sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் - 29

/

தெய்வீக கதைகள் - 29

தெய்வீக கதைகள் - 29

தெய்வீக கதைகள் - 29


ADDED : அக் 07, 2025 01:31 PM

Google News

ADDED : அக் 07, 2025 01:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருபக்தி

பட்டினத்தாரின் சீடரான பத்திரகிரியாரின் இயற்பெயர் பத்ருஹரி. உஜ்ஜயினியில் உள்ள மாகாளம் என்னும் பகுதியின் மன்னன் ஆன இவர் ஒரு சிவபக்தர். ஒரு நாள் இவரது அரண்மனையில் கொள்ளையர்கள் புகுந்து விலையுயர்ந்த நகைகளை கொள்ளையடித்தனர்.

திரும்பிச் செல்லும் வழியில் இருந்த விநாயகர் கோயிலில், கொள்ளையடித்த நகைகளில் ஒரு மாணிக்க மாலையை காணிக்கையாக வீசிச் சென்றனர். கெட்டதிலும் ஒரு நல்ல பழக்கம் அவர்களுக்கு இருந்தது வியப்பான விஷயமே. ஆனால் கடவுளின் சித்தம் வேறொன்றாக இருந்தது.

அந்த மாணிக்க மாலை விநாயகரின் கழுத்தில் விழுவதற்குப் பதிலாக, அங்கே தியானத்தில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. இதுதான் விதியின் சதியோ! விடிந்ததும் அரண்மனையில் கொள்ளை போன செய்தியை அறிந்த மன்னர் சும்மா இருப்பாரா? அரண்மனையில் திருடு போனது என்றால் மன்னனுக்குத் தானே இழுக்கு. உடனே வீரர்களை நாலாபுறமும் அனுப்பி, கொள்ளையர்களைத் தேடச் சொன்னான்.

தேடும் வழியில் விநாயகர் கோயிலில் இருந்த பட்டினத்தாரும், அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையும் அவர்களின் பார்வையில் விழுந்தது. உடனே அவரைக் கைது செய்து அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். ஏன் தன்னை கைது செய்கிறார்கள் என பட்டினத்தாருக்கு புரியவில்லை. இருந்தாலும் சிவனை சிந்தித்தபடியே உடன் சென்றார். பட்டினத்தாரிடம் விசாரிக்காமல் கழுவேற்ற உத்தரவிட்டான் மன்னன்.

வீரர்களும் அவரைக் கழுவேற்ற இழுத்துச் சென்றனர். அங்கே சிவனை தியானித்து, 'என் செயலாவது ஒன்றுமில்லை' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார் பட்டினத்தார்.

“என் செயலாவது ஒன்றுமில்லை ஈசனார்தங்

கொடுப்பினை யன்றியொன்றுங் கூடாதே - மெய்ச்சோதி

தாமரை மேலான் தலையெழுத்தே தான்வந்து

காண்ட லானென்றோ காண்பதுவே”

அனைத்தும் சிவனின் சித்தப்படியே நடக்கிறது. நம் முயற்சி என்பது வெறும் கருவிதான். அதனால், நான் என்னும் ஆணவத்தை கைவிட்டு சிவனருளை ஏற்றுக் கொள்வதே உண்மை ஞானம். பாடி முடித்தார். என்னே ஆச்சரியம்! கழுமரம் தீப்பற்றி எரிந்தது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மன்னன் ஓடி வந்தான். தவறு செய்துவிட்டேனே என்ற பயம் மனதைக் கவ்வியது. பட்டினத்தார் திருடன் அல்ல; அருளாளர் என்ற உணர்ச்சி பொங்கியது. உடனே அவரின் பாதம் பணிந்து, சீடராக ஏற்கும்படி வேண்டினான். குருவைக் கண்டு விட்டதால் சுட்டது போல ஆசை மறைந்தது. சுக போக வாழ்வைத் துறந்தான். மன்னனின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் தீட்சை கொடுத்து, 'பத்திரகிரியார்' என்ற தீட்சா நாமம் வழங்கினார்.

குருநாதரான பட்டினத்தாரின் கட்டளைப்படி தமிழகத்தில் உள்ள திருவிடைமருதுாரில் துறவு மேற்கொண்டார் பத்திரகிரியார். இங்குள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் தங்கியிருக்கச் சொன்னார் பட்டினத்தார். குருநாதர் சொல்லைத் தட்டாமல் அப்படியே செய்தார். பிச்சை ஏற்று குருநாதருக்கு சமர்ப்பித்த பிறகே, தான் உண்டு வாழ்ந்தார்.

ஒருநாள் குருநாதருக்கு உணவளித்து விட்டு, தான் உண்ணும் வேளையில் பெண் நாய் ஒன்று அவர் முன்னே வந்தது. பசியால் வாடிய அதைக் கண்டு இரக்கப்பட்டு உணவு கொடுத்தார். அது முதல் அந்த நாய் அவருடனே தங்கியது. முற்பிறவியில் அந்த நாய் ஒரு விலைமகளாக இருந்தது. தான் செய்த பாவத்தின் பலனாக இப்போது நாயாகப் பிறந்தது. பத்திரகிரியார் அந்த நாய்க்கு தினமும் தவறாமல் உணவளித்து பாதுகாத்தார்.

இந்நிலையில் பட்டினத்தார் திருவிடைமருதுார் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் அமர்ந்து சிவனைத் தியானித்தபடி இருந்தார். ஒருநாள் ஏழை ஒருவர் பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டு வந்தார். அதற்கு பட்டினத்தார், ''மேலைக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அவனிடம் உணவு கேள்” என்று சொல்லி அனுப்பினார்.

ஏழையும் மேற்கு கோபுரத்தில் உள்ள பத்திரகிரியாரிடம் சென்று, ''ஐயா... எனக்கு பசிக்கிறது. கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஞானியிடம் உணவு கேட்டேன். அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அவனிடம் கேள் என்றார். தாங்கள் தான் என நினைக்கிறேன். உணவு தரலாமா” எனக் கேட்டார்.

குடும்பஸ்தன் என்ற வார்த்தையை கேட்டுப் பதறிய பத்திரகிரியார், 'ஐயோ! என்ன காரியம் செய்து விட்டேன்? இந்த திருவோடும், பெண் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கி பந்த பாசத்திற்குள் தள்ளி விட்டதே' என வருந்தினார். திருவோடு வேண்டாம் எனக் கருதி நாயின் மீது விட்டெறிந்தார். அது நாயின் தலையில் விழவே அது இறந்தது. இந்த நிகழ்வுக்கு காரணம் சிவன் திருவிளையாடல் அன்றி வேறென்ன சொல்வது?

பத்திரகிரியார் ஊட்டிய சோற்றின் புண்ணிய பலத்தால் அந்த நாய் மறுபிறவியில் காசிராஜனின் மகளாகப் பிறந்தது. தெய்வப் பெண்ணான அவள் திருமணப் பருவம் அடைந்ததும், “அப்பா... நான் திருவிடைமருதுார் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் இருக்கும் தவசீலருக்கு உரியவள்'' என தெரிவித்தாள். மன்னரும் மகளை அழைத்து வந்தார்.

அவள் சொன்னது போலவே பத்திரகிரியார் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் தங்கியிருந்தார். அவரின் காலில் விழுந்த மன்னரின் மகள், ''தாங்கள் உணவளித்த நாயே இப்போது பெண்ணாக வந்திருக்கிறேன். என்னை ஏற்க வேண்டும்'' என அழுதாள். ஞான திருஷ்டியில் அவருக்கும் உண்மை புரிந்தது.

குருநாதரான பட்டினத்தாரிடம் ஓடி வந்தார். ''குருநாதா... தங்களின் எச்சிலை உண்ட எனக்கு ஆசை வரலாமா? முக்தி கிடையாதா?” என அழுதார். உடனே பட்டினத்தார், 'எல்லாம் சிவன் செயல்' என தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு தோன்றிய பேரொளிக்குள் பத்திரகிரியார், மன்னரின் மகள் இருவரும் ஐக்கியமாயினர்.

பத்திரகிரியார் பாடிய 'மெய்ஞ்ஞானப் புலம்பல்' என்னும் நுாலில் 231 பாடல்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடலும் 'எக்காலம்' என்ற கேள்வியுடன் முடியும். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு இது சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

அங்கே தோன்றிய பேரொளி, பத்திரகிரியாரை ஐக்கியப்படுத்திக் கொண்டது அல்லவா? பட்டினத்தார் தனக்குக் கிடைக்காத பேறு தன் சீடனுக்குக் கிடைத்ததை பெருமையாகக் கருதினாலும், தனக்கு இன்னும் வினை தொடர்கிறதே என வருந்தினார். தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூரில் தங்கினார்.

சிறுவனாக உருமாறி அங்கிருந்த சிறுவர்களுடன் கடற்கரை மணலில் விளையாடினார். மற்ற சிறுவர்கள் ஆச்சரியப்படும் வகையில் குழியைத் தோண்டி, அதனுள் தியானத்தில் அமர்ந்து அப்படியே மறைந்தார். அந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. இந்த இடமே பட்டினத்தாரின் ஜீவசமாதியாக உள்ளது.

-பக்தி தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com






      Dinamalar
      Follow us