sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோயிலும் பிரசாதமும் - 20

/

கோயிலும் பிரசாதமும் - 20

கோயிலும் பிரசாதமும் - 20

கோயிலும் பிரசாதமும் - 20


ADDED : அக் 07, 2025 01:30 PM

Google News

ADDED : அக் 07, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள் கோயில் புளியோதரை

பெருமாள் கோயிலில் புளியோதரை புகழ் மிக்க பிரசாதம். தமிழக வைணவத் தலங்களில் வழங்கப்படும் சர்க்கரைப் பொங்கல், அக்கார அடிசில், வெண் பொங்கல், மிளகு வடை பிரசாதத்தோடு புளியோதரைக்கும் முக்கிய இடம் உண்டு. இதை 'மடப்பள்ளி புளியோதரை, ஐயங்கார் புளியோதரை' என்றும் சொல்வர்.

புளி ஓரை என்பது சமைத்த அரிசி எனப் பொருள்படும். புளியோரை என்பதே புளியோதரை என்றானதாகச் சொல்வர். புளியோதரை கன்னடத்தில் 'ஹீளியன்னா' அதாவது 'புளி அன்னம்' என்றும் தெலுங்கில் 'புளி ஹோரா' என்றும் அழைக்கப்படுகிறது.

புளி சேர்த்து சமைப்பதால் புளியோதரை ஓரிரு நாள் கெடாமல் இருக்கும். அந்த காலத்தில் நடை பயணம் செல்லும் போது உணவாக புளியோதரையை எடுத்துச் செல்வர். கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள வைணவத் தலமான மேல்கோட்டையில் தரப்படும் புளியோதரை புகழ் பெற்றது. இதில் பாகு வெல்லம் சேர்ப்பது வழக்கம். கர்நாடகாவில் தயாரிக்கப்படும் புளியோதரையில் கடுகு அதிகளவில் சேர்க்கப்படும்.

ஆந்திராவில் தயாரிக்கப்படும் புளியோதரையில் எள், வேர்க்கடலை, மிளகாய் அதிகம் சேர்க்கப்படும். ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரையில் நல்லெண்ணெய் கமகமக்கும். தமிழக பெருமாள் கோயில்களில் பிரசாத கடைகளில் புளியோதரை விற்பனைக்குக் கிடைக்கும்.

இருபத்தி ஐந்து அல்லது முப்பது ரூபாய்க்கு தொன்னையில் புளியோதரையை வைத்துக் கொடுக்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் புளியோதரை பிரசாதமாக வாங்குவது விசேஷம். புளியோதரை இரண்டு விதங்களில் தயாரிக்கப்படுகிறது.

சாதத்தை வடித்து அதில் நல்லெண்ணெய் விட்டு புளியோதரைப் பொடியை கலந்து செய்வது. மற்றொரு முறையில் சாதம் வடித்து அதில் புளிக்காய்ச்சலைச் சேர்த்து பதமாகக் கலந்து செய்வது. பொருட்களை சரியான விகிதத்தில கலந்து செய்தால் இரண்டுமே சுவையானது தான்.

திருநின்றவூரில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து விட்டு பக்தர்களுக்கு புளியோதரையை பிரசாதம் வழங்கினால் கடன் தொல்லை மறையும்.

என்னதான் கோயில் புளியோதரையின் செய்முறையைக் கேட்டு கவனமாக தயாரித்தாலும் மடப்பள்ளியில் தயாராகும் புளியோதரையின் சுவை நமக்குக் கிடைப்பதில்லை. காரணம் வீட்டில் செய்தால் அது சாதம். மடப்பள்ளியில் செய்தால் அது பிரசாதம். இனி பெருமாள் கோயில் புளியோதரையின் செய்முறையை காண்போம்.

தேவையான பொருள்

பச்சரிசி - 1 கிலோ

புளிக்காய்ச்சல் தயாரிக்க

நல்லெண்ணெய் - 500 மி.லி.,

புளி - 125 கி

மஞ்சள் துாள் - 20 கி

மிளகாய் வற்றல் - 50 கி

தனியா - 50 கி

வெந்தயம் - 10 கி

பெருங்காயத் துாள் - 10 கி

கடுகு - 50 கி

உளுத்தம்பருப்பு - 75 கி

கடலைப்பருப்பு - 75 கி

பச்சை வேர்க்கடலை - 75 கி

கல் உப்பு - தேவையான அளவு

கறி வேப்பிலை - கைப்பிடி அளவு

செய்முறை

புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி வெந்தயம், மிளகாய் வற்றல், தனியாவை நன்றாக சிவக்க வறுத்து சற்று நேரம் ஆற வைத்து பின்னர் நறநறவென்ற பதத்தில் மிக்சியில் இட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தில் மீதமுள்ள நல்லெண்ணெய்யில் பாதியை விட்டு அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு இட்டுத் தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக்காய்ச்சலை சேர்த்து மஞ்சள் துாளை இட்டு நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

கொதித்து பாதியாகச் சுண்டியதும் அரைத்து வைத்த பொடியை அதில் கொட்டி கல் உப்பு, பெருங்காயத் துாள் சேர்த்து தீயை சிறியதாக்கி விட்டு கிளறவும்.

நன்றாகக் கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது புளிக்காய்ச்சல் தயார். கடாயில் மீதமுள்ள நல்லெண்ணெய்யை விட்டு அதில் கடலைப்பருப்பு, வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து அகலமான தட்டில் கொட்டி அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக ஆற விட வேண்டும்.

வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, வேர்கடலையை சாதத்தில் சேர்த்து பச்சைக் கறிவேப்பிலையை அதில் இட்டு புளிக்காய்ச்சலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து சாதம் உடையாமல் கலக்க வேண்டும். இப்போது பெருமாள் கோயில் பிரசாதம் புளியோதரை தயார்.



-பிரசாதம் தொடரும்

ஆர்.வி.பதி






      Dinamalar
      Follow us