ADDED : ஜூலை 03, 2025 01:25 PM

கருடாழ்வார் - அமிர்த கலசம்
ஆடி சுவாதியன்று பெரியதிருவடி என அழைக்கப்படும் கருடாழ்வார் அவதரித்தார். அன்று பெருமாள் கோயில்களில் கருட ஜெயந்தி கொண்டாடுவர். இந்நாளில் கருட வழிபாடு செய்தால் சகல தோஷமும் விலகும். சுவாதியில் கருடாழ்வாருக்கு “அமிர்தகலசம்” என்ற பிரசாதத்தை பிரத்யேகமாக தயாரித்து நைவேத்யம் செய்யும் வழக்கம் பல தலங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கருடாழ்வார் காசியப முனிவருக்கும், வினதைக்கும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரது சகோதரரான அருணன் என்பவரே சூரிய பகவானின் தேரோட்டியாகத் திகழ்கிறார். காசியப முனிவருக்கு கத்ருதேவி என்ற மனைவியும் உண்டு.
ஒருசமயம் வினதையும், கத்ருதேவியும் வானத்தைப் பார்த்து ரசித்த போது தேவலோக குதிரையான “உச்சைசிரவஸ்” என்ற வெள்ளைக்குதிரை பவனி வந்தது. அப்போது வெள்ளைக்குதிரையின் அழகை வினதை புகழ்ந்தாள். இதனால் வெறுப்படைந்த கத்ரு 'அது முழுமையான வெள்ளைக்குதிரை இல்லை. அதன் வால் கறுப்பு' என்றாள்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட கத்ரு, “யார் சொல்வது தவறோ அவர் மற்றவருக்குக் கட்டுப்பட்டு அடிமையாக இருக்க வேண்டும்” என நிபந்தனை விதித்தாள். வினதையும் ஒப்புக் கொண்டாள். கத்ருவிற்கு ஆயிரம் பாம்பு குழந்தைகளாக இருந்தனர். அன்றிரவு கத்ரு தன் பாம்புக் குழந்தைகளிடம், “நீங்கள் அனைவரும் குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டு கருநிறமாக்கி என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என வேண்டினாள்.
பாம்புக் குழந்தைகளில் ஒருவனான கருநிறம் கொண்ட கார்கோடகன் சம்மதித்தான். தாயின் விருப்பத்தை நிறைவேற்ற வெள்ளைக் குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டு வாலைக் கறுப்பாக தோன்றும்படி செய்தான்.
இதைக் கண்ட வினதையும் ஏமாந்து தோல்வியை ஒப்புக் கொண்டு கத்ருவிற்கு அடிமையானாள்.
தன் தாயின் அடிமை நிலையைக் கண்டு வருந்திய கருடன், தாயை விடுவிக்க வேண்டினான். கத்ருவோ தேவலோகத்தில் இருக்கும் அமிர்தகலசத்தைக் கொண்டு வந்தால் வினதையை விடுவிப்பதாகக் கூறினாள். கருடன் உடனே தேவலோகம் சென்று அமிர்தகலசத்தை எடுக்க முயன்றான். அதை இந்திரன் தடுக்கவே இருவருக்கும் போர் மூண்டது.
இந்திரன் வஜ்ராயுதத்தை ஏவ அதற்கு மதிப்பு தரும் வகையில் கருடன் தனது இறகில் ஒன்றை உதிர்த்தார். வஜ்ராயுதம் செயலிழந்து போனது. கருடன் இந்திரனிடம் “எனது தாயின் அடிமை வாழ்வைப் போக்கவே அமிர்தகலசத்தை எடுத்துச் செல்லுகிறேன். நான் அமிர்தகலசத்தை கத்ருவிடம் கொடுத்து தாயை மீட்ட பிறகு நீங்கள் மறுபடியும் அதை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த அமிர்தகலசத்தை கத்ருவிடம் கொடுத்து தாயை மீட்டார்.
அமிர்தகலசம் தர்ப்பைப் புற்கள் நிறைந்த தரையில் வைக்கப்பட்டது. அப்போது கத்ருவிடம் “நீராடிய பிறகே அமிர்தத்தை பருக வேண்டும்” என கருடன் சொல்ல அதன்படி பாம்புகளும் நீராடச் சென்றன.
அந்த நேரத்தில் இந்திரன் அமிர்தகலசத்தை எடுத்துச் சென்றார். அமிர்தகலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அமிர்தகலசம் வைக்கப்பட்டிருந்த தர்ப்பைப்புற்களின் மீது அமிர்தத் துளிகள் சிதறி இருப்பதைக் கண்டு அதை பாம்புகள் நாக்கால் சுவைத்தன. அப்போது தர்ப்பைப் புற்களால் அவர்களின் நாக்கு வெட்டுப்பட்டு இரண்டாகப் பிளவுபட்டது. பாம்புகளுக்கு பிளவுபட்ட நாக்கு ஏற்பட்டதற்கான புராணக் காரணம் இது.
ஞாயிறுதோறும் திருப்பதியில் அமிர்தகலசம் பிரசாதம் நைவேத்யம் செய்கின்றனர். பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலக்காய், நெய் சேர்த்து செய்யப்படும் பிரசாதம் இது. திருப்பதியில் பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பின் கருடாழ்வாருக்கு நைவேத்யம் செய்த பின்னர் பக்தர்களுக்கு தரப்படுகிறது. விசேஷமான ஞாயிறு காலை மட்டுமே திருப்பதியில் பிரசாதமாகக் கிடைக்கும்.
பெருமாள் கோயில்களில் சுற்றுச்சுவரின் ஈசான்ய மூலையில் இருக்கும் கருடன் “மூலை கருடன்” எனப்படுகிறார். ஆழ்வார்திருநகரி, திருக்கோஷ்டியூர், அரியக்குடி, திருப்புல்லாணி முதலான தலங்களில் மூலை கருடன் சன்னதியில் விசேஷமாக இருக்கிறார். மூலை கருடன் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுபவர். திருப்புல்லாணியில் ஆடி சுவாதி தினத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து அமிர்தகலசம் படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
சதுரங்கப்பட்டினம் மலைமண்டலப்பெருமாள் கோயிலில் அஷ்டநாக கருடன் சன்னதி உள்ளது. இங்கு கருடாழ்வாருக்கு ஆடி சுவாதி அன்று அமிர்தகலசம் படைக்கப்பட்டு நைவேத்யம் செய்யப்படுகிறது.
நவதிருப்பதித் தலங்களில் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில்களில் ஆடி சுவாதி அன்று அமிர்தகலசம் பிரசாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள பறக்கையில் உள்ள மதுசூதன பெருமாள் கோயிலில் அமிர்தகலசம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
தேவையானவை
பாசிப்பருப்பு - 1 கப்
வெல்லம் - ¾ கப்
தேங்காய் துருவியது - ½ கப்
நெய் - 100 மி.லி.,
ஏலக்காய் - 5
செய்முறை: பாசிப்பருப்பை நீரில் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊறியதும் மிக்சியில் பாசிப்பருப்பை இட்டு அதனுடன் ஏலக்காயைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கடாயில் தண்ணீரை விட்டு சற்று கொதித்ததும் அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நன்றாக காய்ச்சவும். பாகுபதம் வந்ததும் சிறிது நெய் விட்டுக் கிளறவும்.
அரைத்த பாசிப்பருப்பை அதில் விட்டு கிளறவும். இரண்டும் சேர்ந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து, மீண்டும் சிறிது நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். உருண்டை பிடிக்கும் அளவிற்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
கையில் நெய்யைத் தேய்த்துக் கொண்டு கடாயில் உள்ள மாவை உருண்டையாகப் பிடித்து அதை சிறிய கலசம் போல செய்து கொள்ளவும். இட்லி சட்டியில் கலசத்தை வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேக விட்டு இறக்கவும். கருடாழ்வாருக்கு உகந்த அமிர்தகலசம் பிரசாதம் தயாராகி விட்டது.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி
94435 20904