sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் - 30

/

தெய்வீக கதைகள் - 30

தெய்வீக கதைகள் - 30

தெய்வீக கதைகள் - 30


ADDED : அக் 17, 2025 08:31 AM

Google News

ADDED : அக் 17, 2025 08:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சனின் யாகம்

பிரம்மாவின் மகனான தட்சன், ''தந்தையே... எல்லா உயிர்களுக்கும் சாட்சியாக இருப்பவர் யார் என அறிய ஆவலாக இருக்கிறேன்'' என்றான். உடனே பிரம்மா, “உலகம் அனைத்தையும் படைத்தவர் சிவன் தான். பிரம்மா, விஷ்ணுவாகிய எங்களுக்கு அவரே தலைவர். மானசரோவர் குளக்கரையில் தவம் செய்து சிவனிடம் வேண்டிய வரங்களைப் பெறுவாயாக'' என்றார்.

தட்சனும் கடும் தவம் செய்து சிவனிடம் இருந்து வரம் பெற்றதோடு, “என் மகளாக பிறக்கப் போகும் பார்வதியை தங்களுக்கு மணமுடித்து வைக்கிறேன்'' என வாக்களித்தான். ''நீ நியாயமாக செயல்பட்டால்தான் நான் கொடுத்த வரங்கள் நன்மையைத் தரும்'' எனச் சொல்லி சிவனும் அங்கிருந்து மறைந்தார்.

காலம் சென்றது. 27 நட்சத்திரங்களை மகள்களாகப் பெற்ற தட்சன், அவர்கள் விரும்பியபடி சந்திரனுக்கு மணமுடித்தான். ஆனால் மனைவியரில் ஒருத்தியான ரோகிணி மீது மட்டும் அன்பு காட்டினான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட தட்சன், “ காசநோயால் அவதிப்படுவாயாக'' என மருமகனை சபித்தான். சந்திரனும் கைலாயம் சென்று சிவனைச் சரணடைந்தான். தன் தலையில் சூடிக் கொண்டு சந்திரனைக் காப்பாற்றினார் சிவன்.

''என்னால் புறக்கணிக்கப்பட்ட சந்திரனை தலையில் வைத்து கூத்தாடுகிறாயா” என கோபித்தான் தட்சன்.

அதன் பின் ஒருமுறை மகள், மருமகனைக் காண தட்சன் கைலாயத்திற்குச் சென்றான். அங்கிருந்த நந்திகேஸ்வரர் அவனை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவமதித்தாக கருதிய அவன், வானுலக தேவர்களை அழைத்து, '' சிவனை வணங்குபவர்களைத் தண்டிப்பேன்'' என ஆணையிட்டான். இதற்கிடையில் பிரம்மா யாகம் ஒன்றை நடத்த தேவர்களை அழைத்தார். அதில் சிவன், நந்திகேஸ்வரர், தட்சன் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். கைலாயத்தின் காவலனாகிய நந்திகேஸ்வரரை வரவேற்று உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தார் பிரம்மா. அதைக் கண்டு கோபித்த தட்சன், ''என்ன... காவலாளிக்கு இவ்வளவு வரவேற்பு தேவையா... என்றதோடு, சிவனுக்கு இந்த யாகத்தில் ஹவிஸ் கொடுக்கக் கூடாது'' எனத் தெரிவித்தான். வாய்க்கு வந்தபடி சிவனை ஏசினான். இதை எல்லாம் சகிக்க முடியாத நந்திகேஸ்வரர்,

“ நீ இப்படி உளறிக் கொண்டே இருந்தால் உன் தலை துண்டிக்கப்படும் ஜாக்கிரதை! உன் பக்கம் நிற்பவர்கள் தலையும் துண்டிக்கப்படும். சூரபதுமனால் தீங்கும் உண்டாகும்'' என சபித்து விட்டு கைலாயத்திற்கு புறப்பட்டார். இதன் பின் அந்த யாகம் பாதியில் நின்று போனது.

தேவர்கள் அனைவரும் நந்திகேஸ்வரர் சாபமிட்டதைக் கண்டு பயந்தனர். “தேவர்களே! பயப்படாதீர்கள். உங்களை எல்லாம் அழைத்து நான் ஒரு யாகம் நடத்தப் போகிறேன். ஆனால் சிவனை மட்டும் அழைக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தான்.

மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திராதி தேவர்கள், முனிவர்கள், சந்திரர், சூரியர்கள், பூலோக மன்னர்கள் அதில் பங்கேற்றனர். தன்னை அழைக்காமல் பிரம்மா, திருமால், தேவர்களை அழைத்து தன் மாமனார் தட்சன் யாகம் நடத்துகிறார் என அறிந்த சிவனுக்கு கோபம் உண்டானது. யாகத்திற்குச் செல்லக் கூடாது என தன் மனைவி பார்வதியிடம் கூறினார்.

ஆனால் பார்வதியோ, 'சுவாமி! மருமகனை அழைக்காமல் யாகம் நடத்துவது தர்மம் ஆகாது என கேட்கப் போகிறேன்'' என்றாள். “தட்சனுக்கு அழிவுக் காலம் நெருங்கி விட்டது. நீ அங்கே போய் அவமானப்படாதே'' என எச்சரித்தார்.

பார்வதியோ, ' தாங்கள் யார் என என் தந்தைக்குப் புரிய வைக்கிறேன்' எனச் சொல்லிச் சென்றாள். பார்வதியை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு மற்றவர்களை தட்சன் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் 'தந்தையே! தாங்கள் நடத்தும் இந்த யாகத்தில் மருமகன் பங்கேற்றால் தானே தங்களுக்குப் பெருமை? அவரை அழைக்காமல் யாகம் நடத்துவது சரியா?'' எனக் கேட்டாள் பார்வதி.

'யார் அவன்? சுடுகாட்டில் பேய்களுடன் திரியும் அவனை அழைத்து யாகம் நடத்தும் அவசியம் எனக்கில்லை. நீ என் எதிரியின் மனைவி ஆகிவிட்டாய். உன்னை வேண்டாம் என்று தானே யாகத்திற்கு அழைக்கவில்லை. அழைக்காத இடத்திற்கு நீ ஏன் வந்தாய்?' எனக் கேட்டான் தட்சன்.

சிவனை பழித்துப் பேசிய தட்சனிடம், 'நீ செய்யும் யாகம் அழியட்டும்' என பார்வதி சபித்து விட்டு கைலாயம் திரும்பினாள். தட்சனுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவன், தன்னுடைய அம்சமான வீரபத்திரரை அழைத்து தட்சனின் யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். வீரபத்திரருக்கு துணையாக காளியை அனுப்பினாள் பார்வதி. இருவரும் தட்சனின் யாகத்தை அழித்தனர். அப்போது அங்கு கூடி இருந்த தேவர்கள், முனிவர்கள் எல்லாம் நாலாபுறமும் ஓடினர். இதனால் யாகம் தடைபட்டு நின்றது.

பின்னாளில் காசிப முனிவர், மாயையுடன் இல்லறம் நடத்தி சூரன், சிங்கமுகன், தாரகன் ஆகிய ஆண் பிள்ளைகளைப் பெற்றார். இவர்கள் மூவரும் பல வேள்விகள் நடத்தி, சிவனிடம் வரம் பெற்றனர். அந்த வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தினர்.

தட்சனின் யாகத்தில் பங்கேற்றதால் தேவர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது. இதற்கு மூலகாரணம் நந்திகேஸ்வரரின் சாபம் தானே...

தேவர்கள் அனைவரும் சிவனை வணங்கி, ''நீங்கள் அளித்த வரத்தின் பலத்தால் அசுரர்கள் எங்களை துன்புறுத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து காத்தருள வேண்டும்' என வேண்டினர். அதற்கு சிவன், 'வருத்தம் வேண்டாம். சூரனின் கொடுமைகளை அழிக்க, என் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் அவதரிப்பான். எனவே அசுரர் பயம், நோய், துன்பம் தீர அந்த முருகனின் அருளைப் பெற மருதமலைக்கு செல்லுங்கள்' என்றார்.

இதன் பின் சூரனை அழிக்க வேண்டி திருமால் உள்ளிட்ட தேவர்கள் சிவபூஜை செயது விட்டு, மருத மலையில் உள்ள முருகனை நினைத்து தவம் செய்தனர். அங்கு வந்த நாரதரை உபசரித்த மகாவிஷ்ணு, 'அசுரபயம் விலகி முருகன் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டார்.

அவர் வழிகாட்டிய படியே மருதமலையில் எழுந்தருளிய முருகனை தவறாமல் வழிபட்டனர். மகிழ்ந்த முருகன், அவர்களுக்கு காட்சியளித்து, 'நீங்கள் விரும்பிய அசுரவதம் விரைவில் நடக்கும்' எனச் சொல்லி மறைந்தார்.

அதன்படியே வீரபாகுதேவர் உள்ளிட்ட படைத்தலைவர்களுடன் போய் தாரகாசுரன், சிங்கமுகன், சூரபத்மனை வதம் செய்தார் முருகன். அதன்பிறகு தேவர்களை வானுலகத்தில் தங்க விட்டு, பூலோகம் வந்தார். திருப்போரூரில் உள்ள ஆதிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். பின்னர் மருதமலையில் நிரந்தரமாக குடிகொண்டார். இவரை தரிசித்தால் நம் விருப்பம் அனைத்தும் நிறைவேறும்.



-பக்தி தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com






      Dinamalar
      Follow us