ADDED : ஜூன் 25, 2026 10:17 AM

சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லுாரியில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். தினமும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வது அவரது வழக்கம். அதே போல் ஒருநாள் கல்லுாரியில் இருந்து கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாத்திகர் கூட்டம் சுவாமிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் பக்தவத்சலம். காஞ்சி மஹாபெரியவருக்கு நாத்திகர்களால் எந்த இடையூறும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும்படி காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் காவல் துறையினரையும் மீறி அவர்கள் ஓரிடத்தில் ஆக்ரோஷமாக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
காஞ்சி மஹாபெரியவர் வருவதைப் பார்த்ததும் கோஷமிட்டவர்கள், 'தங்களை அவர் வேகமாக கடந்து சென்று விடுவார்' என எண்ணினர். ஆனால் அவரோ அங்கேயே நின்றார். சில நொடியில் கோஷமிட்டவர்கள் அமைதி காத்தனர். அவர்களைப் பார்த்து கையை உயர்த்தி, 'நீங்க நல்லா இருங்கோ' என ஆசீர்வாதம் செய்தார். 'நம்மையும் வாழ்த்துகிறாரே' என திகைத்து நின்றனர்.
காஞ்சி மஹாபெரியவரின் பார்வையில் அனைவரும் ஒன்றே.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
