sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் - 32

/

தெய்வீக கதைகள் - 32

தெய்வீக கதைகள் - 32

தெய்வீக கதைகள் - 32


ADDED : அக் 30, 2025 11:18 AM

Google News

ADDED : அக் 30, 2025 11:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விதியின் பயன்

மதுரையை குலோத்துங்க பாண்டியன் சிறப்பாக ஆட்சி செய்தான். அவன் மகன் அனந்த குண பாண்டியன் தந்தையின் மேற்பார்வையில் பதவி ஏற்றான். இருவரும் கூடி சிவன் அருளால் நல்லாட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் திருப்புத்துார் என்னும் ஊரைச் சேர்ந்த ஏழை அந்தணர் ஒருவர் மனைவி, குழந்தைகளுடன் மதுரை நோக்கி வந்தார். வெகுதுாரம் நடந்து வந்த களைப்பால் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர். அப்போது அந்தணனின் மனைவி சற்று நேரத்தில் துாங்கி விட்டாள்.

குழந்தையோ மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தணர் தண்ணீர் எடுத்து வர ஆற்றை நோக்கிச் சென்றார். விதியும் இதுதான் சமயம் என பார்த்து தன் கைவரிசையைக் காட்ட சதி செய்ய ஆரம்பித்தது. என்றோ ஒருநாள் பறவையை வேட்டையாட வந்த வேடன் குறி பார்த்து எய்த அம்பு ஒன்று, மரத்தில் சிக்கிக் கொண்டு கிடந்தது. அதன் கீழே தான் அந்தணனின் மனைவி வானத்தைப் பார்த்து மல்லாக்காகப் படுத்திருந்தாள். சூறைக் காற்று வீசியதால் ஊசலாடிய அந்த அம்பு, மரத்தில் இருந்து கீழே விழுந்தது. உறங்கிக் கொண்டிருந்த அந்தணரின் மனைவியின் வயிறைப் பதம் பார்த்தது. அவள் துடிதுடித்து இறந்தாள்.

அவள் உயிர் போன சிறிது நேரத்தில் காட்டுக்குள் அலைந்து விட்டு,சோர்வடைந்த வேடன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். வெயிலின் கடுமை தாங்காமல் ஆலமரத்தின் மறுபுறத்தில் படுத்து உறங்கினான். அருகில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. தண்ணீருடன் திரும்பிய அந்தணர், மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். சுற்று முற்றும் பார்த்தார். மரத்தின் மறுபுறத்தில் உறங்கிக் கொண்டிருந்த வேடன் கண்ணில் பட்டான். இவன் தான் கொன்றிருக்க வேண்டும் என எண்ணி அவனை எழுப்பினார். ஆனால் அவனோ தான் கொல்லவில்லை என உறுதிபட தெரிவித்தான். அதை பொருட்படுத்தாத அந்தணர் நீதி வேண்டும் என குலோத்துங்க பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு வேடனையும், தன் மனைவியின் உடலையும் இழுத்துச் சென்றார்.

அரண்மனை வாசலில் சடலத்தைக் கிடத்தி விட்டு, மன்னருக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். அந்தணர் சொல்வதையே ஆதாரமாக கொண்டு வேடனைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்ய ஆணையிட்டார் மன்னர் . ஆனால் வேடனோ, தான் கொலை செய்யவில்லை என கண்ணீருடன் புலம்பியபடி இருந்தான். அதை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.

அன்றிரவு மன்னருக்கு துாக்கம் வரவில்லை. அந்தணர் மனைவியை கொலை செய்யவில்லை என்ற வேடனின் அழுகுரல் காதில் ஒலித்தபடி இருந்தது. உண்மை தெரியாமல் தான் தவறு செய்கிறோமோ? என்ற குற்ற உணர்ச்சி உண்டானது. மனைவியை இழந்த அந்தணருக்குப் பொருள் கொடுத்து உடலை முறைப்படி அடக்கம் செய்த பின் தன்னைக் காண வரும்படி அனுப்பி வைத்தார் மன்னர். இதற்கிடையில் மதுரையில் குடி கொண்டிருக்கும் சொக்கநாதரிடம் (மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமான்) மன்னர் முறையிட்டார். “சொக்கநாதப் பெருமானே! எனக்கும் என் மகனுக்கும் இக்கட்டை உண்டாக்கும் வழக்கு ஒன்று வந்துள்ளது. இதில் யார் குற்றவாளி எனக் கண்டுபிடிக்க எங்களால் முடியவில்லை. இதிலிருந்து நீதான் காத்தருள வேண்டும்” என மனமுருகி வேண்டினான். அப்போது அசரீரியாக, ''கவலை வேண்டாம் மன்னா! நாளை மறுநாள் அன்று செட்டியத் தெருவில் திருமணம் ஒன்று நடக்க உள்ளது. அங்கு நீயும், உன் அமைச்சரும் மாறு வேடத்தில் செல்லுங்கள். உண்மை புரியும்” என்றது.

அதன்படி அமைச்சருடன் மன்னர் திருமணத்திற்கு மாறுவேடத்தில் சென்றார். அங்கு இரண்டு எமதுாதர்கள் தங்களின் உருவத்தை மறைத்துக் கொண்டு மன்னரின் அருகில் உட்கார்ந்தனர். அவர்களின் உருவத்தை பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் பேச்சு மட்டும் தெளிவாகக் கேட்டது. ஒருவன் மற்றொருவனிடம், ''நண்பனே! இதோ மணமேடையில் உட்கார்ந்திருக்கும் மணமகனின் உயிரைக் கொண்டு வரவேண்டுமென எமதர்மன் ஆணையிட்டிருக்கிறாரே! எப்படி இவன் உயிரைப் பறிப்பது... பாவம் இங்கு உறவினர்கள் எல்லாம் சூழ்ந்திருக்கிறார்களே...” என்றான்.

அதற்கு மற்றொருவன்,“இதென்ன பிரமாதம்? கடந்த வாரம் தானே ஆல மரத்தடியில் துாங்கிக் கொண்டிருந்த அந்தணரின் மனைவியின் வயிற்றில், மரத்தில் வெகு நாளாகத் தொங்கிக் கொண்டிருந்த அம்பை சரியாக அவள் மீது விழச் செய்து உயிரை பறித்தோமே.. மறந்து போச்சா...

அதே போல இந்த வீட்டின் பின்புறம் கொட்டிலில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்து விடுவோம். கோபமுற்ற அது, நேராக மணமேடைக்குள் ஓடி வந்து மணமகனைக் குத்திக் கொன்று விடும். பிறகு என்ன? வழக்கம் போல பழி ஒருபக்கம். பாவம் ஒரு பக்கம். எளிதாக அவன் உயிரை எடுத்துக் கொண்டு போகலாம்” என்றான்.

அது கேட்டு மன்னரும், அமைச்சரும் விக்கித்து நின்றனர். ''நடந்த உண்மையை உணரவே இந்தத் திருமணத்திற்கு சொக்கநாதர் அனுப்பி இருக்கிறார்'' என்றார் மன்னர்.

எமதுாதர்கள் பேசியபடி அவிழ்த்து விடப்பட்ட மாடு மணமகனைக் குத்திக் கொன்றது. மன்னரும், அமைச்சரும் அரண்மனைக்கு வந்ததும் சிறையில் வாடிய வேடனை விடுதலை செய்ததோடு அவனிடம் மன்னிப்பு கேட்டனர்.

பின்னர் மனைவியை இழந்த அந்தணரை வரவழைத்து, நடந்ததை விவரித்தனர். அவருக்கு மறுமணம் செய்ய பணம் கொடுத்து அனுப்பினர். கோயிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு, “ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டு எம் அடிகள் நீர் அரும் பழியஞ்சு நாதராய் இருந்தீர். என் விழி திறந்து உண்மை காணச் செய்தாய்” என்று சொல்லி நன்றியைத் தெரிவித்தான் குலோத்துங்க பாண்டியன்.

இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், முன்வினைப் பயனை இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம் என்பது தான். முற்பிறவியில் செய்த பாவத்தால் நம்முடைய மரணம், துர்மரணமாக அமையும் என்பதால் பிறருக்கு தீமை செய்யாமல் வாழ வேண்டும் என்பது தான்.

-முற்றும்

உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com

இந்த தொடரை புத்தகமாக பெற1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us