
ஆந்திராவில் பிறந்த ஏழை அந்தணச் சிறுவன் ராமன். இளமையிலேயே தந்தையை இழந்ததால் தெனாலி என்னும் ஊரில் இருந்த தாய்மாமனின் ஆதரவில் வாழ்ந்தனர். ராமனுக்கு படிப்பு வேப்பங்காயாகக் கசந்தது. இளைஞனான பிறகு சம்பாதிக்க முடியவில்லையே என்ற கவலை வாட்டியது.
ஒருநாள் துறவி ஒருவரைச் சந்தித்தான் ராமன். அவர் காளிதேவிக்குரிய மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ஒதுக்குப்புறத்தில் இருந்த காளி கோயிலில் தங்கி மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினான். காளி அவன் முன் தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டாள்.
''தாயே! வறுமையில் வாடும் எனக்கு நல்லறிவும், செல்வமும் தர வேண்டும்'' என்றான். சிரித்தபடி காளி, '' உனக்கு பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?”
''ஆம் தாயே. புகழுடன் வாழ கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும்'' என்றான்.காளி கைகளை நீட்டினாள். இரு பால் கிண்ணங்கள் தோன்றின. அவற்றை கொடுத்து, ''ராமா! இந்த கிண்ணங்களில் உள்ள பால் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். ஏதாவது ஒரு பாலை நீ குடிக்கலாம். உனக்கு தேவையானதை எடுத்துக்கொள்” என்றாள்.
''என்ன தாயே! இரண்டையும் தானே கேட்டேன். இப்போது எதை குடிப்பது என தெரியவில்லையே'' என யோசித்தான். சட்டென இடது கையில் இருந்த பாலை வலதுகை கிண்ணத்தில் ஊற்றி மடமடவெனக் குடித்தான். காளிக்கு கோபம் வந்தது.
''நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத் தானே குடிக்கச் சொன்னேன்''
''ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத் தானே குடித்தேன்'' என்றான்.
''ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?''
''கலக்கக் கூடாது என தாங்கள் சொல்லவில்லையே''
அவனது பதிலைக் கேட்டு காளியே சிரித்தாள். ''ராமா! நீ கெட்டிக்கார பயல். என்னையே ஏமாற்றி விட்டாய். விகடகவி என்னும் புகழுடன் வாழ்வாயாக'' என வரம் அளித்து மறைந்தாள்.அந்த இளைஞனே பிற்காலத்தில் தெனாலிராமன் என போற்றப்பட்டார். விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரின் அவையில் அஷ்டதிக் கஜங்கள் என்னும் எட்டு அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

