ADDED : அக் 30, 2025 11:16 AM

திருச்செந்துார் முருகன் - புட்டமுது
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை வீடுகளில் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் இரண்டாம் படைவீடாகும். இங்கு தினமும் ஒன்பது கால பூஜைகள் நடக்கின்றன. பூஜைகளின் போது அதிரசம், தேன்குழல், அப்பம், புட்டமுது, சிறுபருப்புப் பொங்கல், நெய்சாதம் என விதவித நைவேத்யம் படைக்கப்படுகின்றன.
காலையில் பூஜையின் போது பொரி, பழம், தாம்பூலம் முதலானவையும் இரவில் அர்த்தஜாம பூஜையின் போது பால், சுகியன், பால்கோவா முதலானவையும் நைவேத்யம் செய்யப்படுகிறது. குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு முற்காலத்தில் தினையரிசியில் புட்டமுது செய்வது வழக்கம்.
முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக அவதரித்து சூரபத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம் இது. அசுரனுடன் போர் செய்ய சேனைத்தளபதியாக வீரபாகு,சிவகணங்களை படைத்தார் சிவபெருமான். தன் சக்தியை திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்தார் பார்வதி. திருச்செந்துாரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்து தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றினார் முருகன். இதுவே சூரசம்ஹாரம், கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருச்செந்துாரில் சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் கிழக்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் முருகன் அருள்புரிகிறார். தவக்கோலத்தில் சடைமுடி தரித்து ஒரு திருமுகம், நான்கு கைகளோடு காட்சி தருகிறார். மேல் வலது கையில் சக்திவேல், மேல் இடது கையில் ஜபமாலை தாங்கி வரத முத்திரையிலும், கீழ் இடது கையை இடுப்பில் வைத்த நிலையிலும் இருக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகப்பெருமான் தாமரை மலரால் சிவபூஜை செய்தார். இதன் அடிப்படையில் மூலவரின் வலது கையில் தாமரை உள்ளது. பிரதான உற்ஸவரான வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.
வழக்கமாக கோயில்களில் ஒரு உற்ஸவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய்ப்பெருமாள் என நான்கு உற்ஸவர்கள் தனித்தனி சன்னதியில் உள்ளனர். திருச்செந்துாரில் முதலில் துாண்டுகை விநாயகரை தரிசித்த பின்னரே முருகனை தரிசிக்கின்றனர். பால்குடம், காவடி எடுக்கும் பக்தர்கள் துாண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம், காவடி எடுத்து வருகின்றனர்.
மணியடியில் வீரமகேந்திரருக்கு இடதுபுறம் ஒரு வாசல் உள்ளது. அதன் வழியே அமைந்துள்ள பாம்பறையின் வழியாகச் (மூலவரை இடப்புறமாக சுற்றிச் செல்லும் வழி) சென்றால் மூலவருக்கு வலதுபுறத்தில் உள்ள குகையில் ஒரே பீடத்தில் பஞ்சலிங்கத்தை தரிசிக்கலாம்.
இந்த பஞ்சலிங்கங்களை முருகனே பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்கு தெற்கில் கந்தபுஷ்கரணி என்னும் நாழிக்கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்கு உள்ளே சிறுகிணறாக அமைந்த இது ஒரு சதுரடி பரப்பும், ஏழடி ஆழமும் கொண்டது. உப்புத்தன்மை இல்லாமல் நல்ல நீராக இருப்பது அதிசயம். முருகனின் அருளால் உருவான இந்த நாழிக்கிணற்றில் நீராடிய பின்பே கடலில் நீராடுவது வழக்கம்.
வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முருகன் தலங்களில் கந்தசஷ்டி ஆறு நாள் நடக்கும். ஆனால் இங்கு மட்டும் 12 நாட்கள் நடக்கிறது. மாசித்திருவிழாவின் போது தெப்போற்ஸவம் நடக்கிறது. தினமும் அதிகாலை 5:00 - இரவு 9:00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
இங்கு பன்னீர்இலை திருநீறு பிரசாதம் பிரசித்தமானது. முருகனுக்கு பன்னிரண்டு கைகள் இருப்பது போல பன்னீர் மரத்தின் இலையில் பன்னிரண்டு நரம்புகள் உள்ளன. இது முருகனின் வேல் போலவே இருக்கும். பன்னிரண்டு நரம்பு உள்ள இலைகளைத் தேர்ந்தெடுத்து அதில் திருநீறை மடித்து தருகின்றனர். நோய் தீர்க்கும் அருமருந்தாக இது உள்ளது.
புட்டமுது செய்யத் தேவையான பொருள்
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1½ கப்
தேங்காய்த் துருவல் - ½ கப்
ஏலக்காய் - 5 எண்ணிக்கை
முந்திரி - 10 எண்ணிக்கை
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து அதைத் துணியில் பரப்பி நிழலில் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் மிக்சியில் மாவாக அரைத்து சலித்து கொள்ளவும். சலித்த மாவை கடாயில் சிவக்க வறுக்கவும். மீண்டும் சலித்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடி செய்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக பிசையவும். தேங்காய்த் துருவலை வறுக்காமல் பச்சையாகப் பயன்படுத்த வேண்டும். அதில் அரிசி மாவைச் சேர்த்துப் பிசையவும். பின்னர் ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்கவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிபருப்பை சிவக்க வறுத்து எடுத்து மாவில் கலக்கவும். இப்போது முருகப்பெருமானுக்குப் பிடித்த புட்டமுது தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி

