ADDED : மே 14, 2026 12:07 PM

குலசேகரர் போலே...
“என்ன அமிர்தம்மா... ஏன் முகம் வாட்டமா இருக்கு. என்ன நடந்துச்சு?” என்ற படியே வந்தமர்ந்தார் கிருஷ்ணவேணி.
“எங்க சொந்தத்துல ஒருத்தர் சொத்து விஷயத்துல மாத்தி மாத்தி பேசுறாரு. இதனால உறவுகளுக்குள் பெரிய விரிசலே வந்துடும் போல இருக்கு'' என்றார் அமிர்தம்.
“அப்படியா! மாத்தி பேசுறது ஒன்னும் அவ்வளவு குற்றம் இல்லை. ஆனால் என்ன காரணத்துக்காக சொல்றாங்கன்னு பாக்கணும். எல்லாரும் குலசேகரர் போல மாத்தி மாத்தி பேச மாட்டாங்க. ஆனா அவர் நோக்கம் ரொம்ப உயர்வானது”
“சரி தான், அடுத்த ரகசியத்தை சொல்ல தொடங்கிட்டீங்க! சொல்லுங்க கேட்போம். எனக்கும் இந்த மனநிலையில் இருந்து கொஞ்சம் வெளிய வரணும்'' என ஆர்வமுடன் கேட்கத் தொடங்கினார் அமிர்தம்.
''பெண் பிள்ளை ராமானுஜரிடம் 15 வது வாக்கியமான 'ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே' என்று சொல்லத் தொடங்குறா... ராமானுஜரும் அவருடைய சீடர்களும் பெண் பிள்ளை சொல்வதை கேட்கத் தொடங்குகிறார்கள். முன்னொரு காலத்தில் கொல்லி நாட்டை திடவிரதன் என்ற சேர மன்னன் ஆட்சி செய்தார்.
அவரோட மகன் தான் நம் குலசேகரர். சிறு வயது முதலே புராணம், சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். அது மட்டுமல்ல ராமாயணத்தை விரும்பி கேட்பார். ராமர் மீது பக்தியும் அன்பும் அவருக்கு உண்டு. மன்னருக்குரிய வாள்வீச்சு, வில்வித்தை பயிற்சிகளில் சிறப்பு பெற்றிருந்தார்.
தந்தைக்குப் பிறகு மன்னராக பொறுப்பேற்று நல்லாட்சி நடத்தினார். நாளடைவில் அவருக்கு நாட்டை ஆள்வதில் ஆர்வம் குறைந்தது. அவரால் முன்பு போல பக்தியில் மூழ்கித் திளைக்க முடியவில்லை.
குலசேகரர் அமைச்சர்களிடம், 'நான் தரிசனம் செய்ய ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யாத்திரை செல்கிறேன்' என புறப்படுவார். மன்னர் இல்லாவிட்டால் நாட்டை யார் ஆள்வது, எதிரிகளை எப்படி சமாளிப்பது என் மந்திரிகள் கவலைப்பட்டனர். குலசேகரரை நாட்டிலேயே தங்க வைப்பது எப்படி என ஒரு திட்டம் தீட்டினர். மன்னருக்கு அடியார்கள் மீது மிகவும் விருப்பம்.
'ஸ்ரீரங்கம் கிளம்புகிறேன்' எனச் சொல்லும் போதெல்லாம் அடியார்களை அரண்மனைக்கு வரவழைப்பர். அதனால் மன்னரின் பயணம் தள்ளிப்போகும். அடியார்களை வரவேற்று உபசரித்து அவர்களுடன் திருமாலின் மகிமைகளை பேசி மகிழ்வார். இப்படி புதுப்புது அடியார்கள் மூலம் ஸ்ரீரங்க பயணத்தை தாமதப்படுத்தினர். ஆனால் அதுவே பிரச்னையாக வெடித்தது. அடியார்கள் அரண்மனை முழுவதும் தங்கியிருந்தனர். அவர்களுடனே நேரத்தை கழித்த மன்னர் நிர்வாகத்தை மறந்தார். அடியார்களை எப்படி அரண்மனையை விட்டு வெளியேற்றுவது என மந்திரிகள் யோசிக்க ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் ஸ்ரீராமநவமி வந்தது. அரண்மனையில் இருந்த ராமர் கோயிலில் விசேஷ பூஜை நடத்த ஏற்பாடானது. அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமி அணிந்திருந்த முத்துமாலையை யாருக்கும் தெரியாமல் மந்திரிகள் ஒளித்து வைத்தனர். அபிஷேகம் முடிந்த பின் நகைகளைப் பார்த்த அர்ச்சகர் முத்துமாலையை காணாததால் மன்னரிடம் புகார் செய்தார். உடனே குலசேகரருக்கு கோபம் வந்தது. முத்து மாலையை திருடியவரை கண்டுபிடியுங்கள் என உத்தரவிட்டார்.
இதுதான் சமயம் என மன்னரிடம், ''மன்னா... அரண்மனை எங்கும் சுதந்திரமாக சென்று வரும் அடியார்களில் ஒருவர் தான் முத்துமாலையை எடுத்திருக்க வேண்டும் என மந்திரிகள் பழி சுமத்தினர். இதைக் கேட்ட மன்னர் மனம் நொந்து போய் அடியார்கள் தவறு செய்ய மாட்டார்கள். அதை நிரூபிக்கிறேன் எனச் சொல்லி நாகப் பாம்பு அடைக்கப்பட்ட குடம் ஒன்றை வைத்து, 'இந்த அடியார்கள் தவறு செய்திருந்தால் பாம்பு என்னைக் கொல்லட்டும்' என தன் கையை குடத்துக்குள் விட்டார். ஆனால் பாம்பு மன்னரை தீண்டவில்லை.
இதைக் கண்ட மந்திரிகள் தங்களின் குற்றத்தைச் சொல்லி மன்னரிடம் மன்னிப்பு கேட்டனர். அடியார்களுக்கு களங்கம் விளைவிக்கும் மன்னர் பதவியே வேண்டாம் என மகனுக்கு முடி சூட்டி விட்டு திவ்யதேச யாத்திரைக்கு புறப்பட்டார்.
திருப்பதிக்குச் சென்றார் குலசேகரஆழ்வார். அங்கேயே தங்கியிருக்க ஆசை வந்தது. அங்கிருந்தவர்களிடம், 'திருப்பதி மலையில் உள்ள ஏரியில் ஒரு நாரையை பார்த்தேன். அந்த நாரையாக நான் பிறக்கவில்லையே என ஏக்கமாக இருக்கிறது. அவ்வளவு ஏன்... கருவறைக்கு முன்புள்ள வாசல் படியாக இருந்திருந்தால் பெருமாளின் அழகை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் கிடைக்குமே. அந்த படியாக நான் இருக்கவில்லையே. சரி இது எதுவும் வேண்டாம் அந்த பெருமாளின் விருப்பப்படி திருப்பதி மலை மீது ஏதாவது ஒன்றாக இருக்க விரும்புகிறேன். ஆனால் நடக்கவில்லையே என ஏங்கி கண்ணீர் விட்டார் ஆழ்வார்.
'வாசல் படியாக கிடக்கிறேன் என்ற விரும்பியதால் பெருமாள் கோயில் வாசல் படியை 'குலசேகரப்படி' என அழைக்கும் வழக்கம் வந்தது. அந்த ஆழ்வாரைப் போல நான் திருமலையில் ஏதேனும் ஒன்றாக ஆக ஆசைப்படவில்லையே. அதனால் நான் செல்கிறேன் சுவாமி என்றாள் பெண் பிள்ளை” என முடித்தார் கிருஷ்ணவேணி.
“ம்... இப்படி திருமலையில் ஏதேனும் ஒன்றாக ஆசைப்பட்ட குலசேகரரை பார்க்கும் போது காசிக்கு வந்தால் ஏதேனும் ஒரு வகையில் மோட்சம் கிடைக்கும் என நினைக்கும் பக்தர்களை சிவன் சோதித்த கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் கைலாயத்தில் பார்வதி, 'பிரபு... தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காசிக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கைலாயம் அடைவார்கள் என்றால் அந்தளவுக்கு கைலாயம் பெரியதா?' எனக் கேட்டார். இதைக் கேட்டதும் சிவன் ஒரு திருவிளையாடல் மூலம் பார்வதிக்கு புரிய வைக்க முடிவு செய்தார். அதற்காக இருவரும் முதியவராக மாறினர். விஸ்வநாதர் சன்னதியின் பிரதான வாசலில் கிழவியாக மாறி நின்ற பார்வதி, முதியவர் வடிவில் இருந்த சிவனை மடியில் வைத்துக் கொண்டு, 'என் கணவருக்கு நாவறட்சியாக உள்ளது. யாராவது கொஞ்சம் நீரை வாயில் ஊற்றுங்கள்' என கெஞ்சினார்.
கங்கையில் நீராடிய பக்தர்கள் பலர் வந்து கொண்டிருந்தனர். பரிதாபமான இந்தத் தம்பதியை பார்த்ததால் மன அமைதி குலைந்ததாக சிலர் புலம்பினர். முதியவளின் அழுகையை சிலர் அலட்சியம் செய்தனர். கோயில் தரிசனம் முடித்து விட்டு வந்து உதவலாம் என சிலர் எண்ணினர். அப்போது அங்கு திருட வந்த ஒருவன் கிழவியின் குரலை கேட்டு கங்கை நீரை எடுத்து வந்தான்.
அப்போது கிழவி, 'என் கணவர் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அதனால் நீ உன் வாழ்வில் செய்த நல்ல செயல்களைச் சொல்லி நீரை ஊற்று' என்றாள். அவன் தயங்கியபடி 'இதுவரை நல்ல செயல் செய்ததில்லை. இவருக்கு தண்ணீர் கொடுக்கும் இந்த செயல் தான் நான் செய்யும் முதல் நல்ல செயல்' என்றான்.அந்த கணத்தில் முதியவர் எழுந்து உட்கார்ந்தார்.
'மகனே வாழ்க்கை என்பது மற்றவருக்கு சேவை செய்வதற்கே, உண்மையைச் சொல்லி கங்கை நீரை கொடுத்ததால் நீ செய்த தீய செயல்கள் விலக ஆசீர்வதிக்கிறோம். சேவையை விட பலன் தரும் பிரார்த்தனை வேறில்லை' என்றனர். அதே நேரத்தில் யார் கைலாயத்தில் தங்குவார்கள் என்பதை பார்வதிக்கும் புரிய வைத்தார் சிவன்'' என சொல்லி விட்டு கிருஷ்ணவேணியின் பக்கம் திரும்பினார் அமிர்தம்.
“ம்... கடவுளிடம் நாம் நிலைத்திருக்க வேண்டுமெனில் குலசேகரர் போல தன் மீது பற்று இல்லாமல் ஏதேனுமாக இருக்க வேண்டும் அல்லது உதவி தேவைப்படுவோருக்கு அந்த திருடனைப் போல ஏதேனும் செய்ய வேண்டும். சரி, இப்போ உங்க சொந்தக்காரங்க சொத்து தகராறுக்கு வருவோம், சிக்கல் இல்லாமல் சொத்தை பிரிக்க உங்களால முடிஞ்சா ஏதேனும் உதவியை செய்யுங்கள். உறவு வலுப்படட்டும். அன்பே சிவம்'' என புன்னகைத்தார் கிருஷ்ணவேணி.
அவர்கள் வசிக்கும் குடியிருப்பின் விநாயகர் கோயிலில் சங்கட சதுர்த்தி பூஜை தொடங்கியதால் மணி ஒலித்தது. நடை பயிற்சியை முடித்த கையோடு இருவரும் பூஜையில் பங்கேற்க கோயிலை நோக்கி நடந்தனர்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
