ADDED : மே 14, 2026 12:01 PM

காஞ்சி மடத்திற்கு ஒரு தம்பதியர் வந்தனர். அவர்களின் முகத்தைப் பார்த்த சுவாமிகள், 'ஏன் சோகமா இருக்க என்ன விஷயம்?' எனக் கேட்டார்.
'பெரியவா...கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. குழந்தை இல்ல...' என அந்த பெண் சொல்லும் போதே குரல் கம்மியது.
''குழந்தைப் பேறு கிடைக்க வேண்டுமானால் கர்மவினை நன்றாக இருக்க வேண்டும். அந்தந்த குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதையும் சிந்திக்க வேண்டும்'' என்றார் மஹாபெரியவர்.
சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த அவர், 'உன்னோட பாட்டி எப்படி செத்துப் போனா... தெரியுமா?' எனக் கேட்டார். பதை பதைத்தபடி தன் பாட்டியின் கடைசிக் காலம் எப்படி இருந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதெல்லாம் மனதிற்குள் வந்தது. 'திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என எண்ணியபடி சுவாமிகளை வணங்கினார்.
அப்போது மஹாபெரியவர், 'உன்னோட தாத்தா ரொம்ப கோபக்காரராக இருந்தார். எப்போதும் பாட்டியை திட்டிக் கொண்டே இருப்பார். சில சமயத்தில் அடிக்கவும் செய்வார். பொறுத்துப் பார்த்தாள் அந்தப் புண்ணியவதி. ஒரு கட்டத்தில இதுக்கு மேல என்னால வாழ முடியாதுன்னு கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிட்டா. அதனால பெண் சாபம் உங்க குடும்பத்துக்கு இருக்கு. இதற்கான பரிகாரத்தை செய்தா போதும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என ஆசியளித்தார்.
'கட்டாயம் பண்றேன் பெரியவா' என்றனர். அதன்படி பரிகாரத்தை செய்து முடிக்க, குழந்தை வரம் கிடைத்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.
* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
