
ஒரு அம்மன் கோயில் வாசலில் நின்ற துவார பாலகியர் அம்மனிடம், “தாயே... இந்த ஊரில் தங்களுக்கு பிடித்த பக்தர் யார்? ” எனக் கேட்டனர்.
''ஊருக்குள் போய் மக்களிடம் பேசிப் பாருங்கள். உங்களுக்கு உண்மை புரியும்,” என்றாள் அம்மன்.
இருவரும் சாதாரண பெண்களைப் போல ஊருக்குள் சென்றனர்.
ஒரு விவசாயியிடம் பேசும் போது, “நான் வயலுக்குப் போய் அசதியாக திரும்பினாலும், கோயிலுக்கு வராத நாளில்லை... போதாக்குறைக்கு வீட்டிலும் அம்மனுக்கு பூஜை செய்கிறேன்” என்றார்.
ஒரு தையல்காரர், “நான் வாரத்தில் ஒருநாள் விரதமிருந்து கோயிலுக்கு வருவேன்” என்றார்.
ஒரு கடைக்காரர், “நஷ்டம் வரும் நேரத்தில் அம்மனிடம் முறையிடுவேன்” என்றார்.
ஒரு இளைஞன், ''வயதான தாய்க்கு பணிவிடை செய்வதால் கோயிலுக்கு வர நேரம் கிடைப்பதில்லை'' என்றான்.
துவாரபாலகியர் கோயிலுக்கு வந்து நடந்ததைச் சொல்ல, அம்மன் சிரித்தபடி, “ பெற்றவளுக்கு சேவை செய்வதாக சொன்னானே இளைஞன்... அவனே என் மனசுக்குப் பிடிச்சவன்” என்றாள் அம்மன்.