ADDED : ஜூன் 27, 2025 07:25 AM

ஜூன் 29 ஆனி மகம் - மாணிக்கவாசகர் குருபூஜை
சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். வைகை நதி கரை புரண்டு ஓடும் மதுரையின் அருகே உள்ள திருவாதவூரே இவர் பிறந்த ஊர். அந்தணர் குலத்தில் ஆமாத்தியர் மரபில் சம்புபாதருக்கும், சிவஞானவதிக்கும் பிறந்தவர்.
பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர். பதினாறு வயது ஆவதற்குள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் ஓதுவார். இவரது அறிவாற்றலைக் கண்ட மன்னர் அரிமர்த்தன பாண்டியன் இவரை முதல் அமைச்சர் ஆக்கினார். பிறகு இவருடைய வாழ்வில் சிவன் நடத்திய திருவிளையாடல்கள் ஏராளம். அதையெல்லாம் சொன்னால் இந்தப் பக்கம் போதாது.
மாணிக்கவாசகரின் குருபூஜையை முன்னிட்டு அவர் தந்த அமுதமான திருவாசகத்தை சுவைப்போம். சிவனுக்கு மாணிக்கவாசகர் எழுதிய காதல் கடிதமே திருவாசகம். அதை படித்தால் நம் உள்ளம் உருகும். கண்கள் கலங்கும். அதில் ஒரு பாடலை மட்டும் பார்ப்போம்.
தாமே தமக்குச் சுற்றமும்,
தாமே தமக்கு விதி வகையும்
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?
என்ன மாயம்? இவை போக
கோமான் பண்டைத் தொண்டரொடும்,
அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு
போம் ஆறு அமைமின் பொய் நீக்கி புயங்கன்
ஆள்வான் பொன் அடிக்கே.
ஒருவருக்கு வரும் நன்மை, தீமைக்கு அவர் செய்யும் செயல்களே காரணம். இதனால் அவருக்குச் சிறந்த நண்பரும், உறவினரும், பகைவரும் அவரே என்கிறார் மாணிக்கவாசகர். இதையே 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிறார் கணியன் பூங்குன்றனார். இப்படி இலக்கியமும், சமயமும் ஒரே கருத்தை தான் சொல்கிறது. சரி. இதில் இருந்து எப்படி தப்பிப்பது? அதற்கும் மாணிக்கவாசகர் விடை தருகிறார். அதற்கு முன் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் 'நான்' என்ற ஆணவம் நம்முள் ஒளிந்திருக்கும். இந்த ஆணவம் ஒழிந்தால் வினையும் கிடையாது. பிறவியும் உண்டாகாது. ஆனால் இதை ஒழிப்பது எளிதல்ல. எண்ணில் அடங்காத பல பிறவிகள் நாம் எடுத்தாக வேண்டும். அப்படி எடுத்தால் வினைகள் ஓயலாம். ஆனால் ஆணவம் அழியாது. சரி. இதை யார்தான் அழிப்பது? சிவபெருமான் ஒருவரே. அவர் மனம் வைத்தால் ஒரு நொடியில் ஆணவம் நம்மை விட்டு நீங்கும்.
இதற்கு முதலில் சிவபெருமானின் பெருமைகளை பேசுபவர்களோடு சேர வேண்டும். அப்படி சேர்ந்தால் மனம் செம்மையாகும். பிறகு அர்ப்பணிப்பு உணர்வுடன் தொண்டில் ஈடுபட வேண்டும். இப்படி உடல், மனம், ஆத்மா மூன்றையும் அவருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். இதையே 'ஆத்ம நிவேதனம்' என்பர்.
இப்படி செய்தால் சிவபெருமானே ஆணவத்தை அழித்து நம்மை ஆட்கொள்வார். மாணிக்கவாசகரின் குருபூஜையன்று அவரை வழிபடுவதோடு திருவாசகத்தையும் படியுங்கள். அதில் உள்ள ஒவ்வொரு பாடலையும் படியுங்கள். அப்படி செய்தால் 'தான்' என்னும் அகங்காரம் ஒழியும். இதுவே மாணிக்கவாசகருக்கு செய்யும் உண்மையான குருபூஜை.