
ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தெனாலியில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர்.
அவரைத் தரிசிக்க அரசு ஊழியர் ஒருவர் வந்தார். 'கவர்ன்மெண்ட் சம்பளம் எனக்கு வருது. இல்லேன்னு சொல்லலை. ஆனா அது போதுமானதாக இல்லே பெரியவா... வீட்டுச் செலவுக்காக அடிக்கடி கடன் வாங்குறேன். நிம்மதி இல்லாம தவிக்கிறேன்'' என்றார்.
'ஓ... இதுதானா விஷயம்' என்றவர், 'சரி... மாசா மாசம் குடும்பத்துக்குக் கொடுக்கற பணம் போதுமானதா இல்லேங்கிறதால உன்னோட மனைவி, குழந்தைங்க வெறுப்பா இருக்காங்களா?' எனக் கேட்டார்.
'பணம் இருக்கோ இல்லியோ... என் மீது அன்பா இருக்காங்க...அதுல எந்தக் குறையும் இல்லே... அவ்வளவு ஏன்... என்னோட உடம்புக்கு முடியலைன்னா குடும்பத்தினர் படும்பாடு சொல்லி மாளாது' புன்னகைத்தபடி, 'சரி... கொஞ்ச நேரம் அங்கே உட்காந்திரு' என கைகாட்டினார்.
'எப்படியும் பிரச்னைக்கு தீர்வு சொல்வார்' என்ற நம்பிக்கையுடன் அவரும் அமர்ந்தார். அப்போது பணக்காரர் ஒருவர் மனைவியுடன் வந்தார். கூடை நிறைய பழம், பூக்கள் கொண்டு வந்தார். ஆசிர்வதித்த சுவாமிகள், 'என்ன விஷயம்?' என ஜாடையாக கேட்டார்.
'என் கஷ்டத்தை சொல்லி ஆசி வாங்கலாம்னு வந்தேன். பணத்திற்கு குறைவில்லை. ஆனா உடம்பு முழுக்க வியாதி. நிம்மதியா சாப்பிடவோ துாங்கவோ கூட முடியாம தவிக்கிறேன்' பதில் சொல்லாமல் அரசு ஊழியரை நோக்கி, 'சொன்னதைக் கேட்டியா?' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
'என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் பாசத்திற்கு குறைவில்ல. இவரிடம் நிறைய பணம் இருக்கு. ஆனா நிம்மதி இல்லே... நான் தேவலை போலிருக்கே' என எண்ணியபடி எழுந்தார் அரசு ஊழியர். 'பெரியவா... நான் நல்லா இருக்கேன்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். குடும்பச் செலவைக் கட்டுக்குள்ள கொண்டு வரப் பாக்கிறேன். குடும்பத்தினர் என் மீது வெச்சிருக்கிற அன்பு போதும். என் குடும்பம் ஒரு கோயில்' என வணங்கினார்.
புன்னகைத்த மஹாபெரியவர் பிரசாதம் கொடுத்து ஆசியளித்தார். என்ன கிடைக்கணுமோ அது நமக்கு கிடைத்தே தீரும்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com