
நிழல் நிஜமாகிறது
திருட்டுத் தொழிலில் கைதேர்ந்தவனாக இருந்தான் ஒரு இளைஞன். ஏழை, பணக்காரன் என பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் திருடியிருந்தாலும் அரண்மனையில் மட்டும் அதுவரை அவன் திருடியதில்லை.
அரண்மனையில் புகுந்து காவலர்களிடம் சிக்காமல் கஜானாவில் திருடினால் மட்டுமே தான் ஒரு திறமைசாலி என நினைத்தான். திட்டமிட்டபடி ஒருநாள் இரவில் காவலர்கள் கண்ணில் படாமல் அரண்மனைக்குள் புகுந்தான்.
மன்னரின் படுக்கையறை வரை சாமர்த்தியமாக நுழைந்தான். அப்போது ராணியுடன் பேசிக் கொண்டிருந்த மன்னரின் பேச்சு இளவரசியின் திருமணம் பற்றியதாக இருந்தது. இருவரும் பேசி முடித்து உறங்கட்டும் என திருடன் துாணிற்கு பின்புறம் இருளில் ஒளிந்தபடி காத்திருந்தான்.
காவி உடை உடுத்தும் அடியார்களை தெய்வமாக கருதி வணங்கும் அந்த மன்னருக்கு திருமண வயதில் மகள் ஒருத்தி இருந்தாள். இளவரசியான அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ராணி ஆசைப்பட்டாள்.
“நம் பெண்ணுக்கு திருமண வயது வந்து விட்டது. விரைவில் நல்ல மாப்பிள்ளை ஒருவரை பார்க்க வேண்டுமே” என்றாள்.
“ஆம்! அவரும் பக்தராகத்தான் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார் மன்னர்.
“புரியவில்லையே! அப்படியானால்...?”
“நம் ஊரின் ஆற்றங்கரையிலே நிறைய பிரம்மச்சாரிகள் இருக்கிறார்களே... அவர்களில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்”
“தங்களின் விருப்பமே என் விருப்பம்” என்றாள் அவளும்.
“ சரி! அப்படியானால் நாளையே ஏற்பாடு செய்கிறேன்”
அதன்பின் அவர்கள் துாங்கி விட்டனர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் 'இங்கு வந்த நேரம் எனக்கு நல்ல நேரம்தான். இளவரசியை திருமணம் புரியும் வாய்ப்பு கிடைத்துள்ளதே. இனி நான் திருடப் போக மாட்டேன். ஆற்றங்கரைக்குப் போய் பிரம்மச்சாரியோடு பிரம்மச்சாரியாக உட்கார்ந்து விட வேண்டியதுதான்” என எண்ணியபடி புறப்பட்டான்.
எப்படித் தந்திரமாக அரண்மனைக்குள் நுழைந்தானோ, அப்படியே அங்கிருந்து வெளியேறினான். மறுநாள் ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் தியானம் செய்வது போல கண் மூடி அமர்ந்தான்.
மன்னரின் ஆணைப்படி அரண்மனை அதிகாரிகள் அங்கு வந்தனர். ஆற்றங்கரையில், மரங்களின் அடியில் ஆங்காங்கே இருக்கும் பிரம்மச்சாரிகள் ஒவ்வொருவரிடமும், “தாங்கள் எங்கள் இளவரசியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். குடும்ப வாழ்வே வேண்டாம் என்றிருந்த பிரம்மச்சாரிகள் மறுத்து விட்டனர். கடைசியாக திருடனாக வந்த இளைஞனிடம் அதிகாரிகள் வந்தனர்.
மற்றவர்கள் மறுத்து விட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக்கொண்டால் சந்தேகப்படுவார்கள் என எண்ணி தானும் முதலில் மறுத்து விட்டான்.
அதிகாரிகள் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்கள். “மன்னா... பிரம்மச்சாரிகள் ஒருவரும் இளவரசியைத் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. ஆனால் அங்கு அழகான இளைய பிரம்மச்சாரி ஒருவர் இருக்கிறார். அவரைத் தாங்களே நேரில் வந்து கேட்டுக் கொண்டால் ஒருவேளை சம்மதிக்கலாம்” என்றனர். இதைக் கேட்ட மன்னர்
உடனடியாக ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார். தன் எண்ணத்தை இளைஞனிடம் சொன்னார்.
சற்று யோசிப்பது போல நடித்தான் இளைஞன்.
“பிரம்மச்சாரி வேடத்தில் இருக்கும் என்னை நாடாளும் மன்னர் வந்து கெஞ்சுகிறாரே... ஏமாற்றும் நோக்கத்தில் செயல்பட்ட எனக்கே இவ்வளவு மதிப்பு என்றால், உண்மையாகவே தவவாழ்வில் ஈடுபட்டால் எப்படி இருக்கும் என யோசித்தான். திருமணமே வேண்டாம். இன்று முதல் உண்மையான துறவியாகி விடுகிறேன். இனி எல்லாமே கடவுள் தான்” என முடிவு செய்தான்.
உண்மையாகவே பக்தியில் ஈடுபட்டு மகானாக திகழ்ந்தான்.
உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.
-பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com