
சிதம்பரத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் கோபால் ஐயர். காஞ்சிபுரம் முனிசிபல் இன்ஜினியராக இருந்த இவர் ஓய்வு பெற்ற பின் காஞ்சிபுரத்திலேயே குடியேறினார்.
அவரை சிவத்தொண்டில் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தார் மஹாபெரியவர். ஒருநாள் மடத்திற்கு வந்த போது, ''காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரிக்கு பக்கத்தில் வியாச சாந்தாலீஸ்வரர் கோயில் இருக்கு. சிவன் கோயிலான இதை மராமத்துப் பணி பண்ணணும். நீ தான் இன்ஜினியர் ஆச்சே... அக்கறையா செய்து கொடுப்பியா?' எனக் கேட்டார் சுவாமிகள்.
வேத வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிவபெருமான் பற்றி காஞ்சி புராணத்தில் சொல்லப்பட்டிருக்கு என வரலாற்றையும் எடுத்துச் சொன்னார்.
'இதுவரை மகானை மட்டும் தரிசிக்க மடத்துக்கு வர்றோமே... ஆனால் கைங்கர்யம் ஏதும் செய்ததில்லையே... இன்று முதல் சுவாமிகள் சொல்லும் பணிகளை சிரமேற் கொண்டு செய்ய வேண்டும்' என அந்த நிமிடமே தீர்மானம் செய்தார்.
சுவாமிகளை வணங்கி விட்டு, 'நிச்சயம் பண்றேன் பெரியவா' என பரவசப்பட்டார். சாந்தாலீஸ்வரர் கோயில் மராமத்துப் பணிகளை செய்து முடித்தார். இதற்கு பின் அவருக்கு அடுத்த பணியும் தயாரானது.
காஞ்சிபுரத்தைச் சுற்றிலும் வயல்வெளிகள், திடல்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே சிவலிங்கங்கள் இருந்தன. அவற்றை வழிபடுபவர்கள் மிக குறைவு. திறந்த வெளியில் இருக்கும் அவற்றுக்கு கூரை அமைத்து கொடுக்கச் சொன்னார்.
சிவத்தொண்டு அளவற்ற புண்ணியம் தரும் என்றும் மஹாபெரியவர் வாழ்த்தினார். அதன்படியே சிவலிங்கத்திற்கு கூரையும் அமைத்தார். இதன் பின் காஞ்சி மடத்தின் பணியாளர்கள் குடியிருப்பை கட்டிக் கொடுத்தார். அதுவும் குறைந்த செலவில்!
மஹாபெரியவருக்கு பணி செய்வதை தன் கடமையாக கொண்ட இன்ஜினியர் கோபால் ஐயரின் வாழ்வில் குறையொன்றுமில்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ...
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* வாழ்வில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரத்தை தரிசிப்பது அவசியம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com