ADDED : ஜூலை 15, 2025 01:14 PM

மங்களம் அருளும் ஹரித்ரா கணபதி
ஹரித்ரா என்றால் மஞ்சள் என்று பொருள். மஞ்சள் நிறத்தவர் இந்த கணபதி என்பதையே இப்பெயர் சுட்டுகிறது. வெள்ளை நிறம் சத்வ குணத்தையும், சிவப்பு நிறம் ரஜோ குணத்தையும், கருமை நிறம் தமோ குணத்தையும் குறிக்கின்றன. மஞ்சள் நிறமோ, சாத்விக குணமும் ரஜோ குணமும் கலந்த நிலையைக் காட்டுகிறது. மங்களத்திற்கும் தர்ம செயலுக்கும் அடையாளமான நிறமும் இதுதான். அதனாலேயே மஞ்சள் நிறத்திற்கு எதிலும் தனிச்சிறப்பு உண்டு. அவ்வகையில் மங்களம் அருள்வதால் இந்த கணபதி, தனிச்சிறப்பு பெறுகிறார்.
தியான சுலோகம்
பாசாங்குசௌ மோதகம் ஏக தந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம்
ஹாரித் ரக'ண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதா'ம்சுகம் ராத்ரி க'ணேசமீடே ||
பாசாங்குச - பாசம், அங்குசம் எனும் ஆயுதங்களையும்
மோதகம் - பூரண பலகார மோதகத்தையும்
ஏகதந்தம் - தனது ஒடித்த தந்தத்தையும்
கரைர் - தமது நான்கு கைகளால்
ததாநம் - ஏந்தியிருப்பவரும்
கநகாஸநஸ்தம் - தங்கத்தால் ஆன இருக்கையில் அமர்ந்திருப்பவரும்
ஹாரித் ரக ண்ட ப்ரதிமம் - மஞ்சள் துண்டு போல திருமேனி நிறம் கொண்டவரும்
த்ரிநேத்ரம் - முக்கண்ணரும்
பீதாம்சுகம் - மஞ்சள்நிறப் பட்டாடையை அணிந்திருப்பவரும் (ஆன)
ராத்ரி க ணேசம் - ஹரித்ரா கணபதி எனும் பெயருடைய விநாயகரை
ஈடே - துதிக்கிறேன்.
பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.
மோதகம்: இனிப்பானது. உயிர்களுக்கு நிரந்தர இன்பமான வீடுபேற்றைத் தருபவர் கணபதி என்பதைக் காட்டுவது
அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.
ஒடித்த தந்தம்: நிறத்தால் தூய்மையானது:ஆயுதமாகவும் பயன்படுவது. அது மன உறுதியின் அடையாளம். இவ்விரண்டு தன்மையும் கர்மயோகத்திற்கு அடையாளம்.
பலன்: மங்களம் கிடைக்கும்; கவலை நீங்கி மனநிறைவு கிட்டும்
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்