ADDED : அக் 16, 2025 01:43 PM

காஞ்சி மஹாபெரியவரின் பக்தையான கமலாவுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து கர்ப்பம் ஆனார். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினார். அதற்காக சுவாமிகளை தரிசிக்க முடிவு செய்தார்.
அந்த சமயத்தில் மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். சுவாமிகளை தரிசித்த போது, 'பெரியவா... ரொம்ப காலத்திற்கு பிறகு இவ ஸ்நானம் செய்யாம இருக்கா... முதல் இரண்டும் பெண் குழந்தைகள். பொறக்கப் போறதாவது புள்ளையா இருக்கணும்னு பெரியவா ஆசியளிக்கணும்' என்றார் உடன் சென்ற கமலாவின் மாமா.
'ஏன்... பெண் வேண்டாமா?' என்றார் மஹாபெரியவர்.
கமலா அமைதியாக நின்றாள். அப்போது, 'எல்லாம் சரி... ஏழு மாசம் ஆச்சே.... இப்ப கேட்டால் என்ன பண்றது?' என்றார் மஹாபெரியவர்.
கமலாவுக்கு கண்ணீர் வந்தது. 'ஏண்டா இவ அழறா?' எனக் கேட்டபடியே கமலாவை தன் அருகில் அழைத்தார். மாம்பழம் ஒன்றை எடுத்து தன் காஷாய வஸ்திரத்தின் (காவி ஆடை) மீது வைத்து மெதுவாக தேய்த்தார். இதுதான் அனுக்ரஹம் என்பது!
கமலாவிடம் அந்த மாம்பழத்தைக் கொடுத்து, 'இதை சாப்பிட்டு விட்டு பண்டரிபுரம் பாண்டுரங்கனை தரிசனம் செய்' என்றார். அப்படியே செய்தார் கமலா. நான்கு நாள் கழித்து முகாமிற்கு வந்த போது தன் பிரார்த்தனையை மீண்டும் நினைவுபடுத்தினார்.
'உனக்குப் புள்ளை குழந்தை பிறந்தால் 'சந்திரமவுலி'ன்னு பேர் வைக்கிறியா?' எனக் கேட்டார் மஹாபெரியவர். ஆஹா... எப்பேர்ப்பட்ட ஆசி. இதற்கு மேல் என்ன வேண்டும் என சந்தோஷமாக தலையாட்டினாள் கமலா. உரிய நேரத்தில் ஆண் குழந்தை பிறக்கவே 'சந்திரமவுலி' எனப் பெயரிட்டார். மஹாபெரியவரின் திருவாக்கு பொய்யாகுமா...
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com