
காஞ்சி மஹாபெரியவர் ஆந்திர மாநிலத்திற்கு யாத்திரை சென்றார். அப்போது அங்குள்ள கிராமம் ஒன்றில் இருந்த சிவன் கோயிலுக்குள் நுழைந்தார். சீடர்களான குமரேசன், பாலு மாமா போன்றோரும் சுவாமிகளை தொடர்ந்தனர்.
சற்று நேரத்தில் சிவதரிசனம் முடிந்து வெளியே வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், வாசல் அருகே அவர்கள் வைத்துச் சென்ற பொரி மூடை காணாமல் போனது. (அந்த சமயத்தில் சுவாமிகள் நெல்பொரியை மட்டும் சாப்பிட்டு வந்தார்)
அதை சுவாமிகளிடம் சீடர்கள் தெரிவித்த போது, 'பாவம்... பசியால் வாடிய யாரோ எடுத்துட்டா போலிருக்கே' என அவர்களை சமாதானம் செய்தார். நல்ல வேளையாக பாலு மாமாவின் பையில் மூன்று நாளைக்கு தேவையான பொரி கையிருப்பு இருந்தது. மூன்றாம் நாள் இரவில், 'நாளை தேவைக்கு கைப்பிடியளவு கூட பொரி இல்லையே' என வருந்தினார் குமரேசன்.
மறுநாள் காலையில் மஹாபெரியவரின் பிட்சைக்கு (உணவு) நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. 'பெரியவா... உங்க பிட்சை தடைபடாமல் இருக்க நீங்கதான் அருள்புரியணும்' என மனதிற்குள் வேண்டிக் கொண்டே குமரேசன் நடந்தார்.
என்ன ஆச்சரியம்... எதிரில் வந்த ஒருவர். 'இங்கு மஹாபெரியவா இருக்காராமே...' எனக் கேட்டபடி நெருங்கினார்.
'இதோ இங்கே தான்...' என கையைக் காட்டினார் குமரேசன்.
'மஹாபெரியவருக்காக நெல்பொரி கொண்டு வந்திருக்கேன்' என்றார் அந்த பக்தர். அவருக்கு பின்னால் ஒருவர் பொரி மூடையை சுமந்தபடி நின்றிருந்தார்.
அவரிடம், 'என்னது... நெல் பொரியா?' என ஆச்சரியமுடன் கேட்டார் குமரேசன்.
'ஆமாம்... மூணு நாளைக்கு முன்பு பொரி கொண்டு வர்றியா... என பெரியவா என் கனவில் வந்து கேட்டார். அதனால இதை ஆசாரமாக தயாரித்தேன்' என்றார் அந்த பக்தர்.
கண்கள் கலங்கியபடி 'சர்வேஸ்வரா... பரமேஸ்வரா' என தலைக்கு மேலே கைகளை குவித்தார் குமரேசன். இவர் இப்போதும் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் பணிபுரிகிறார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும்.
* குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.
* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள்.
* மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com