ADDED : நவ 28, 2024 01:14 PM

கடைத்தேறிய நடிகை
ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். டிக்கெட் பரிசோதகராக வந்த பெண் என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.
“பயந்து விட்டாயா?” பரிச்சயமான குரலைக் கேட்டதும் விழுந்து வணங்கினேன்.
“சென்னை மருத்துவமனை ஒன்றில் இருந்து உனக்கு அழைப்பு வரும். சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பிரபல நடிகைக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதிருக்கும். அவளுடைய கர்மக் கணக்கைக் காட்டுகிறேன். உன் மனதில் அன்பும், வார்த்தையில் கடுமையும் இருக்கட்டும்”
அன்றே மருத்துவமனை ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. எனக்காக காரும் அனுப்பினர். பெரிய அறையில் தனியாக இருந்த முன்னணி நடிகையைப் பார்த்ததும் என் மனம் உருகியது.
“தினமும் பச்சைப்புடவைக்காரியக் கும்பிட்டுக்கிட்டு இருக்கற எனக்கே இந்த கதின்னா...''
“என்னாச்சு?”
“இன்னும் என்ன ஆகணும்? எனக்கு வயசு 34. இத்தனை நாளா எனக்குச் சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கிட்டிருந்தேன். போன மாசம்தான் ரிஷியைப் பாத்தேன். தொழிலதிபர். அழகா இருக்கான். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கு. எனக்கு இரண்டு குழந்தைங்களைப் பெத்துக் கொடுத்துட்டு நடிக்கப் போன்னு சுதந்திரம் கொடுத்துட்டான். ரகசியமா நிச்சயதார்த்தம் செஞ்சிக்கிட்டோம். இதோ... பாத்தீங்களா அவன் போட்ட வைர மோதிரம். இருபது லட்ச ரூபாய் பெறும்”
“பிரச்னை?”
“கல்யாணத்துக்குத் தேதி குறிச்சாச்சு. போன வாரம் வயிற்று வலின்னு ஆரம்பிச்சது. நெறைய டெஸ்ட் பண்ணாங்க. கர்ப்பப்பையில கேன்சர். உடனே அத எடுத்தாகணுமாம். இல்லாட்டி செத்திருவேனாம். விஷயம் தெரிஞ்சா போடி போக்கத்தவளேன்னு ரிஷி போயிருவான். என் வாழ்க்கை ஏன் சார் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே முடியணும்?” கிளிசரின் போடாமலேயே நடிகை அழுதாள்.
“மனுஷங்களச் சித்திரவதை பண்ணிப் பாக்கறதுதான் பச்சைப்புடவைக்காரிக்குப் பிடிச்ச பொழுது போக்கோ? அந்த ராட்சசி ஏன் என் வாழ்க்கையக் கெடுக்கணும்?”
“மூடு வாய. இன்னும் ஒரு வார்த்த தப்பா பேசின கொலை பண்ணிருவேன்” நடிகை அடங்கினாள்.
“நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்கோ? செஞ்சதெல்லாம் மறந்து போச்சா?”
“போன வருஷம் மட்டும் ஒரு கோடி ரூபாய் நன்கொடையா கொடுத்திருக்கேன். என்னோட டிரைவர் பொண்டாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது மருத்துவச் செலவு அஞ்ச லட்சத்தை நானே ஏத்துக்கிட்டேன். என்கிட்ட வேலை பாக்கறவங்க குழந்தைங்களை படிக்க வைக்கறேன்”
“செஞ்ச நல்ல காரியம் எல்லாம் ஞாபகம் இருக்கு. துரோகம் மட்டும் மறந்து போச்சா”
“நானா? துரோகம் செஞ்சேனா?”
“இங்க பாருங்க. நான் டைரக்டரும் இல்ல. நடக்கறது ஆடிஷனும் இல்ல. நடிக்காதீங்க. மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு வாரிசு நடிகரோட ரொம்ப நெருக்கமா இருந்தீங்க”
“யார்தான் இல்ல?”
“அதச் சொல்லல. அப்போ அந்த நடிகர ஒரு பெரிய தொழிலதிபரோட பையன் - அவன் பேரு சூரஜ் - அவமானப்படுத்திட்டான். அவனப் பழி வாங்க அந்த நடிகன் உங்களப் பகடைக்காயா பயன்படுத்தினான். ஞாபகம் இருக்கா?” நடிகையின் முகம் வெளிறியது.
“நடிகன் திட்டம் போட்டுக் கொடுத்தபடி நீங்க செஞ்சீங்க. சூரஜ்ஜ எதேச்சையா ஒரு பார்ட்டில பாக்கற மாதிரி பாத்தீங்க. அவன்கிட்ட சிரிச்சிச் சிரிச்சிப் பேசினீங்க. அவன்கூட ஊர் சுத்தினீங்க. உங்க ரெண்டு பேர் போட்டோவும் பத்திரிகையில எல்லாம் வந்திச்சி.
“சூரஜ்ஜக் காதலிக்கிறீங்களா?' ன்னு நிருபர் கேட்டபோது வெட்கப்படற மாதிரி நடிச்சீங்க. அதப் பாத்த சூரஜ் உங்கள உண்மையாவே காதலிக்க ஆரம்பிச்சான். உங்ககிட்ட காதலைச் சொன்னான். உடனே ஏத்துக்கிட்டீங்க. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிச்சாச்சு. அதுக்கு ஒருநாள் முன்னால திடீர்னு பத்திரிகைக்காரங்களக் கூப்பிட்டுப் பேட்டி கொடுத்தீங்க. “சூரஜ்கிட்ட சில பிரச்னைகள் இருக்கு. அதனால பிரேக் அப் பண்ணிட்டேன்னு”, பேட்டி கொடுத்தீங்க. நிருபர்கள் எல்லாம் போதைப் பழக்கமான்னு வாயக் கிண்டினாங்க. நீங்க கேலியாச் சிரிச்சி அதுதான்ங்கற மாதிரி ஊரையே நம்ப வச்சீங்க.
சூரஜ்ஜால அந்தத் துரோகத்தை தாங்க முடியல. அன்னிக்கு ராத்திரியே துாக்குல தொங்கிட்டான். அந்த வினைதான் உங்கள இப்போ படுத்துது”
நடிகை என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர்.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீங்க இப்போ கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கீங்களே ரிஷி அவனவிட சூரஜ் நல்லவன். ரிஷிய விடப் பணக்காரன். அவங்கப்பாவுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து இருக்கு.
அவன் ஒரே மகன்.
“இன்னொரு அதிர்ச்சியான விஷயம் தெரியுமா உங்களுக்கு? சூரஜ்க்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. காபி, டீ கூடச் சாப்பிட மாட்டான். உங்களுக்கு இந்த மோதிரத்தக் கொடுத்த ரிஷி போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன். நியாயமாப் பாத்தா நீங்க சூரஜ்ஜுக்குச் செஞ்ச துரோகத்துக்கு உங்கள ரிஷியக் கல்யாணம் பண்ணிக்க விட்டிருக்கணும். உங்க வாழ்க்கையே புஸ்ஸுன்னு போயிருக்கும். ரிஷி மனசுல வக்கிரமும் வன்மமும் ஜாஸ்தி. கல்யாணம் ஆகியிருந்தா அவன்கிட்ட அடிபட்டே செத்திருப்பீங்க. நீங்க அந்தக் கஷ்டத்தப் படவேண்டாமேன்னு தான் பச்சைப்புடவைக்காரி புத்து நோயக் கொடுத்து பெரிய கண்டத்துலருந்து காப்பாத்திட்டா. அவளப் போய் ராட்சசி, சித்திரவதை பண்றான்னு சொல்றீங்க. நல்லா இருங்க. நான் கிளம்பறேன்”
நடிகை தாவிக் குதித்து என் கால்களில் விழுந்தாள். விம்மல்களுக்கு இடையில் நடிகை கேட்டாள்.
“செஞ்ச பாவத்துக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தனிமைச் சிறையில் தள்ளி விட்டாளா பச்சைப்புடவைக்காரி?”
“அப்படி செஞ்சாலும் தப்பில்ல. ஆனா அப்படி செய்யல. முதல் காரியமா ரிஷியோட கல்யாணத்த நிறுத்துங்க. இந்த மோதிரத்த ரிஷிகிட்ட கொடுத்திருங்க. நடிச்சது போதும். இப்போ திரைபட உலகத்துலயும் சரி, வெளியவும் சரி போதைப் பழக்கம் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சி. அதப் பத்தி விழிப்புணர்வ உண்டாக்குங்க. போதையில் மாட்டிக்கிட்டவங்களுக்கு மறு வாழ்வு மையம் நடத்துங்க. நாலஞ்சு வருஷத்துல கவர்ச்சி நடிகைங்கற உங்க இமேஜ் மாறும். சமுதாயப் பொறுப்புள்ள பெண் என்ற இமேஜ் வரும். அப்போ உண்மையில ஒரு நல்ல மனுஷன் உங்களத் தேடி வருவார். அவரோட சந்தோஷமா ரொம்ப நாள் வாழ்வீங்க”
நடிகையின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினேன். மருத்துவமனையின் முகப்பில் இருந்த ஒரு நர்ஸ் சிரித்தாள். அவளிடம் போனேன்.
“நடிகையைக் கரையேற்றி விட்டாய். உனக்கு என்ன வேண்டும் சொல்”
“பெரிய துரோகம் செய்த நடிகைக்கு சிறிய தண்டனை கொடுத்து மன்னித்தீர்கள். அதே தப்பை நான் செய்திருந்தால்?”
“அடையாளம் தெரியாமல் அழித்திருப்பேன். மூன்று வயதுக் குழந்தை தவறு செய்தால் தோளில் லேசாகத் தட்டினால் போதும். முப்பது வயதுக்காரன் தவறு செய்தால் அழிவு ஒன்றுதான் அவனைத் திருத்தும். நீ என்னை அடிக்கடி பார்ப்பதால் உனக்குச் சலுகை எதுவும் கிடையாது”
என் முகம் வாடியது.
“என் மகனை நான் தப்பு செய்ய விடுவேன் என நம்புகிறாயா என்ன?”
தாயே எனக் கதறியபடி காலில் விழுந்தேன். நிமிர்ந்து பார்த்த போது அவள் அங்கில்லை.
--தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com