
காஞ்சிபுரம் வந்த பக்தர் ஒருவர் காஞ்சி மஹாபெரியவரை வணங்கி விட்டு, 'பெரியவா... ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் எனக்கு இருக்கு. என் போதாத காலம்... இப்போ கேன்சரும் வந்திருச்சு. ரொம்ப கஷ்டப்படுறேன்' என அழுதார்.
அவரது முகத்தைப் பார்த்த மஹாபெரியவர், 'நான் சொல்றபடி செய்வியா?' எனக் கேட்டார்.
'நிச்சயம் பெரியவா' என்றார்.
'நான் சொல்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். இதுவரை இப்படி ஒரு பழக்கம் உனக்கு இருக்காது' என்றார்.
'என்ன சொன்னாலும் செய்றேன்' என்றார்.
''கிணத்துல நிறைய தண்ணீர் இருக்கு. ஆனால் கிணறு, 'தண்ணீர் என்னுடையது தான்' என சொந்தம் கொண்டாடுவதில்லை. மரத்தில் பழங்கள் பழுக்கின்றன. 'என் மரத்தில் பழுத்தது இது' என எந்த மரமும் சொந்தம் கொண்டாடுவதில்லை. எத்தனையோ செடி, கொடிகளில் காய்கள் காய்க்கின்றன. ஆனால் ஒன்றையும் தனக்குத் தான் எல்லாம் என செடிகள் சொல்வதில்லை.
உயிர்கள் எல்லாம் பிறர் நலனுக்காக வாழ்கின்றன. பூ, காய், பழங்களை மரங்கள் தருகின்றன. இதையே 'பரோபகாரம்' என்கிறோம். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதனுக்கு தர்ம சிந்தனை இருக்கிறதா? எளிய உயிர்கள் எல்லாம் உபகாரம் செய்யும் போது மனிதன் எத்தனை உயர்ந்தவனாக இருக்க வேண்டும்?'
இந்த கேள்விக்கு யாரும் பதில் சொல்லாததால் அங்கு அமைதி நிலவியது.
மீண்டும் பெரியவர், 'உன்கிட்ட பணம் நிறைய இருக்கு. நீயும் இதுவரை அதை அனுபவிக்கவே இல்லே... யாருக்கும் தர்மமும் செய்யவில்லை. முன் ஜென்மத்தில் செய்த பாவம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து உன்னைப் படுத்துகிறது. தர்ம காரியத்திற்கு செலவு பண்ணினா கர்மக்கணக்கு கரைஞ்சு போகும்.
குளம் வெட்டுவது, கோயிலில் திருப்பணி செய்வது, ஏழைகளுக்கு, உறவினருக்கு உதவுவது... என முடிந்தளவுக்கு செய். மருந்து வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நோயாளிகளுக்கு உதவு. யாராவது உன்னிடம் உதவி கேட்டால் வெறுங்கையுடன் அனுப்பாதே... ஏதாவது கொடு. வசதியாக நீ இருப்பதே பிறருக்கு உதவி செய்யத்தான். புரிஞ்சுதா?' என மஹாபெரியவர் கேட்டபோது பக்தர் அழுதார்.
பிறகென்ன... சுவாமிகளின் ஆசியால் மாறியது பக்தரின் மனசு. யார் உதவி கேட்டு வந்தாலும் விருப்பமுடன் செய்தார். நோயின் பிடியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்ந்தார் அந்த பக்தர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும்.
* குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.
* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள்.
* மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com