
நண்பர்களான பொன்னன், விஜயன் ஆகியோர் முனிவரிடம் சென்றனர். அவரிடம், ''ஐயா! நாங்கள் ஞானம் பெற தங்களை தேடி வந்துள்ளோம். எங்களைச் சீடராக ஏற்பீர்களா'' என கேட்டனர். முனிவரோ பேசவே இல்லை. ஒருநாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. மூன்று மாதமும் இதே நிலை தொடர்ந்தது. இதன் மூலம் இவர்கள் பொறுமைசாலி என்பதை அறிந்தார் முனிவர்.
ஒருநாள் அவர்களிடம், ''குழந்தைகளே. நான் சொல்வதை செய்யுங்கள். அதில் வெற்றி பெற்றால் சீடராக ஏற்கிறேன்'' என சொல்லி அவர்களுக்கு ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை கொடுத்தார்.
''நான் கொடுத்திருக்கும் இந்த சிவலிங்கத்தை யாரும் பார்க்காத இடத்தில் ஒளித்து வையுங்கள்'' என்றார். உடனே இருவரும் புறப்பட்டனர்.
இதில் பொன்னன் காட்டிற்குள் சென்று குகையில் மண்ணைத் தோண்டி புதைத்தான். இரண்டு நாளில் முனிவரை சந்தித்தான். அவரோ, ''உன் நண்பன் வரும் வரை பொறுத்திரு'' என்றார். நாட்கள் கடந்தன. விஜயன் வரவே இல்லை. ஒருமாதம் கழிந்த பிறகு அந்த சிவலிங்கத்துடன் முனிவரை சந்தித்தான் விஜயன்.
'' நான் சொன்னதையும் செய்யவில்லை, காலத்தையும் வீணாக்கிவிட்டாயே'' என்றார் முனிவர்.
''என்னை மன்னியுங்கள். நான் சென்ற இடமெல்லாம், 'நீ எங்கு போனாலும் அங்கு நான் இருப்பேன்; நான் இல்லாத இடம் ஏது. எப்படி சிவலிங்கத்தை மறைத்து வைக்க முடியும்' என அசரீரி கேட்டது. இதன் பின் உண்மை புரிந்தது.
மனிதர், விலங்கு, பறவைகளிடம் இருந்து வேண்டுமானால் ஒன்றை மறைக்கலாம். ஆனால் கடவுளின் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது... ஏனெனில் அவருடைய பார்வை உலகிலுள்ள மற்ற அனைவருடைய பார்வைகளையும் கடந்த 'ராஜ பார்வை' என்பதை உணர்ந்தேன். அதனால் சிவலிங்கத்தோடு திரும்பினேன்'' என்றான்.
முனிவர் அவனை அணைத்துக் கொண்டார்.
''சபாஷ். அனைத்தையும் அறிந்தவர் கடவுள். அவருக்கு எதுவும் தெரியாது என நினைத்து உலகில் மக்கள் தவறு செய்கின்றனர். கடவுளைப் பற்றி நன்கறிந்த நீயே என் சீடன்'' என ஏற்று மகிழ்ந்தார்.