
நீதிக்கு தலைவணங்கு
பாண்டவர்கள் வனவாச காலத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. காட்டில் அவர்கள் அலைந்து திரிந்த போது ஒருமுறை அவர்களுக்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீர் இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடிப்பதற்காக அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் என ஒவ்வொருவராகச் சென்ற அவர்கள் ஒரு குளத்தைக் கண்டனர்.
அந்தக் குளம் ஒரு யட்சனால் பாதுகாக்கப்பட்டது. அது தெரியாமல் அர்ஜுனன் முதலில் தண்ணீர் குடிக்க முயற்சித்தான். அப்போது அசரீரி வாக்கு ஒலித்தது. ''நில்! நான் ஒரு யட்சன் பேசுகிறேன். இந்தக் குளம் என்னுடையது. என் அனுமதி இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. மீறி குடிக்க வேண்டும் எனில் என் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். மீறினால் மரணம் ஏற்படும் என எச்சரிக்கிறேன்'' என்றது. அர்ஜுனன் அதை பொருட்படுத்தாமல் தண்ணீர் அருந்தினான். அடுத்தகணமே அவன் மயங்கி விழுந்தான்.
தண்ணீர் எடுக்கச் சென்ற அர்ஜுனன் வராததால், பீமன் அவனைப் பார்க்கச் சென்றான். அவனுக்கும் அசரீரி ஒலித்தது. அவனும் அதைக் கேளாமல் தண்ணீர் அருந்தி அர்ஜுனன் போல் மயங்கி விழுந்தான். இதே போல் நகுலனும் சகாதேவனும் அடுத்தடுத்து மயங்கினர்.
தண்ணீர் தேடிச் சென்ற தம்பிகள் யாரும் திரும்பாததால் தர்மர் கவலை அடைந்தார். நேரில் சென்ற போது குளக்கரையில் தம்பிகள் நால்வரும் சடலமாக கிடப்பதைக் கண்டு அச்சமுற்றான். அப்போது அசரீரியாக, ''நான் ஒரு யட்சன்! என் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தண்ணீரை தொடாதே. இல்லாவிட்டால் நீயும் மாண்டு போவாய்” என்றது.
தர்மன் பணிவுடன், ''யட்சரே! உமக்கு வணக்கம். தாராளமாக கேள்விகளைக் கேளுங்கள்'' என்றான்.
''பூமியைக் காட்டிலும் கனமானது?''
''கருவில் குழந்தையைத் தாங்கும் தாய்!''
''வானத்தைக் காட்டிலும் உயர்ந்தவன்?''
''தந்தை''
''காற்றை விட விரைவாகச் செல்வது?''
''மனம்''
''புல்லினும் அற்பமானது?''
''கவலை''
''துாங்கும் போதும் கண்களை மூடாமல் இருப்பது?''
''மீன்''
''பிறந்தும் அசையாதது?''
''முட்டை''
''வெல்ல முடியாத எதிரி?''
''கோபம்''
''செல்வத்தில் சிறந்தது?''
''மக்கட் செல்வம்''
''வெளியூருக்குப் போகும் போது உதவுவது?''
''கற்ற வித்தை''
''வீட்டில் இருப்பவனுக்குத் தோழன்?''
''மனைவி''
''நோயாளிக்குத் தோழன்?''
''மருத்துவர்''
''சாகப் போகிறவனுக்கு நண்பன்?''
''தானம்''
''தவம் என்பது?''
''தனக்குரிய கடமையைச் செய்வதே''
''எதை விட்டால் மனிதன் செல்வனாகிறான்?''
''ஆசையை''
''உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?''
''தினமும் மற்றவர்கள் இறப்பதைப் பார்த்தும், தான் மட்டும் உலகில் என்றும் நிலைத்திருக்கப் போகிறோம் என நினைக்கிறார்கள். வாழக் கூடிய இந்தக் குறுகிய காலத்தில் கொள்ளை ஆசைகளுடன் போராடுகிறார்களே... இது மிக ஆச்சரியமானது''
தர்மனின் பதில்களால் திருப்தியடைந்த யட்சன், ''உன் சகோதரர்களில் ஒருவனை பிழைக்கச் செய்கிறேன். உனக்கு விருப்பமானவன் யார் என்று சொல்'' என்றான்.
ஒரு கணம் யோசித்து விட்டு, ''நகுலன் பிழைக்க அருள் புரிய வேண்டும்'' எனக் கேட்டார் தர்மன்.
வியப்படைந்த யட்சன், ''பலம் மிக்க பீமன், வில் வித்தையில் சிறந்த அர்ஜுனன் ஆகியோரை விட்டு விட்டு நகுலன் வேண்டும் என்கிறாயே. அதனால் உனக்கென்ன நன்மை? முடியாது. வேறு யாரையாவது கேள். பிழைக்கச் செய்கிறேன்'' என்றான் யட்சன்.
தர்மனோ, ''என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவியர். குந்திக்கு மகனாக நான் உயிரோடு இருக்கிறேன். அதே போல் மாற்றாந் தாயான மாத்ரிக்கு ஒரு மகன் வேண்டுமே. இல்லாவிட்டால் உலகம் என்னைப் பழிக்கும். அதனால்தான் நகுலனை தேர்வு செய்தேன்'' என்றான்.
தர்மனின் பதிலால் வியப்பு அடைந்த யட்சன், தன் உண்மையான வடிவமான எமதர்மனாக காட்சியளித்தான்.
'' உன் நற்குணத்தைச் சோதிக்கவே இப்படி செய்தேன். நீதி, நேர்மை தவறாத உன் குணம் என் மனதை கவர்ந்து விட்டது. இப்போதே உன் சகோதரர் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்'' என வாக்களித்தான். அதன்படி சகோதரர்கள் உயிருடன் எழுந்தனர். தர்மனும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றான்.
--பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com

