தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 6

பச்சைப்புடவைக்காரி - 6

பச்சைப்புடவைக்காரி - 6


ADDED : மே 14, 2026 12:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய் தந்தால் வாங்கிக் கொள்ளேன்

“என் பொண்டாட்டி எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கா சார்”

என் அலுவலகத்தின் முன்னால் அமர்ந்திருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கும். செல்வச் செழிப்புள்ளவராகத் தோன்றினார்.

“நான் சுரேஷ். துபாய்ல பெரிய கம்பெனில அதிகாரியா இருக்கேன். லட்சக்கணக்குல சம்பாதிக்கறேன். கோடிக் கணக்குல சொத்து இருக்கு. ஒரே பொண்ணு. கல்யாணமாகி அமெரிக்காவுல இருக்கா. என் மனைவி மாலதி இந்தியாவுல இருக்கா. பெரிய வீடு. போக வர கப்பல் மாதிரி காரு. அவ கேட்டத எல்லாம் வாங்கித் தரேன். புடவை, நகை, அலைபேசின்னு எந்த விஷயத்துலயும் குறை வைக்கல”

“அவங்க ஏன் இந்தியாவுல தனியா இருக்காங்க?”

“துபாயில என் வேலை அப்படி சார். காலையில எட்டு மணிக்குப் போனா ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் வருவேன்.அப்புறமும் போன் வந்துட்டேயிருக்கும். லீவே எடுக்க முடியாத வேலை. சம்பளம் கொட்டித் தராங்க, சார். மாலதி துபாய்ல என்கூடத்தான் இருந்தா. நாள் பூராத் தனியா இருக்க அவளால முடியல. சென்னையில இருந்தாலாவது அவங்கப்பா அம்மா, தங்கைகளை அடிக்கடி பார்க்கலாம்னு சென்னைக்குத் திரும்பிட்டா. பத்து நாள் முன்னாலவரை நல்லாத்தான் பேசிக்கிட்டிருந்தா. “வேலைய விட்டுட்டு எங்கூட சேர்ந்து வாழறதுன்னா வாழுங்க. இல்லாட்டி விவாகரத்து கொடுங்க. நானாவது என் வாழ்க்கைய வாழ்ந்துக்கறேன்”ன்னு நோட்டீஸ் அனுப்பியிருக்கா. மாசம் இருபது லட்ச ரூபாய் சம்பளம் வாங்கற வேலைய விட முடியுமா?”

“நான் இதுல எப்படி...”

“அவளுக்கு உங்க எழுத்துன்னா ரொம்ப பிடிக்கும். நீங்க சொன்னா தட்ட மாட்டா. அதுதான் வீடு கார்ன்னு வசதியா இருக்கேல்ல, அப்புறம் ஏன் இந்த வயசுல டைவர்ஸ் கண்றாவியெல்லாம்ன்னு ஒரு அதட்டு போட்டா போதும், அடங்கிருவா. விஷயம் வெளிய தெரிஞ்சா எங்க மானமே போயிரும் சார்”

அரை மணி நேரம் புலம்பி விட்டுச் சென்றார் சுரேஷ். ஒரு பெண் புயலென என் அறைக்குள் வந்தாள். பச்சைப்புடவைக்காரியை அடையாளம் கண்டு கொண்டு அவள் கால்களில் விழுந்தேன்.

“உனக்கு மிகப் பெரிய வரத்தைக் கொடுக்கவே வந்தேன்.”

“இனிமேல் உன் ஆசை உடனே நிறைவேறும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.”

“என்ன தாயே, திடீரென்று?”

“தாய் தந்தால் வாங்கிக் கொள்ளேன்”

அன்று மாலை கோயிலுக்கு நடந்து சென்ற போது ஒரு கம்பீரமான கருப்பு நிற பென்ஸ் கார் என்னைக் கடந்து சென்றது. ஓட்டினால் இப்படி ஒரு காரை ஓட்ட வேண்டும் என நினைத்தேன். அடுத்த கணமே அந்தக் கார் நின்றது. பின்னால் வந்தது. உள்ளிருந்து ஒருவர் இறங்கி என்னிடம் கார் சாவியைக் கொடுத்தார்.

“இப்போதான் உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க கோயிலுக்கு நடந்து போயிட்டு இருக்கறதாச் சொன்னாங்க. உங்களுக்கு இந்தக் காரைப் பரிசா கொடுத்திருக்கிறார் தொழிலதிபர் ராமலிங்கம். இப்பல்லருந்து இது உங்க கார். டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பின்னால மாத்தித் தந்துடறோம்”

இந்த உலகத்திற்கு என்ன ஆயிற்று? காரில் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினேன். மறுநாள் ஒரு சிக்கலான வழக்கில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வர வேண்டியிருந்தது.

“தீர்ப்பு பாதகமா வந்துச்சின்னா குடும்பத்தோட தற்கொலை செய்றதை தவிர வேற வழியில்ல சார்” என்னிடம் பத்து முறையாவது புலம்பியிருப்பார் அந்த வாடிக்கையாளர். மதியமே நல்ல செய்தி வந்துவிட்டது.

“உங்கள நேர்ல பாத்து தங்கத்தால அபிஷேகம் பண்ணப் போறேன் பாருங்க” என்றார் வாடிக்கையாளர்.

மறுநாள் என் பதிப்பாளர் அழைத்தார். “இந்த வருஷம் உங்க புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது தரப் போறாங்க”

உடனே கோயிலுக்கு ஓடினேன். பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்து கதற வேண்டும் என நினைத்தேன்.

காவி உடை அணிந்த ஒருவர் என்னை வழிமறித்தார்.

“இந்தக் கோயிலுக்குள்ள மட்டும் இல்ல, இனிமே பச்சைப்புடவைக்காரியோட எந்தக் கோயிலுக்குள்ளயும் நீங்க போக முடியாது.”

“அதச் சொல்ல நீங்க யாரு?”

“பச்சைப்புடவைக்காரி போட்ட கட்டளையால உங்களுக்குத்தான் கேட்டது கெடைக்குதுல்ல, அப்புறம் எதுக்காகக் கோயிலுக்கு வரணும்?”

“அவகிட்டயே பேசிக்கறேன்”

“இனிமே ஜென்ம ஜென்மத்துக்கும் உங்களால அவளப் பாக்க முடியாது. அவளோட பேசவும் முடியாது. அவ கோயிலுக்குள்ள நுழையவும் முடியாது.”

தாயே என வீறிட்டேன்.

கண் விழித்த போது என் அலுவலக அறையில் இருந்தேன்.

“எப்படி இருந்தது நான் கொடுத்த வரம்?”

“வரமா அது, சாபம் தாயே. எத்தனை செல்வங்களும் வெற்றிகளும் கிடைத்தாலும் உங்களைப் பார்க்க முடியாத வாழ்க்கை கொடிய சாபம். உங்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை பெரிய நரகம். எனக்கு வெற்றி வேண்டாம், விருது வேண்டாம். ஏன் சோறு கூட வேண்டாம். என்றென்றும் உங்களை நினைக்கும் மனம்தான் வேண்டும். கோயிலில் உங்களைத் தரிசிக்கும் பாக்கியம்தான் வேண்டும். உங்களைப் பார்க்க வேண்டும். உங்களுடன் பேச வேண்டும்.”

“உனக்கு ஒரு நியாயம், அந்த பெண் மாலதிக்கு ஒரு நியாயமா?”

“நீங்கள் சொல்வது புரியவில்லையே!”

“அவளுக்கு கணவன் கொடுக்கும் லட்சங்கள் தேவையில்லை. சொகுசு கார்கள், பங்களா, நகைகள், ஆடம்பரமும் தேவையில்லை. அவளுக்குத் தேவை கணவரின் அன்புதான். அந்த மடையன் அதைத் தர மறுக்கிறான். அதனால்தான் விவாகரத்து கேட்டிருக்கிறாள்”

“நான் மாலதியிடம் என்ன சொல்லட்டும்?”

“ஒன்றும் சொல்ல வேண்டாம். கணவரிடம் பேசு. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என புரியவை. மிச்சம் இருக்கும் வாழ்க்கையை மனைவியோடு சேர்ந்து வாழச் சொல்”

“புரிந்து கொள்வானா?”

“அதிர்ச்சி வைத்தியம் செய்யப் போகிறேன். அவனுக்கு மாரடைப்பு வரும். பிழைத்துக் கொள்வான். அப்போது நீ அவனிடம் பேசவேண்டும். 'மாரடைப்பு' என்ற சாவு மணி அடித்து விட்டது. இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறாய் எனத் தெரியாது. மீதமிருக்கும் வாழ்க்கையை உன்னையே நம்பி வந்தவளுடன் சேர்ந்து வாழ். பணம் கொடுக்காத இன்பத்தை மனைவியின் பாசம் உனக்குக் கொடுக்கும் எனச் சொல். அன்பின் மகத்துவத்தை விளக்கிச் சொல். திருந்தி விடுவான். உனக்கு என்ன வேண்டும்?”

“நீங்கள்தான் வேண்டும், தாயே! உங்கள் அன்புதான் வேண்டும். வேறு எதுவும் வேண்டாம். என்னை நரகத்தில் துாக்கிப்போடுங்கள். அங்கே நரகத்தீ என்னைச் சுட்டெரிக்கும்போது உங்கள் அன்பை மட்டுமே நினைக்கும் வரத்தைத் தாருங்கள். தாய் தந்தால் வாங்கிக் கொள்ளேன் என ஆசை காட்டாதீர்கள்”

கையில் இருந்த துடைப்பத்தால் என் தலையில் செல்லமாக தட்டிவிட்டு மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us