ADDED : நவ 14, 2025 08:35 AM

வைத்தீஸ்வரன்கோயில் - திருச்சாந்து உருண்டை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் வைத்தீஸ்வரன்கோவில் என்ற ஊரில் தையல்நாயகியுடன் வைத்தியநாத சுவாமி குடிகொண்டிருக்கிறார்.
செவ்வாய் தோஷ பரிகார தலமான இங்கு சுவாமி மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இத்தலம் முன்பு 'புள்ளிருக்கு வேளூர்' எனப்பட்டது. நோய் தீர்க்கும் தலம் என்பதால் இது மருத்துவத்தின் தலைமைப்பீடமாக போற்றப்படுகிறது.
வைத்தீஸ்வரன் கோயிலில் பிரத்யேகமாக தயாரித்து வழங்கப்படும் 'திருச்சாந்து உருண்டை' என்ற பிரசாதம் நோய்களை குணப்படுத்தும் அபூர்வ ஆற்றல் மிக்கது. இங்குள்ள ஜடாயு குண்டத்தில் இருந்து பெறப்படும் திருநீற்றுடன் சித்தாமிர்தத் தீர்த்தத்தை கலந்து தெய்வீகமாகத் தயாரிக்கப்படும் இந்த பிரசாதம் புகழ் மிக்கது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தையல்நாயகி, வைத்தீஸ்வரரை வழிபட்டு பலன் அடைகின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இங்கு பாடியுள்ளனர். இதனால் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற காவிரிவடகரை தலங்களில் பதினாறாவது தலமாக உள்ளது. குமரகுருபர சுவாமிகள் இங்குள்ள முருகனைப் போற்றி 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்' பாடியுள்ளார். அருணகிரிநாதர் இங்கு முருகப்பெருமானைப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் பைரவரும், மேற்கில் வீரபத்திரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் காளியும் இங்கு காவல் தெய்வங்களாக உள்ளனர். ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், இரண்டு கொடிமரத்துடன் இத்தலம் பிரம்மாண்டமாக உள்ளது. மூலவருக்கு முன்புறத்தில் தங்கம், வெள்ளியால் ஆன கொடிமரங்கள் உள்ளன. இங்கு ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது சிறப்பு.
கோயில்களில் நவகிரகங்கள் வெவ்வேறு திசைகளில் சதுரவடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு சிவன் சன்னதியில் பின்புறத்தில் நவகிரகம் ஒரே நேர்க்கோட்டில் உள்ளது சிறப்பு. செவ்வாய்க்குரிய தலம் என்பதால் இங்கு வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகி திருமண யோகம் உண்டாகும்.
சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் இடையே செல்வமுத்துக் குமாரசுவாமி என்ற பெயரில் முருகன் அருள்புரிகிறார். அர்த்தஜாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு புனுகு, சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம், எலுமிச்சை, புஷ்பம், பால்சாதம் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர்.
தன்வந்திரி பகவான் உள்சுற்றுப் பிரகாரத்தின் கிழக்கு மண்டபத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் அறுபத்து மூவர், கற்பகவிநாயகர், சப்த கன்னியர், சகஸ்ர லிங்கம், துர்கைக்கு சன்னதிகள் உள்ளன.
சீதையை சிறையெடுத்த ராவணன் இத்தலம் வழியாக சென்ற போது ஜடாயு தடுத்தார். வெகுண்ட ராவணன் வாளால் ஜடாயுவின் சிறகுகளை வெட்டினான். சீதையைத் தேடி அலைந்த ராமர் குற்றுயிராக உயிருக்கு போராடிய ஜடாயுவைக் கண்டார். அவரிடம் நடந்ததைச் சொல்லி ஜடாயு உயிர் துறந்தது. ஜடாயுவின் உடலைத் தகனம் செய்த இடம் இத்தலத்தில் 'ஜடாயு குண்டம்' எனப்படுகிறது. அதிலுள்ள திருநீறை பூசுவோருக்கு நோயற்ற வாழ்வு அமையும்.
வைத்தீஸ்வரன் கோயில் தீர்த்தத்தின் பெயர் சித்தாமிர்த குளம். நான்கு திசையிலும் கலைநயம் மிக்க மண்டபங்களும், நடுவில் நீராழி மண்டபமும் இக்குளத்தில் உள்ளன. இது தவிர கோதண்ட தீர்த்தம், கவுதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்க சந்தான தீர்த்தம், முனிவர் தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளன. ஸ்தலவிருட்சம் வேப்ப மரம்.
தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. பங்குனி மாத பிரமோற்ஸவத்தின் போது குழந்தை முருகனை மகிழ்விக்க முருகன் யானையை விரட்டுவதும், யானை முருகனை விரட்டுவதுமான “நரி ஓட்டம்” என்ற நிகழ்ச்சி நடக்கும். செல்வமுத்துக்குமார சுவாமிக்கு தைமாத செவ்வாயில் தொடங்கி பத்துநாள் விழா நடக்கும். செவ்வாயன்று செவ்வாய் பகவான் உலா வருவார். கார்த்திகை மாத திங்கள் அன்று சோமவார சங்காபிேஷகம் சிவனுக்கு நடக்கிறது. ஐப்பசியில் கந்தசஷ்டிவிழா ஆறுநாள் நடக்கும். மகாசிவராத்திரி, பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது.
காலை 6:00 - மதியம் 1:30 மணி மாலை 4:00 - இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.
சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ., சீர்காழியில் இருந்து 6 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 49 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஜடாயுகுண்டத்தில் இருந்து திருநீறு எடுத்து அதை சித்தாமிர்த குளத்து நீரோடு கலந்து பஞ்சாட்சர மந்திரமான 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி அதை செல்வமுத்துக்குமார சுவாமியின் சன்னதியில் உள்ள குழி அம்மியில் இட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர் அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு தருகின்றனர். இந்த திருச்சாந்து உருண்டையை காலையில் நீரில் கலந்து சாப்பிட்டால் நோய் தீரும்.
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தையல் நாயகியுடன் அருள்புரியும் வைத்தியநாத சுவாமியை வழிபட்டு மனநலம், உடல்நலத்துடன் வாழ்வோம்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி

