் இருந்தது. அவரை குருநாதராக பலரும் ஏற்றுக் கொண்டனர்.

மும்மூர்த்திகளின் அம்சமாக சங்கு, சக்கரம், மழு, திரிசூலம், ஜபமாலை, கமண்டலத்தை தத்தாத்ரேயர் தாங்கியிருந்தார். காணாமல் போன பொருட்களை மீண்டும் பெறச் செய்யும் கார்த்தவீரியார்ஜுன மந்திரத்தின் மூலகாரணர் தத்தாத்ரேயரே. இவரே பரசுராமருக்கு குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

இவருக்கு 24 குருநாதர்கள் இருந்தனர். தத்தாத்ரேயர் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது,

'பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம், நிலா, சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் தாசி, குரரம் என்னும் பறவை, சிறுவன், ஆயுதம் தயாரிப்பவன், சிறுமி, பாம்பு, சிலந்தி, புழு ஆகியோர் என் குருநாதர்கள். இந்தியா, நேபாளத்தில் தத்தாத்ரேயர் வழிபாடு உள்ளது.

என் குருநாதர்கள் - தத்தாத்ரேயர்

குருநாதர் - உபதேசம்

பூமி - தன்னை தோண்டுபவரையும் தாங்குகிறது. அதனிடம் பொறுமையைக் கற்றேன்.

நீர் - அழுக்கை நீக்கி துாய்மை செய்வது போல துாய்மையாக வாழ வேண்டும் என உணர்ந்தேன்.

காற்று - யாருடன் பழகினாலும் பட்டும், படாமலும் இருக்க வேண்டும்.

தீ - எப்போதும் பிரகாசமாக ஜொலிக்க வேண்டும்.

ஆகாயம் - மனம் பரந்து விரிந்திருக்க வேண்டும்.

நிலா - பவுர்ணமி, அமாவாசை என வந்தாலும் நிலாவுக்கே. அது போல இளமை, முதுமை என வந்தாலும் அவை உடலுக்கே. உயிருக்கு அல்ல.

சூரியன் - ஒரு சூரியனே தண்ணீரில் பல சூரியனாக தெரிவது போல மனம் ஒன்றாக இருந்தாலும் அது பலவற்றை சிந்திக்கிறது.

புறா - குஞ்சுகளை பிடித்த வேடனிடம் தானும் வலிய வலையில் சிக்கியது தாய்ப்புறா. இதில் இருந்து துன்பத்திற்கு காரணம் பாசம் என அறிந்தேன்.

மலைப் பாம்பு - இரை தேடி அலையாமல் கிடைத்த உணவை தின்பது போல, நாமும் கிடைப்பதை உண்டு வாழ வேண்டும் எனக் கற்றேன்.

கடல் - நதிகளை தாங்கும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கும் பக்குவத்தை உணர்ந்தேன்.

விட்டில் பூச்சி - கவனத்தை சிதற விடாமல் மனதை ஓரிடத்தில் செலுத்த வேண்டும் எனக் கற்றுத் தந்தது.

தேனீக்கள் - பூக்களிடம் இருந்து தேனைப் பெறுவது போல, துறவிகளும் உணவை யாசகமாக பெற வேண்டும் என உணர்ந்தேன்.

ஆண் யானை - குழிக்குள் விழுந்த பெண் யானையைக் கண்ட ஆண் யானை, அதன் மீது ஆசை கொண்டு தானும் குழியில் விழும். இதிலிருந்து பெண்ணாசை துன்பம் தரும் என உணர்ந்தேன்.

தேன் - தேனீக்கள் சேகரித்த தேனை எல்லாம் மனிதன் அபகரிக்கிறான். இதில் இருந்து சேகரிப்பவன் அளவுக்கு அதிகமாக சேர்த்த பணம் அபகரிக்கப்படும் என அறிந்தேன்.

மான் - வேகமாக ஓடினாலும் இசையைக் கேட்டதும் மயங்கி விடும். அப்போது கொடிய விலங்குகள் அதை உணவாக்கி விடும். எனவே இசை, நடனத்தில் நாட்டம் கூடாது என உணர்ந்தேன்.

மீன்கள் - நாவை அடக்க முடியாமல் சபலத்தால், துாண்டிலில் சிக்கும். எனவே நாவை அடக்க வேண்டும் என உணர்ந்தேன்.

பிங்களா - நாட்டியக்காரியான இவள் தன்னை நாடி வந்தவர் மூலம் வருமானம் பெற்றாள். கிடைத்த பணம் போதும் என நிம்மதியாக அவள் துாங்குவதைக் கண்டேன். இதில் இருந்து ஆசையை விட்டால் திருப்தி ஏற்படும் என்பது புரிந்தது.

குரரம் - சிறிய பறவை இது. தன் இரையான மாமிசத்தை மற்ற பறவைகள் பறிக்க வந்தால், உடனே கீழே விட்டு விடும். அந்த பறவைகளும் மாமிசத்தை எடுக்கச் செல்லும். ஆசையைக் கைவிட்டால் துன்பம் நெருங்காது என இதன் மூலம் அறிந்தேன்.

சிறுவன் - சிறுவனின் மனம் இன்பம், துன்பத்தில் சிக்குவதில்லை. யார் திட்டினாலும், புகழ்ந்தாலும் பொருட்படுத்தாது. எனக்கும் அந்த மனம் வேண்டும் என உணர்ந்தேன்.

ஆயுதம் - சுற்றி நடப்பதை பொருட்படுத்தாமல் ஆயுதம் செய்பவன் தன் பணியிலேயே செய்பவன் கவனம் செலுத்துவான். அவனிடம் இருந்து மன ஒருமையைக் கற்றேன்.

சிறுமி - அணிந்திருந்த இரு வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழுப்பியது. அதில் ஒன்றைக் கழற்றியதும் ஒலி அடங்கியது. இதன் மூலம் இருவர் சேர்ந்தால் வீண் பேச்சு ஏற்படும் என்பதால் தனிமையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.

பாம்பு - அழியும் உடலுக்காக பாம்பு தனக்கென வீடு கட்டிக் கொள்வதில்லை. அதுபோல ஞான வாழ்வில் ஈடுபடுவோரும் வீடு கட்டக் கூடாது என அறிந்தேன்.

சிலந்தி - வலையை பின்னி அதில் வாழும். இறுதியில் வலையைத் தானே விழுங்கி விடும். அது போல கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி பின்னர் உலகம் அழியும் காலத்தில் தன்னுள் அடக்குகிறார் என்பதை அறிந்தேன்.

புழு - கூட்டில் தங்கியிருக்கும் இது எப்போதும் குளவியை பற்றி சிந்தித்து தானும் அதுவாக மாறும். எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதுவாகவே மாறும் குணம் மனிதனுக்கு உண்டு என உணர்ந்தேன்.



-பக்தி தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com






      Dinamalar
      Follow us